அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர் அதிரடி பணி நீக்கம்!Sponsoredஅண்ணா பல்கலைக்கழகத்தில், விடைத்தாள் மறுகூட்டலின்போது லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர் விஜயகுமார் அதிரடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 500-க்கும் மேற்பட்ட உறுப்புக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. அந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள், அண்ணா பல்கலைக்கழகம் மூலமாகவே நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மறுமதிப்பீடு நடந்தது. அதில், மறுகூட்டலின்போது தேர்வு எழுதிய மாணவர்களிடம் தலா 10,000 ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு கூடுதல் மதிப்பெண்கள் அளித்ததை, உரிய ஆவணங்களோடு மாணவி ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணையை மேற்கொண்டனர். அதில், கடந்த ஆண்டு தேர்வு எழுதிய 3,02,380 மாணவர்கள் விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்திருந்ததும், அதில் 73,733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதும், குறிப்பாக 16,636 பேர் அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்பதும் தெரிய வந்தது. 

Sponsored


அதையடுத்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உமா, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) விஜயகுமார், உதவிப் பேராசிரியர் (கணக்கு) சிவக்குமார் உள்ளிட்ட 10 பேர்மீது வழக்குப்பதிவு செய்து, லஞ்ச ஒழிப்புப் போலீஸ் விசாரணையை மேற்கொண்டுவந்தது. தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் விஜயகுமார் மற்றும் உதவிப் பேராசிரியர் சிவக்குமார் இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை, இருவரின் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டது. நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது. சோதனையின்போது, திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரியில் எத்தனை மாணவர்களிடம், எவ்வளவு தொகை வாங்கினீர்கள் என்று பல கேள்விகளைக் கேட்டு துளைத்தெடுத்தனர் அதிகாரிகள். இறுதியாக, இருவர் வீடுகளில் இருந்தும் பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றிக்கொண்டு, சென்னை சென்றனர். இந்நிலையில்தான் திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) விஜயகுமாரை அதிரடியாகப் பணிநீக்கம்செய்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது அண்ணா பல்கலைக்கழகம்.

Sponsored
Trending Articles

Sponsored