8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு : மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 48 மணி நேரப் போராட்டம்!



எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 48 மணி நேர போராட்டம் நடைபெற்றது.

Sponsored


இது குறித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``இயற்கை வளங்களையும் விவசாய நிலங்களையும் நீர்நிலைகளையும் அழித்து உருவாக்கப்பட உள்ள சேலம்-சென்னை எட்டு வழிச் சாலையைக் கைவிட வேண்டுமெனவும் இதற்காக நிலம் கையகப்படுத்துவது என்ற பெயரில் விவசாயிகளையும் கிராமப்புற மக்களையும் அரக்கத்தனமாக மிரட்டி வரும் அராஜக நடவடிக்கைகளை கைவிட வேண்டுமெனவும் வற்புறுத்தி திருவண்ணாமலையிலிருந்து சேலம் வரை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைப்பயணம் நடத்துவது எனத் திட்டமிட்டிருந்தது. அதன் அடிப்படையில், திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி காலை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வசிங், பெ.சண்முகம், ஏ.லாசர், க.கனகராஜ் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் ப.சுந்தரராஜன், ஜி.ஆனந்தன், டி.ரவீந்திரன், பி.சுகந்தி, என்.அமிர்தம், ஐ.ஆறுமுக நயினார், என்.பாண்டி, எஸ்.கண்ணன், டி.ஏழுமலை, இ.சங்கர், ஏ.குமார், எம்.சிவக்குமார், பி.ராமமூர்த்தி, என்.சுப்பிரமணியன், வி.பிரமிளா, பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெயராமன் என 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நடைப்பயணம் தொடங்கியது. உடனடியாக, காவல்துறை நடைப்பயணத்தை மேற்கொண்டவர்களைத் தடுத்து வலுக்கட்டாயமாகக் கைது செய்து, வாகனங்களில் ஏற்றி திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தது.

Sponsored


Sponsored



அன்று இரவு (1.8.2018) 12 மணி அளவில் கைது செய்யப்பட்ட ஆண்களையும் பெண்களையும் விடுதலை செய்தவுடன் அந்த இடத்திலிருந்தே மீண்டும் நடைப்பயணம் தொடங்கியது. மீண்டும் காவல்துறை நடைப்பயணம் மேற்கொண்ட தலைவர்களையும் 13 பெண்கள் உட்பட 90 பேர்களையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மீண்டும் விடுதலை செய்தாலும், எங்களின் நடைப்பயணம் தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கைது செய்த 90 பேரையும் ஆகஸ்ட் 2-ம் தேதி இரவு 11 மணி அளவில் நீதித்துறை நடுவர்-2 திருவண்ணாமலை முன்பு ஆஜர்படுத்தி ரிமாண்டு செய்ய வேண்டுமென காவல்துறை கோரியது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நீதிபதி முன்பு, சி.பி.ஐ (எம்) சார்பில் அபிராமன், எம்.ஜெயபாலன், சிபிஐ சார்பில் வி.முத்தையன், ம.தி.மு.க சார்பில் எஸ்.எல்.பாபு, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் எஸ்.கண்ணன், ஐ.சேகர், எஸ்.பழனி ஆகிய வழக்கறிஞர்கள் ஆஜராகி, “பதிவு செய்யப்பட்ட வழக்கு சட்டத்துக்குப் புறம்பானது எனவும், நடைப்பயணத்துக்கு நாங்கள் முறையான அனுமதி கேட்டு 23.7.2018 அன்று காவல்துறை கூடுதல் இயக்குநரிடம் மனு கொடுத்தோம். அவரது உத்தரவின் அடிப்படையில், அன்றிரவே, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளருக்கு நடைப்பயணத்துக்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தோம்.

உடனடியாகப் பதில் தெரிவிக்காமல், 29.7.2018 அன்று இரவு திருவண்ணாமலை காவல்துறை ஆய்வாளர் மூலம் 1.8.2018 அன்று நடைபெற உள்ள தொடக்க நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து கடிதம் வழங்கப்பட்டது. எனவே, நடைப்பயணத்துக்கு எழுத்துபூர்வமாக அனுமதி மறுக்கப்படாத நிலையில், நடைப்பயணத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தது சட்டத்துக்குப் புறம்பானதாகும். இவ்வாறு கைது செய்தவர்களைச் சிறையில் அடைத்ததும் நீதிமன்றததில் ஆஜர்படுத்தியுள்ளதும் சட்டத்துக்குப் புறம்பானதாகும். எனவே, சட்டவிதிகளுக்கு புறம்பான இந்த வழக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக் கூடாது” என உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உள்ளிட்ட பல தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வழக்கறிஞர்கள் அழுத்தமாக வாதிட்டார்கள்.

இவ்வாதங்களை நிராகரிக்க முடியாத நீதிபதி, நள்ளிரவு ஆகிவிட்ட சூழ்நிலையில், வழக்கறிஞர்கள் தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை திறந்த கோர்ட்டில் உத்தரவு பிறப்பிப்பதாகவும் அதற்கிடையில், கைதாகியுள்ளவர்கள் சார்பில் ஜாமீன் மனு சமர்ப்பிக்கப்பட்டால் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்வதாகவும் நீதிபதி தெரிவித்தார்.பதிவு செய்யப்பட்ட வழக்கே தவறானதாக இருக்கும்போது, நாங்கள் ஜாமீன் மனு சமர்ப்பிக்க விரும்பவில்லை எனவும், நீதிமன்றம் மத்திய சிறைக்கு எங்களை ரிமாண்ட செய்தால், சிறைக்குச் செல்ல தயாராக இருப்பதாகவும் கைதாகியுள்ளவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கை தள்ளுபடி செய்து எங்களை விடுதலை செய்வதே சட்டப்படி சரியானது என மீண்டும் வற்புறுத்தப்பட்டது.

நள்ளிரவில் சுமார் இரண்டரை மணி நேர வாதத்திற்கு பின்னர், நமது வாதத்தை ஏற்றுக்கொண்டு, காவல்துறை தாக்கல் செய்த வழக்கில் முகாந்திரம் ஏதும் இல்லை என்பதால், கைதானவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்தார். இதன் மூலம், கடந்த இரண்டு நாட்களாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த  அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். தொடர்ந்து எட்டு வழிச்சாலையை எதிர்த்து நடைபயண இயக்கத்தை முன்னெடுக்க  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்.  மேலும், இச்சாலை அமைக்கும் பணியினை மத்திய-மாநில அரசுகள் கைவிடும் வரை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் தொடரும் என்பதையும், இத்தகைய போராட்டங்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் பேராதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

நடைபெற்ற இப்போராட்டத்திற்கு ஆதரவாகவும், தமிழக அரசின் அடக்குமுறையை கண்டித்தும் அறிக்கை வெளியிட்ட  திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர்களுக்கும், இந்த வழக்கில் இரவு பகல் பாராமல் உழைத்த வழக்கறிஞர்களுக்கும், எட்டுவழி பசுமைச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கும், தமிழகம் முழுவதும் ஆதரவு தெரிவித்த பல்வேறு அமைப்புகளுக்கும், அரசின் நடவடிக்கையினை கண்டித்து கண்டன இயக்கம் நடத்திய அனைத்து அமைப்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.



Trending Articles

Sponsored