போலீஸ் நடத்திய ரகசிய வேட்டை! சிக்கிக்கொண்ட 38 சூதாட்டக்காரர்கள்



கிருஷ்ணகிரி தனிப்படை போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில், சூதாட்டத்தில் ஈடுபட்ட 38 பேர் ஒரே நாளில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடமிருந்து ரூ.1,54,000 ரொக்கப் பணமும் 26 செல்போன்களும்15 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். 

Sponsored


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மனமகிழ் மன்றம், மாந்தோப்பு, மலைக்கோயில்களில் அடிவாரம், வீடுகளில் சூதாட்டம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்தச் சூதாட்டங்களில் கூலித் தொழிலாளிகள், விவசாயிகள் எனப் பல அப்பாவிகள் சிக்கி தங்கள் வாழ்க்கையையே தொலைத்துவிடுகின்றனர். இந்தச் சூதாட்டத்தால் அன்றாடம் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பணத்தை வீட்டுக்குக் கொடுக்காமல், சூதாட்டத்தில் பணத்தை இழந்து பல குடும்பம் வறுமையில் வாடுகிறது. இன்னும் சிலர் சூதாட்டத்துக்கு அடிமையாகி மனைவியின் கழுத்தில் இருக்கும் தாலியைக்கூட விட்டு வைக்காமல் சூதாட்டத்தில் இழப்பது போன்ற கொடுமைகள் அதிகளவு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. குடும்பங்களைக் கெடுக்கும் இதுபோன்ற சூதாட்டங்களைக் கண்காணித்து தடுக்க வேண்டிய போலீஸார் மாமூல் வாங்கிக் கொண்டு மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. 

Sponsored


குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்திக்குப்பம், போச்சம்பள்ளி, பாரூர் பகுதியில் லாட்டரி, லங்கர் கட்டை மற்றும் 13-வது சீட்டு எனப்படும் சூதாட்டங்கள் அப்பாவி மக்களைக் குறி வைத்து நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூதாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் மாவட்ட காவல்துறைக்கு கோரிக்கை வைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி மகேஸ்குமார் புகார்கள் மீது தனிக் கவனம் செலுத்தி, தனிப்படை அமைத்து, மாவட்டம் முழுவதும் ரகசிய வேட்டை நடத்தியதில், கந்திக்குப்பம் அடுத்த முருக்கம்பள்ளம் ராம்நகர் பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 26 பேரை டி.எஸ்.பி கோகிலா தலைமையிலான தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து, ரூ.1,54,000 ரொக்கப் பணமும் 26 செல்போன்கள், 15 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

Sponsored


இதேபோல போச்சம்பள்ளி அடுத்துள்ள சந்தூரில் மாட்டுக்கொட்டகையில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த 6 பேரை உதவி ஆய்வாளர் வசந்தி அதிரடியாகக் கைது செய்துள்ளார். பாரூர் உதவி ஆய்வாளர் சம்பூரணம் காரம்பூர் பகுதியில் சூதாடிக்கொண்டிருந்த 6 பேரைக் கைது செய்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் பணம் வைத்துச் சூதாடியதாக 38 பேரைக் கைது செய்துள்ள சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Trending Articles

Sponsored