சி.பி.ஐ-க்கு மாறிய சிலைக் கடத்தல்... ஸ்டாலின் முதல் வைகோ வரை என்ன சொல்கிறார்கள்?Sponsoredமிழர்களின் தொன்மையையும் கலைத்திறனையும் உலகெங்கும் கொண்டுசென்றதில் சிற்பங்களுக்கும் சிலைகளுக்கும் மிகமுக்கியப் பங்குண்டு. அப்படிப் புராதனமான சிலைகளை வெளிநாடுகளுக்குக் கடத்திச் செல்வதைத் தடுக்கவே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது, சிலைக் கடத்தல் போலீஸார் விசாரித்து வரும் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றி அரசாணை பிறப்பித்திருக்கிறது தமிழக அரசு. இதற்கு தமிழக அரசியல்  தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு கடந்த 1-ம் தேதி  விசாரணைக்கு வந்தபோது  சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ-க்கு மாற்றி தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றுவதை அரசாணையாகவே வெளியிட்டது தமிழக அரசு.   

Sponsored


ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் எந்தவித அறிக்கையையும் அரசுக்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் அவரது செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்தது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியிருக்கிறது. சிலைக் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக  இதை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Sponsored


பெயர் குறிப்பிட விரும்பாத அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ``சிலைக் கடத்தல் வழக்குகளில் உண்மைத்தன்மையை சி.பி.ஐ வந்தால்தான் கண்டுபிடிக்க முடியும். தேவையில்லாத பொய்க் குற்றச்சாட்டுகளை ஆதாரமே இல்லாமல் சொல்லும் தற்போதைய சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகளின் சுயரூபம் தெரியவரும். அதனால்தான் அறநிலையத்துறையில் உள்ள அதிகாரிகள் அனைவரும் சி.பி.ஐ-க்கு வழக்கு மாறுவதை ஒருமனதாக வரவேற்கிறோம்'' என்றார்.

சிலைக் கடத்தல் குறித்த நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்கக் கடந்த ஆண்டு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலை நியமித்து உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்பிறகு கடந்த ஓராண்டில் மட்டும் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை மீட்டிருக்கிறது. இவர்களின் செயல்பாடுகள் சரியில்லை என்றுதான் வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டுக்குத்  தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளர். சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு இருக்கும்போதே, சி.பி.ஐ-க்கு வழக்குகளை மாற்றியிருப்பது ஏன் என்ற கேள்வியையும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் முன்வைக்கின்றனர்.

ஸ்டாலின்: 

சிலைக் கடத்தல் வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்படுவதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சிலைத் திருட்டு வழக்குகளை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க அரசு கொள்கை முடிவு எடுத்திருக்கிறது என்று அ.தி.மு.க அரசு உயர் நீதிமன்றத்தின் முன்பு தெரிவித்திருப்பது வியப்பளிக்கிறது. அதிலும் குறிப்பாக, உயர் நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வரும் ஒரு விசாரணையில் அ.தி.மு.க அரசு இப்படியொரு திடீர் நிலைப்பாட்டை எடுத்திருப்பது உள்நோக்கம் நிறைந்ததாகவே தெரிகிறது.  

வைகோ:

பொன்.மாணிக்கவேலுக்கும், எனக்கும் நட்போ, பரிச்சயமோ கிடையாது. ஆனால், அவரது நேர்மை, நாணயம், திறமை, உண்மை, துணிச்சலை நான் நன்கு அறிவேன். வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட சிலைகளை மீட்டுக்கொண்டுவந்தவர். அரசுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் சரியாகச் செயல்படவில்லை என்றும் கூறி சிலைக் கடத்தல் விசாரணையை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருப்பது அப்பன் குதிருக்குள் இல்லை என்ற பழமொழியை நினைவூட்டுகிறது. இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெற இருக்கும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் சிலைக் கடத்தல் விசாரணையைத் தொடர்ந்து நடத்தத் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். நீதிமன்றத்தில் தொடுத்த மனுவைத் திரும்பப் பெற வேண்டும்.

அன்புமணி ராமதாஸ்: 

தன் அதிகாரி மீதே நம்பிக்கை இல்லை என்று எந்த அரசும் சொல்லக்கூடாது. பொன்.மாணிக்கவேல் அப்பழுக்கற்றவர். இவர் பொறுப்பேற்ற பிறகுதான் பல சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வழக்குகள் சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டால் மூன்றே மாதத்தில் முடங்கிவிடும். எனவே, தமிழக அரசு வழக்குகளை மாற்றுவதைக் கைவிட வேண்டும்.

அமைச்சர் ஜெயக்குமார்:

தமிழக அரசில் பணிபுரியும் ஓர் அதிகாரியின் செயல்பாடு திருப்தியளிக்கவில்லை என்று தமிழக அரசு கூறியிருப்பது தமிழக அரசின் கீழ் பணியுரியும் அனைத்து அதிகாரிகளையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் ''சிலைக் கடத்தல் என்பது சர்வதேச பிரச்னை. தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானதுதான். அதில் யாருக்கும் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால், சர்வதேச அளவில் உள்ள பிரச்சனைக்கு சி.பி.ஐ-தான் நாட வேண்டிய சூழலில் அது சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது'' அரசு தரப்பு விளக்கத்தைப்பதிவு செய்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழிசை செளந்தராஜன்:

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்தான் செயல்பட்டுவருகின்றன. கோயில்களை அறநிலையத்துறையிடம் இருந்து மீட்டு தனிநபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லிவரும் பா.ஜ.க.வும் சிலைக் கடத்தல் வழக்குகள் சி.பி.ஐ-க்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

``குஜராத்தில் இருந்து ராஜ ராஜசோழன் சிலையை மீட்டு வந்தபோது அமைச்சரே நேரடியாகச் சென்று வரவேற்றுப் பாராட்டினார். இப்போது திடீரென்று விசாரணை சரி இல்லை என்பது யாரையோ காப்பாற்ற நினைப்பதாகவே தோன்றுகிறது. இப்போது திடீரென்று சி.பி.ஐ விசாரணை என்பது வழக்கை முடக்குவதற்கான முயற்சியாகவே மக்கள் கருதுகிறார்கள். இப்படி ஒரு திடீர் முடிவுக்கு அரசு செல்ல என்ன காரணம்? நமது காவல்துறை மீது நம்பிக்கை இல்லையா?'' என்று தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தராஜன் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

``பொன்.மாணிக்கவேலை இந்த வழக்கு விசாரணைக்கு நியமித்தது கோர்ட்டு, அவரிடம் தமிழக அரசு அறிக்கை கேட்பதே தவறு. அவர் அறிக்கையைக் கோர்ட்டுக்குத்தான் கொடுப்பார். சி.பி.ஐ-க்கு மாற்றுவது வழக்கை முடக்கச் செய்யும்'' என்று பி.ஜே.பி தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதும் குறிப்பிடப்படவேண்டியதே.Trending Articles

Sponsored