`புதர் மண்டிக்கிடக்கும் பாசனக் கால்வாய்கள்' - கடைமடைப் பகுதிக்கு வந்துசேராத காவிரி!



Sponsored



இந்த ஆண்டு வருண பகவான் தாராளமாய் மழையை வாரி வழங்கி காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடியது. ஆனால், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தாலும் முறைகேடுகளாலும் கடைமடைப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள். 

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை அதிகமாக பொழியும் என முன் கூட்டியே எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஜூன் 12-ம் தேதிக்கு முன்பாகவே காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், கிளை வாய்க்கால்கள், ஏரி, குளங்களை தூர் வாரி தயார் நிலையில் வைக்க வேண்டும் என விவசாய சங்கத் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். ஆனால், இதைப் பற்றி தமிழக ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கொஞ்சம்கூட கண்டுகொள்ளவே இல்லை. இதில் பல முறைகேடுகளும் நிகழ்ந்தன. இந்நிலையில்தான் எதிர்பார்த்தது போலவே கர்நாடகாவில் அதிகளவில் மழைபொழிந்து வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் உருவானதால் அங்குள்ள அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரிநீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை தொட்ட பிறகும் கர்நாடகாவிலிருந்து தண்ணீர் வந்துகொண்டே இருந்தது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 75,000 கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டது. 

Sponsored


இதையடுத்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகியவைகளில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், இந்த தண்ணீர் கடைமடைப் பகுதிகளுக்கு இன்னும் வந்து சேரவில்லை. இதனால் இந்த ஆண்டும் தங்களது நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரத்தநாடு பகுதி விவசாயிகள் வேதனையோடு பேசுகிறார்கள். குறிப்பாக ஒரத்தநாடு, பாப்பாநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டையின் ஒரு சில பகுதிகளில் உள்ள கடைமடை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கால்வாய்களில் ஆகாயத்தாமரை, காட்டாமணக்கு போன்ற களைச்செடிகள் அதிகளவில் மண்டிக்கிடப்பதால் தண்ணீர் வரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள ஏரி, குளங்களும் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இதுகுறித்துப் பேசிய விவசாயிகள், ``தூர் வாரும் பணிகள் முறையாகவும் முழுமையாகவும் நடைபெறாததால்தான் தங்களுக்கு இந்த அவல நிலை உருவாகியுள்ளது. எங்களுக்கு ஏதேனும் நல்லது நடந்துவிடக் கூடாது என்பதில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உறுதியாக இருக்கிறார்கள்" எனக் கொந்தளிக்கிறார்கள். மேலும், அதிகாரிகளின் இந்தச் செயல்களைப் பார்க்கும்போது, `சாமி வரம் கொடுத்தாலும் பூசாரிக்கு மனசு வரமாட்டேங்குது' என்கிற சொல்லாடல் நினைவுக்கு வருகிறது எனக் கூறினர். 

Sponsored




Trending Articles

Sponsored