தங்கக் கடத்தல்... சிக்கிய விமான அதிகாரிகள்..! விகடன் செய்திக்கு ரியாக்‌ஷன்



Sponsored



'கொடிகட்டிப் பறக்கும் தங்கக் கடத்தல்... திகில் திருச்சி விமான நிலையம்!' எனும் தலைப்பில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நடக்கும் தங்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் குறித்த கட்டுரையை கடந்த ஜூன் மாதம், விகடன் இணைய தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

தங்கம் கடத்தலுக்கான ஏஜென்டுகள், கிராமப்பெண்கள், வேலையில்லா இளைஞர்களைக் குறிவைத்து காய் நகர்த்துவது உள்ளிட்டவை குறித்தும், டிக்கிலோனா, குருவி, கொக்கு எனும் சங்கேத வார்த்தைகள் குறித்தும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். அந்தக் கட்டுரை முடிவில், `திருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் தாராளமாக உள்ளதால், அதன் பின்னணியில் அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர்' என்று பதிவு செய்திருந்தோம். அது தற்போது உண்மையாகி விட்டது.

இதற்கிடையே, திருச்சி விமான நிலையத்தில் நடக்கும் கடத்தல்களைக் கட்டுப்படுத்த நினைத்த மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள், விமான நிலையத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர். இதையடுத்து, கடந்த சில நாட்களாகவே வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் விமானப் பயணிகள் கடத்திவந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கம், போதைப் பொருட்கள், நட்சத்திர ஆமைகள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து, அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

Sponsored


Sponsored


இந்நிலையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, நேற்று திருச்சி வந்த 'மலிண்டோ' ஏர் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாகச் சென்னை மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். பயணிகளின் உடைமைகள், பொருட்கள் உள்ளிட்டவற்றை சல்லடைப் போட்டு சோதனை மேற்கொண்டதில், தங்கம் எதுவும் சிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, அந்த விமானத்துக்குள் சென்று அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விமானப் பணிப்பெண்கள் சிலரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்ததால் அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையைத் தீவிரப்படுத்தியதன் பலனாக, கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்திற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான 46 தங்கக் கட்டிகள் மற்றும் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுக் கரன்ஸிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்தத் தங்கத்தைக் கைப்பற்றிய அதிகாரிகள், பணிப்பெண்களைச் சென்னைக்கு அழைத்து வந்து, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

கடத்தல் நகைகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, அவற்றை யார் கொடுத்து அனுப்பியது என்பன போன்ற கேள்விகளைக் கேட்டு, விசாரணையில் ஈடுபட்டனர். ஆனால், உண்மையில் விமான நிலைய ஊழியர்கள், மலேசியாவிலிருந்து வந்த இரண்டு பயணிகள் என ஏழு பேர் விசாரணை வளையத்துக்குள் வந்தார்கள்.

விமான நிலையத்தில் செயல்வடும் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்களான புதுக்கோட்டையைச் சேர்ந்த முகம்மது ஷெரிஃப், தஞ்சாவூரைச் சேர்ந்த பிரதீப் செளரிராஜ், தேனியைச் சேர்ந்த மகிமை பிரபு ஆகிய மூன்று பேரைக் கைது செய்து திருச்சி முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 14-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்தக் கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில்தான், வேறு யாரெல்லாம் கைதுசெய்யப்படுவார்கள் என்பது தெரியவரும். 

திருச்சி விமான நிலைய ஊழியர்கள், விமானப் பணிப் பெண்களுக்கும் தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலால், விமான நிலையத்தில் மிகுந்த பரபரப்பு நிலவுகிறது.



Trending Articles

Sponsored