'க்ளோனிங்கும் தோற்கும் அவளை பிரதி எடுக்கையில்...' - மர்லின் மன்றோ நினைவுதின பகிர்வு!Sponsoredசர்வதேச அளவில் ரசிகர்களைப் பெற்றிருக்கும் ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ, உலகை வெறுத்து உயிர் துறந்த தினம் இன்று. 

1926-ம் ஆண்டு ஜூன் முதல் நாளில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார் மர்லின். மர்லினின் பிறப்புக்கு முன்பே அவரது தந்தை இறந்துபோனார். அவரைப் பெற்ற தாய்க்கு, உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தது. இதனால் அநாதை விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தார். பதின் வயதில் அந்த விடுதியைவிட்டு வெளியேறி, பல்வேறு வீடுகளில் பணிப்பெண்ணாக வேலைபார்ப்பதும், பிறகு அந்த வீட்டு உரிமையாளர்களால் வேலையைவிட்டு துரத்தப்படுவதுமாக மர்லினின் இளமைக்காலம் கடந்தது. இந்நிலையில், தனது 16-வது வயதில் ஜேம்ஸ் என்கிற இளைஞரை திருமணம் செய்துகொண்டார்.

Sponsored


கணவராக வாய்த்த ஜேம்ஸும் சரியாக வேலைக்குச் செல்வதில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, திருமணம் முடிந்த ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்றார். பிறகு, பாராசூட் பழுதுபார்க்கும் பணி, இடையிடையே ஓவிய மாடல் பணி ஆகியவற்றைச் செய்தும் அவரது வாழ்வில் நிம்மதியில்லை. நிலையான வருமானம் இல்லாததால் பல நாள் பட்டினி கிடந்த மர்லின், விளம்பர மாடலாக நீச்சல் உடையில் தோன்றி வறுமையைச் சமாளித்தார். இந்நிலையில், அவருக்குள் ஊற்றெடுத்த நடிப்பு ஆசையால் சினிமா பயிற்சிக்கூடத்தில் சேர்ந்தார். அங்கு தங்கியிருந்த வீட்டுக்கு வாடகை தர முடியாததால், நடுரோட்டில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

Sponsored


இதைச் சமாளிக்க, காலண்டரில் அச்சிடுவதற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்தார். இதன் மூலம் கிடைத்த சொற்பத் தொகையை வைத்துகொண்டு மீண்டும் சினிமாவில் நுழைய முயன்றார். அவரது விடாத முயற்சியால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சினிமாவில் அவர் பேசியது ஒரே ஒரு வார்த்தைதான். அந்த வார்த்தையும் படம் வெளிவந்தபோது கத்தரிக்குப் பலியானது. வார்த்தை இல்லாவிட்டாலும் மர்லினின் உடல் வனப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். மர்லின் மன்றோவின் கவர்ச்சியான உடல் அழகில், நடை அழகில் ரசிகர்கள் மயங்கினார்கள். இதனால் மாடலாக இருக்கக்கூட தகுதியற்றவராகப் பார்க்கப்பட்ட மர்லின், பல படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். ஆண்டுக்கணக்கில் தங்கள் கம்பெனிப் படங்களில் நடிக்க மர்லினை ஒப்பந்தம் செய்தன பெரிய சினிமா கம்பெனிகள்.

சினிமா உலகின் உச்சம் தொட்ட நிலையில், கால்பந்து வீரரான ஜேர்டிமாக்கியாவை  திருமணம் செய்துகொண்டார் மர்லின் மன்றோ. சிறிது காலத்திலேயே அவரையும் விவாகரத்து செய்துவிட்டு 3-வதாக சினிமா தயாரிப்பாளர் ஆர்தர் மில்லரை கரம் பிடித்தார். இவருடன் வாழ்ந்தபோது மர்லினுக்கு இருமுறை கருச்சிதைவு ஏற்பட்டது. இதனால் அவர் விரும்பிய தாய்மையை அவரது வாழ்நாள் இறுதி வரை அடைய முடியவில்லை.

 

இந்நிலையில் மர்லின் மன்றோவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. தொடர் சிகிச்சையின் விளைவாக மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிய மர்லின் மன்றோ, தொடர்ந்து சினிமாவில் நடித்துவந்தார். இந்நிலையில் `நான் கொடுப்பதற்கு இன்னும் சில உண்டு' என்ற படத்தில் குளியல் காட்சியில் நிர்வாணமாக நடித்தார். ஆனால் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவதில்லை எனச் சொல்லி அந்தப் படத்திலிருந்து நீக்கிவிட்டனர்.

அந்தப் பட தயாரிப்பாளர், நஷ்டஈடு கேட்டு மர்லின் மீது வழக்கு தொடுத்தார். இதனால் மர்லினின் மனநிலையில் இருந்து வந்த உற்சாகம் குன்றியது. இதன் பிறகு படத் தயாரிப்பாளருக்கும் மர்லினுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதால், மர்லின் நடிக்க இருந்த அந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருந்தது. இந்நிலையில்தான் அந்த அதிர்ச்சிச் செய்தி உலகெங்கிலும் உள்ள மர்லினின் ரசிகர்களை உலுக்கியது.

ஆம், 1962-ம் ஆண்டு இதே நாளில் ஹாலிவுட்டில் உள்ள மாளிகை ஒன்றில் தங்கியிருந்த மர்லின் மன்றோ, கட்டிலில் மயங்கிக் கிடந்தார். இதைக் கண்ட அவரது வீட்டு வேலைக்காரர், மருத்துவர்களுக்குத் தகவல் கொடுத்தார். உள்பக்கமாகப் பூட்டியிருந்த மர்லினின் படுக்கை அறைக் கதவை உடைத்து உள்ளே சென்ற மருத்துவர்களுக்கு, அதிர்ச்சி! கையில் டெலிபோனுடனும் உடலில் ஒரு துணிகூட இல்லாமலும் பல மணி நேரத்துக்கு முன்பே இறந்துபோயிருந்தார் மர்லின்.

அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட அவர், கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவரது தற்கொலை இன்று வரை புரியாதபுதிராகவே உள்ளது. தன்னை விரட்டியடித்து தெருவில் நிறுத்தியவர்கள் மத்தியில், உலகிலேயே அதிக பணம் சம்பாதித்த நடிகையாக திகழ்ந்த  மர்லின், ஏனோ தனது வாழ்வை 36 வயதிலேயே முடித்துக்கொண்டார்.Trending Articles

Sponsored