முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழப்பு - உறவினர்கள் மறியல்!Sponsoredதிருட்டு வழக்கு ஒன்றில் முதுகுளத்தூர் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் ஒருவர் உயிரிழந்ததால் அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


 

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை பகுதியில் வசித்து வருபவர் மகாதேவன். இரு தினங்களுக்கு முன் இவரது வீட்டில் இருந்த 16 பவுன் நகை, 13,000 ரொக்கம் மற்றும் இரு ஏ.டி.எம் கார்டுகள் திருடு போயின. மேலும், இந்த இரு ஏ.டி.எம் கார்டுகளில் இருந்தும் ரூ. 1.4 லட்சம் ரூபாயும் எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மகாதேவன் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் அளித்து இருந்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களைப் பிடித்துச் சென்ற போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின்போது இந்தத் திருட்டு சம்பவத்தில் தொடர்பில்லை என ஒருவரை காவல் நிலையத்திலிருந்து விடுவித்துள்ளனர். மற்ற இரு வாலிபர்களிடமும் தொடர் விசாரணை நடத்தி வந்த நிலையில் திருட்டில் ஈடுபட்டதை இருவரும் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

Sponsored


இந்நிலையில், திருட்டு நகையை மறைத்து வைத்திருந்த பகுதிக்குப் பிடிபட்ட வாலிபர்கள் இருவரில் ஒருவரான மணிகண்டன் (27) என்பவரை போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மணிகண்டனுக்கு வலிப்பு ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மணிகண்டன் மருத்துவமனைக்குப் போகும் முன்னரே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை பரமக்குடி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Sponsored


இந்நிலையில் மணிகண்டன் உயிரிழந்த தகவல் அறிந்த அவரின் உறவினர்கள், மணிகண்டன் இறப்புக்குக் காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதுகுளத்தூர்-பரமக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ஏ.டி.எஸ்.பி வெள்ளைத்துரை தலைமையில் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. Trending Articles

Sponsored