ஸ்டெர்லைட் ஆலையில் ஆசிட் கசிவு விபத்து - 3 பேர் மீது வழக்கு பதிவு!Sponsoredதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று ஏற்பட்ட சல்பியூரிக் ஆசிட் கசிவு விபத்தால் 2 ஒப்பந்தத் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிய வலியுறுத்தி கடந்த மே 28-ம் தேதி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. தொடர்ந்து, மாவட்ட நிர்வாகமும் ஆலையை சீல் வைத்து மூடியது. தொடர்ந்து ஆலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சல்பியூரிக் ஆசிட் சேமிப்புக் கலனில் கசிவு ஏற்பட்டது எனத் தகவல் வெளியானது.

Sponsored


சார் ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவினரின் ஆய்வில் சல்பியூரிக் ஆசிட் சேமிப்புக் கலனில் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. தொடர்ந்து, சல்பியூரிக் ஆசிட் டேங்கர் லாரிகளில் வெளியேற்றப்பட்டது. அத்துடன், பாஸ்பாரிக் ஆசிட்,  ராக் பாஸ்பேட், காப்பர் தாது மணல், ஜிப்சம் மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் ஆகியவையும் டேங்கர் லாரிகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

Sponsored


மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் இப்பணியில், நேற்று ஒப்பந்த பணியாளர்கள் ஆசிட்டுகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சல்பியூரிக் ஆசிட் குழாயைச் சுத்தம் செய்துகொண்டிருக்கும்போது, கலனில் உள்ள காற்று மற்றும் ஆசிட் பிரஷர் இரண்டும் கலந்து திடீரென வெளியானதில் தூத்துக்குடி கிருபைநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மற்றும் அத்திரமரப்பட்டியைச் சேர்ந்த  ஜெய்சங்கர் ஆகிய இருவரும் காயமடைந்தனர். இதில், ஜெயசங்கர் மதுரையில் உள்ள  தனியார் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

அரசின் உத்தரவின்படி மாவட்ட நிர்வாகத்தின் நேரடிக் கண்காணிப்பில் குழு அமைக்கப்பட்டு இப்பணிகள் மேற்பார்வை செய்யப்பட்டு வரும் நிலையில், திடீரென ஏற்பட்ட இந்த விபத்து கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், விபத்து தொடர்பாக, ஸ்டெர்லைட் ஆலையில் இப்பணி்க்காக ஒப்பந்தம் செய்துள்ள, இன்டெக் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் நிறுவனர் பிரேம் குமார், மேற்பார்வையாளர்கள் முத்துராமன் மற்றும் இளவரசன் ஆகியோர் மீது ஊழியர்களுக்குச் சரியான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் ஆபத்தான பணியில் ஈடுபடுத்தியது உட்பட 4 பிரிவுகளில் சிப்காட் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். Trending Articles

Sponsored