`எனக்கு மனசு கேட்கல...' - பிரியாணி கடை ஓனரை நெகிழவைத்த மு.க.ஸ்டாலின்  Sponsoredசென்னை வளசரவாக்கத்தில் பிரியாணி கடைக்குச் சென்ற தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கடையின் உரிமையாளர் தமிழ்செல்வன் மற்றும் காயமடைந்த ஊழியர்களிடம் நலம் விசாரித்ததோடு ஆறுதல் கூறினார். 

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் உடல் நலம் குறித்து கடந்த 29-ம் தேதி வெளியான தகவலால் பதற்றமான சூழல் சென்னையில் நிலவியது. சென்னையில் பல கடைகள் அடைக்கப்பட்டன. இந்தச் சமயத்தில் விருகம்பாக்கத்தில் உள்ள பிரபலமான பிரியாணி கடைக்குள் 15 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. அந்தக் கும்பலுக்கும் கடையில் உள்ளவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியது. ஊழியர்களை அந்தக் கும்பல் தாக்கும் வீடியோ வெளியாகி வைரலானது. தாக்கியவர்கள் தி.மு.க நிர்வாகிகள் என்று தெரியவந்தது. இதையடுத்து, பிரியாணி கடை ஊழியர்களைத் தாக்கிய தி.மு.க.வைச் சேர்ந்த யுவராஜ், திவாகர் ஆகியோர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ராசா, மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ ஆகியோர் பிரியாணி கடைக்குச் சென்றனர். அவர்களின் வருகை குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டது. 

Sponsored


பிரியாணி கடையின் உரிமையாளர் தமிழ்செல்வனுக்கு மட்டும் தகவல் கடைசி நேரத்தில் தெரிவிக்கப்பட்டது. கடைக்குச் சென்ற ஸ்டாலின், காயமடைந்த ஊழியர்கள் மற்றும் தமிழ்செல்வனிடம் நலம் விசாரித்தார். எப்படி இருக்கிறீர்கள், நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு, சம்பவத்தன்று என்ன நடந்தது என்று ஸ்டாலின் கேட்டுள்ளார். அதற்கு தமிழ்செல்வன், முழுவிவரத்தையும் கூறியிருக்கிறார். அதன்பிறகு தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். மருத்துவச் செலவுக்கு பணம் தேவையென்றால் கூறுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு தமிழ்செல்வன், வேண்டாம் என்று கூறியுள்ளார். அதற்கு ஸ்டாலின், `எனக்கு மனசு கேட்கல. அதனால்தான் நேரில் வந்து விசாரித்தேன்' என்று உருகியிருக்கிறார். மு.க.ஸ்டாலின், நேரில் வந்து நலம் விசாரித்ததால் தமிழ்செல்வன் நெகிழ்ச்சியடைந்தார். அதுபோல காயமடைந்த ஊழியர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Sponsored


 

இந்த சம்பவம் குறித்து பிரியாணி கடையின் உரிமையாளர் தமிழ்செல்வனிடம் பேசினோம். ``பிரியாணி கடை தாக்குதல் சம்பவம் குறித்து கேள்விபட்டவுடன் ஸ்டாலின் என்னிடம் பேசினார். அப்போது நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து இன்று காலை என்னையும் தாக்குதலில் காயமடைந்த பிரகாஷ், கருணாநிதி, நாகராஜ் ஆகியோரை அறிவாலயத்துக்கு அழைத்தார். அதன்படி நாங்களும் அங்கு சென்றோம். அப்போது, டீ, பிஸ்கட் கொடுத்து நடந்த சம்பவத்தை விசாரித்தார். அவரிடம் அனைத்தையும் தெரிவித்தோம். அதன்பிறகு கடைக்கு வருவதாகக் கூறினார். நான் வேண்டாம் என்று கூறிவிட்டு வந்தேன். ஆனால், அவர் வந்துவிட்டார். ஸ்டாலின் வருகையை சிறிதுகூட நான் எதிர்பார்க்கவில்லை. கடைக்கு வந்த அவர் பிசினஸ் எப்படி போகிறது. கடையில் என்னனென்ன உணவு வகைகள்  தயார் செய்வீர்கள் என்று பாசத்தோடு கேட்டார். அதற்கு எனக்கு சென்னை, சேலம்  ஆகிய இடங்களில் 21 கடைகள் உள்ளன. அடுத்து என்னுடைய சொந்த ஊர் குறித்துக் கேட்டார். சேலம் எடப்பாடி என்று கூறினேன். உடனே பிசினஸை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியதோடு, உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள் என்று கூறினார். காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியைப் பார்க்க அரசியல் தலைவர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில் ஸ்டாலின் என்னுடைய கடைக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார். 

காயமடைந்த பிரகாஷ், தமிழ்செல்வனின் தம்பி. கருணாநிதி, அக்காள் மகன், நாகராஜ் மாமனார். அதில் கருணாநிதியின் பெயரைக் கேட்டதும் ஸ்டாலின் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துள்ளார். அவரிடம் உங்களை எப்படி அடித்தார்கள் என்று கவலையோடு விசாரித்துள்ளார்.Trending Articles

Sponsored