`ஆவணங்களைத் தாக்கல்செய்கிறேன்; அதன்பிறகு முடிவெடுங்கள்'- கவிதாவுக்கு ஜாமீன் வழங்க பொன்.மாணிக்கவேல் எதிர்ப்பு



காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் சிலை மோசடி வழக்கில், கூடுதல் ஆணையர் கவிதா கைதுசெய்யப்பட்டது பற்றிய ஆவணங்களைத் தாக்கல்செய்ய ஐ.ஜி., பொன்.மாணிக்கவேலுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Sponsored


தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைக் கடத்தல் வழக்குகளையும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்துவருகிறது. இந்தக் குழு, கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான பல சிலைகளைக் கண்டுபிடித்துள்ளது. பெரும் சர்ச்சையைக் கிளப்பிய பழநி முருகன் கோயில் சிலை முறைகேடு வழக்கையும் ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் அடங்கிய குழு விசாரணை நடத்திவந்தது. இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் சிலை மோசடி வழக்கில், அறநிலையத்துறை திருப்பணிப் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா உட்பட ஆறு பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு வந்தது. அதனடிப்படையில் கவிதா, கடந்த ஜூலை 31-ம் தேதி காலை கைது செய்யப்பட்டு, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 

Sponsored


Sponsored


இந்த நிலையில், ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கவிதா மனுத்தாக்கல் செய்திருந்தார். சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்துவரும் சிறப்பு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக, இதே வழக்கில் ஏன் அவ்வளவு அவசரமாகக் கைதுசெய்ய வேண்டும். அதற்காக விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி இன்று ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நேரில் ஆஜரானார். கவிதா கைது செய்யப்பட்டதுக்கான ஆவணங்களை நாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தயாராக உள்ளோம். அதற்குப் பின் கவிதாவுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக முடிவெடுங்கள் எனக் கூறினார். 

அப்போது கவிதா தரப்பு வழக்கறிஞர், கவிதாவை பெண் என்ற முறையிலும், அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதன் அடிப்படையிலும் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், கவிதாவை கைதுசெய்யும் முன், சம்மன் அனுப்பி உரிய விளக்கம் கேட்காமல் நேரடியாகக் கைதுசெய்யப்பட்டது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர். 

அப்போது, ``கவிதா மீது தொடர்ந்து புகார்கள் வந்தது. அனைத்துப் புகார்களையும் ஓய்வின்றி ஆய்வுசெய்த பின்னரே, அவரைக் கைது செய்தோம். கவிதா முறைகேட்டில் ஈடுபட்டதுக்கான அனைத்து ஆதாரங்களும் தங்களிடம் இருக்கின்றன. அதனால், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது'' என்று பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் கூறினார். மேலும், இந்த ஆதாரங்களைத் தாக்கல்செய்ய ஒருவாரம் கால அவகாசம் வேண்டும் எனவும் கேட்டார். ஆனால், ஒரு வார கால அவகாசம் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், வரும் திங்கள்கிழமை இதற்கான ஆவணங்களைத் தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். 

முன்னதாக, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேலுவிடம் இருந்த சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாறியுள்ள தமிழக அரசின் முடிவை எதிர்த்து, டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். மனுவாகத் தாக்கல் செய்தால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். 



Trending Articles

Sponsored