7 மார்க் 70 ஆனது... 24 மார்க் 94... அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்களின் லம்ப் டீலிங்!ஞ்ச ஒழிப்புத் துறை, அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் வீடுகளில் கடந்த இரண்டு நாள்களாக சோதனை நடத்திவருகிறது. இதில் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்த மாணவர் ஒருவரின் மதிப்பெண் 7-லிருந்தது 70-தாகவும், மற்றொரு மாணவரின் மதிப்பெண் 24-லிருந்து 94-ஆகவும் மாற்றியதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. 

`அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மறுமதிப்பீடு செய்ததில் பெரிய அளவிலான முறைகேடு செய்திருக்கிறார்கள்' என்று லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் மாணவர்களிடம் ஒவ்வொரு தேர்வுத்தாளுக்கும் 10,000 ரூபாய் பெற்றுக்கொண்டு பலரையும் தேர்ச்சி பெறவைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Sponsored


Sponsored


லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் கட்டமாக, குற்றம்சாட்டப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு முன்னாள் அதிகாரி உமா, திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரியில் முதல்வர் பொறுப்பு வகித்த உதவி பேராசிரியர் விஜயகுமார், அதே கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றும் சிவகுமார் ஆகியோரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆதாரங்களைச் சேகரித்துவருகிறது. 

Sponsored


இதில், பேராசிரியை உமா வீட்டில் பணம், நகை போன்ற பொருள்கள் கைப்பற்றப்படவில்லை என்றாலும், அசையா சொத்துகள் வாங்கியதற்கான ஆவணங்கள் கைப்பற்றியிருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. விஜயகுமார் வீட்டிலிருந்து 64 ஆவணங்களையும், உதவி பேராசிரியர் சிவகுமார் வீட்டிலிருந்து 14 ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறை கைப்பற்றியுள்ளது. இதில் மறுமதிப்பீடுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விவரங்களும் அடங்கியுள்ளன. ஒரு மாணவனின் 7 மதிப்பெண்ணை மறுமதிப்பீட்டில் 70 ஆக மாற்றப்பட்டிருப்பதையும், மற்றொரு மாணவனின் 24 மதிப்பெண்ணை 94 மதிப்பெண்ணாக மாற்றியிருப்பதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது. 

இதன் அடிப்படையில் தற்போது 50-க்கும் மேற்பட்ட மாணவர்களிடமும் விசாரணை தொடங்கியுள்ளது லஞ்ச ஒழிப்புத் துறை. இதில் அதிக அளவில் அரியர் வைத்திருந்து ஒரே முறையில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலையும் சேகரித்துவருகிறது. ஒரு மாணவர் 17 பாடங்களில் அரியர் வைத்திருந்து, ஒரே முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்ற விவரமும் கிடைத்திருக்கிறது. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் பேராசிரியர்களிடம் இதுகுறித்து விசாரித்தபோது, ``மதிப்பெண் மறுமதிப்பீடு முறையில் கூடுதல் மதிப்பெண் பெறுவது, கடந்த பத்து ஆண்டுகளாக நடந்துவருகிறது. இந்த மறுமதிப்பீட்டில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும். குறிப்பாக, முன்னாள் துணைவேந்தர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பங்கு என்ன என்பது குறித்தும் விசாரித்தால், பல தகவல்கள் வெளிவரும்.

`மாணவர்கள் சேர்க்கையின்போது, ஒவ்வொரு கல்லூரியின் தேர்ச்சி விகித விவரங்கள் வெளியிட வேண்டும்' என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவால், ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கல்லூரியின் தேர்ச்சி விகிதமும் வெளியிட்டுவருகிறது அண்ணா பல்கலைக்கழகம். தேர்ச்சி விகிதம் வெளியிடுவதால், பல தனியார் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் வெளிச்சத்துக்கு வந்தது. இதை மறைக்கும்விதமாக, தனியார் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரிகளை அணுகி, தேர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்து, அதற்குச் சன்மானம் வழங்கியதாக தகவல் உண்டு. இதுகுறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டு கொண்டனர். 

லட்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு உதவும் விதமாக, முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த பேராசிரியை உமாவையும், திண்டிவனம் கல்லூரியின் முதல்வர் பொறுப்பிலிருந்த  விஜயகுமாரையும்  பணியிடை நீக்கம் செய்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். இதற்கான உத்தரவை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுரப்பா, ``தேர்வு முறைக்கேட்டில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அறிவித்துள்ளார்.Trending Articles

Sponsored