டோல்கேட் வசூல்.. பெட்ரோல் டீசல் விலை! - ஆகஸ்ட் 7-ம் தேதி மோட்டார் வாகனங்கள் ஸ்டிரைக்! #Strike



Sponsored



மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி மோட்டார் தொழிலாளர்கள், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சி.ஐ.டி.யூ., சார்பில் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் மூர்த்தி, ``மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்திட ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்கு கீழ் கொண்டு வர வேண்டும். டோல்கேட் வசூலைக் கைவிட வேண்டும்.

Sponsored


இன்ஷூரன்ஸ் பெயரில் அடிக்கும் கொள்ளை நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்தும் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் 376 டோல்கேட்கள் உள்ளன. இதில் 62 டோல்கேட் நிர்ணயிக்கப்பட்ட தேதி காலாவதி ஆகியும் தொடர்ந்து இயங்கி வருகிறது. அதேபோல, தமிழ்நாடு முழுவதும் 42 டோல்கேட்டுகள் உள்ளன. இதில் 24 டோல்கேட்டுகள் மத்திய அரசு வசம் உள்ளது. இதில் 10 டோல்கேட்டுகள் காலாவதி ஆகியும் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

Sponsored


இந்தியா முழுவதும் ஆட்டோ, வேன், கார், லாரி, அரசுப் பேருந்து தொழிலாளர்கள், ஒர்க்‌ஷாப் தொழிலாளிகள் என சுமார் 4 கோடி வாகனத் தொழிலாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 16 லட்சம் வாகனங்களில் 2.57 லட்சம் வாகனங்கள் அரசு வாகனங்கள் ஆகும். சாலைமறியல் போராட்டத்துக்காக தமிழ்நாடு மோட்டார் வாகனத் தொழிலாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக்குழு என்ற ஒரு குழுவைத் துவக்கி, மாவட்டம்தோறும் உள்ள வாகனத் தொழிலாளர்கள் சங்கத்தினரை சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறோம்.

மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் 2 சக்கர, 4 சக்கர வாகன ஒர்க் ஷாப்புகள், மோட்டார் வாகனப் பயிற்சிப் பள்ளிகள், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் விற்பனையகத்தினர் என மோட்டார் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரிவினரும் ஒருநாள் வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியலில் கலந்துகொள்ள உள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி ஆட்டோ, லாரி, கார், சிறிய சரக்கு வாகனம் உள்ளிட்ட அனைத்தும் இயங்காது. ஒர்க்‌ஷாப்களும் திறக்கப்படாது.” என்றார்.



Trending Articles

Sponsored