மகன் கவனிக்காததால் வேதனை! விபரீத முடிவு எடுத்த வயதான பெற்றோர்Sponsoredகடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே பெற்ற மகன் கவனிக்காததால் தன் வீட்டுக்கு அருகில் புதைகுழி தோண்டி உயிருடன் சமாதியாக முடிவு செய்த வயதான தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பரதம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சாரங்கபாணி (83). இவரின் மனைவி தனலெட்சுமி (70). இவர்களுக்கு பாலசுப்பிரமணியன் என்ற மகனும், சாந்தகுமாரி என்ற மகளும் உள்ளனர். மகள் சாந்தகுமாரி திருமணம் செய்து அவரின் கணவருடன் கத்தாழை கிராமத்தில் வசித்து வருகிறார். பாலசுப்பிரமணியன் தன் மனைவி குழந்தைகளுடன் குறிஞ்சிப்பாடியில் வசித்து வருகிறார். சாரங்கபாணி, 50 ஆண்டுகளுக்கு முன்பு தனக்குச் சொந்தமான பழையபெருமாத்தூரில் இருந்த நிலம், வீடு ஆகியவற்றை நெய்வேலி என்.எல்.சி நிறுவன சுரங்க விரிவாக்கத்துக்காக கொடுத்துள்ளார். இதற்கு உரிய இழப்பீடு, மாற்று மனை ஆகியவற்றை என்.எல்.சி நிர்வாகம் சரிவர வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. பரதம்பட்டு கிராமத்தில் இருந்த நிலத்தையும் அவரின் மகன் பாலசுப்பிரமணியன் கடந்த 3 மாதம் முன்பு விற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 3 மாதமாக மகன் பாலசுப்பிரமணியன், சாரங்கபாணியையும், தாய் தனலெட்சுமியையும் கவனிக்கவில்லை. இதனால் அவர்கள் செலவுக்குப் பணம், உணவு என எதுவும் இல்லாமல் வயதான காலத்தில் பசியும் பட்டினியுமாக அவதிப்பட்டு வந்துள்ளனர்.

Sponsored


இதனால் வயதான தம்பதி தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தனர். அதனையடுத்து நேற்று சாரங்கபாணி தன் வீட்டுக்கு முன்புறம் உயிருடன் சமாதி ஆக குழி தோண்டியுள்ளார். இதுகுறித்து சாரங்கபாணி உறவினர்களுக்கு போன் செய்து மகன் கவனிக்காததால் பசி, பட்டினியுடன் வாழ முடியவில்லை. இதனால் வீட்டுக்கு முன்புறம் புதை குழி தோண்டி அதில் இறங்கி, எங்கள் மீது நாங்களே மண்ணை போட்டு உயிருடன் சமாதி ஆக முடிவு செய்துள்ளோம் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து உறவினர்கள் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். உடன் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சாரங்கபாணியை காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவரின் மகன் பாலசுப்பிரமணியனை அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.  பெற்ற மகன் கவனிக்காததால் வயதான தம்பதி உயிருடன் சமாதி ஆக புதை குழி தோண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Sponsored
Trending Articles

Sponsored