ஓய்வுபெற்றப் பிறகு சஸ்பெண்டு ஆன ஸ்ரீரங்கம் உதவி ஆணையர்!Sponsored 
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் நடந்த மோசடிகள் தொடர்பாக சிலைக் கடத்தல் பிரிவு போலீஸார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில்  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் சோமஸ்கந்தர் ஏலவார் குழலி அம்மன் சிலை செய்ததில் 8.6 கிலோவுக்கு மேல் தங்கம் மோசடி செய்வது தொடர்பாக இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை நேற்றுமுன்தினம் அதிரடியாக கைது செய்தனர்.
 
மேலும், கைது செய்யப்பட்ட கவிதாவின் மேற்பார்வையில்தான் தமிழகத்தின் பல கோயில்களில் தங்க விமானம், தங்கத்தேர், தங்க கோபுரங்கள் செய்யப்பட்டன. பல இடங்களில் பழைமையான சிலைகள் மாற்றப்பட்டு புதிய சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதனால் அவரிடம் கோயில்களில் நடந்த திருப்பணிகளில் 100 கிலோ தங்கத்துக்கு மேல் மோசடிகள் குறித்தும், தொடர்புடைய அதிகாரிகள் குறித்தும் விசாரணை செய்யப்பட்டது. இறுதியாக அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா நேற்று முன்தினம் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 
 
நீதிபதியின் முன்பு கவிதா,  ``தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்” என்று முறையிட்டார்.  அதையடுத்து சிறை மருத்துவர்கள் சிகிச்சையளிக்க நீதிபதி உத்தரவிட்டார். கடந்த இரண்டு நாள்களாக சிறையில் வழங்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததால், தற்போது அவர், திருச்சி அரசு பொது மருத்துவமனையில் கண் சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
அவருக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால் திருச்சி மருத்துவமனை வட்டாரம் பரபரப்பாக உள்ளது. இந்த மோசடி விவகாரத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள கோயில் நிர்வாக அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், திருச்சி சமயபுரத்தில் நடந்த கோயில் புனரமைப்புப் பணிகளில் மோசடி நடந்ததாகவும் சமயபுரம் கோயில் செலவில் வாங்கப்பட்ட கார் உள்ளிட்டவை கவிதா தனது சொந்தப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.
 
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுவரும் நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினவேல்,  இன்று தமிழக அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மோசடி நடந்தது உறுதியானதால் இந்து சமய அறநிலையத் துறை மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சமயபுரம் கோயிலில் முடிதிருத்தம், கும்பாபிஷேகம், கோயில் திருப்பணிகளில் ஊழல் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க, உதவி ஆணையர் ரத்தினவேல் நியமிக்கப்பட்டார். ஆனால், விசாரணையை ரத்தினவேல் முறையாகச் செய்யவில்லை என்றும் சிலருக்கு சாதகமாகச் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து ரத்தினவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரத்தினவேல் கடந்த 31-ம் தேதியே பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டாராம். 
 
ஏற்கெனவே தமிழகத்தில் சிலைக் கடத்தல் முறைகேடுகள் தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரி கவிதா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் அறநிலையத் துறை உதவி ஆணையர் ரத்தினவேல் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored