கோவில்பத்து தனலட்சுமி, தோழர் பாப்பா உமாநாத்தாக மாறிய கதை! #PappaUmanathSponsored"இறந்துபோன உன் அம்மாவின் முகத்தைக் கடைசியாகப் பார்க்க வேண்டும் என்றால், ஒரு நிபந்தனை. கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறி விடவேண்டும்" என்று சிறையிலிருந்த இளம்பெண்ணிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் எடுத்த முடிவு கேட்போரை ஆச்சர்யப்பட வைக்கும், அந்த இளம்பெண் பாப்பா உமாநாத். அவர் என்ன முடிவெடுத்தார் என்பதைப் பார்க்கும் முன் அவரைப் பற்றி சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம். 

பொதுவாழ்க்கையில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆரோக்கியமான தலைமுறை இது. ஒரு போராட்டத்தின் கோரிக்கைகள் முழுமையடைவது, அதில் பெண்களின் பங்களிப்பும் இருக்கும்போதுதான். ஆனால், சுமார் நூறாண்டுக்கு முன் ஒரு பெண் சமூகப் பணியில் ஈடுபடுவது என்பது எளிதான காரியமன்று. பெண்களுக்குக் கல்விக் கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருந்த நிலையில், தடைகளைக் கடந்து மக்களுக்காக வீதியில் நிற்பது அரிதாக நிகழும் அபூர்வம். அப்படியான அபூர்வங்களில் முக்கியமானவர் பாப்பா உமாநாத். 

Sponsored


காரைக்கால் அருகேயுள்ள கோவில்பத்து சிறுகிராமத்தில் 1931 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் நாளில் பிறந்தவர் தனலட்சுமி. இவருக்கு இரண்டு வயதாக இருக்கும்போது தந்தை இறந்துவிடுகிறார். அதனால், இவரின் அம்மா மூன்று பிள்ளைகளோடு திருச்சிக்கு உறவினர் வீட்டுக்கு வந்துவிடுகிறார். திருச்சி பொன்மலையில் ரயில்வே தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் விதத்தில் இட்லிக் கடையை நடத்தினார் அம்மா. எட்டாம் வகுப்புப் படிக்கும்போது குடும்பச் சூழலால் பள்ளிக்கு அனுப்பமுடியவில்லை தனலட்சுமியை. ஒருவருடம் தடைப்பட்டுபோக, கல்வி அத்தோடு முடிந்துவிட்டது. அந்தப் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் சிறுமி தனலட்சுமியை 'பாப்பா.. பாப்பா' என்றழைக்க அதுவே பேராகிப் போய்விட்டது. 

Sponsored


அம்மாவுக்குக் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர். ஆனால், பாப்பாவுக்குச் சிறுவயது முதலே கடவுள் மீது பெரிய ஈடுபாடு இல்லை. அதனால், அப்பாவின் நினைவுதினத்தில் படைக்கப்படும் உணவு வகைகளை எண்ணிக்கொள்வார். படையல் முடிந்ததும், கடவுள் எங்கே அம்மா சாப்பிட்டது? நாம்தானே சாப்பிடப் போகிறோம்' என்பாராம். அதற்காக, அம்மாவிடம் செல்ல திட்டுகள் வாங்குவதும் உண்டு. அம்மா இட்லி சுடுவதைப் பற்றி கூறும்போது, "அரிசி தாமதாகக் கிடைத்ததும், இரவில் வெந்நீரில் ஊற வைத்து, நள்ளிரவு வரை மாவு அரைப்பார். விடியற்காலையில் எழுந்து சட்னி, சாம்பார் வைத்து இட்லி ஊற்றுவார்" எனும்போது, அவர் அம்மாவின் கடும் உழைப்பு நம் கண் முன்னால் வந்துசெல்கிறது. 

இந்தியா அடிமைப்பட்டிருந்த காலத்தில் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டபோது பாப்பாவுக்கு 14 வயது. அப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை காவல் துறை கைது செய்தபோது, தன்னையும் கைது செய்யச் சொல்லியிருக்கிறார். விசாரிக்கும்போது நீதிபதி இவரின் வயதைக் கேட்டு விடச் சொல்லிவிட்டாராம். பள்ளிப் படிப்பை முடிக்காவிட்டாலும் தொழிலரசு பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பல ஊர்களுக்கு அதை கொண்டுச்சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். 

கம்யூனிஸ்ட் கட்சியின் தடைக்காலத்தில் தலைமறைவு வாழ்க்கையில் இருந்த தலைவர்களுக்கு ரகசிய செய்தி அனுப்பும் வேலைகளில் பாப்பாவின் அம்மா ஈடுபட்டார். ஒருகட்டத்தில் பாப்பாவும் அவரின் அம்மாவும் கைது செய்யப்படுகின்றனர். சிறையில் கடுமையான சித்திரவதைகளை அனுபவிக்கின்றனர். தங்களை அரசியல் கைதிகளாக நடத்தும்படி உண்ணாவிரதம் இருந்ததும், இருவரையும் வெவ்வேறு அறைகளில் அடைத்துவிடுகிறது சிறை நிர்வாகம். சிறையில் கொடூரத்தால் உடல்நலிவடைந்து அம்மா இறந்துபோகிறார். இறுதியாக அம்மாவின் முகத்தைப் பார்க்க வேண்டும் என பாப்பா கேட்டதற்குத்தான், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியே வந்தால்தான் பார்க்க அனுமதி என்றனர். அப்பா இறந்த நிலையிலும் மிகுந்த சிரமப்பட்டு வளர்த்த அம்மாவை இறுதியாகப் பார்க்க பெரும் ஆவல் இருந்தாலும் சமூகத்திற்கான பணியை மனத்தில் கொண்டு கட்சியை விட்டு விலக மறுத்துவிடுகிறார். இந்தத் துணிச்சலான முடிவை வேறு யாரேனும் எடுத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். 

கட்சியில் தீவிரமாகப் பணியாற்றும்போதுதான் சகத் தோழரான உமாநாத்துடன் காதலாகி, திருமணம் செய்துகொள்கிறார். தாலி, சடங்கு மறுத்து ராகு காலத்தில் இவர்களின் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு வாழ்த்த வந்த தந்தை பெரியார், சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கிறது எனப் பாராட்டியிருக்கிறார். சிறுவயதில் பாலர் சங்கத்தில் செயல்பட்டதைப்போல, மாதர் சங்கத்தைத் தமிழ்நாட்டில் தொடங்கி தீவிரமாகப் பணியாற்றினார். அவர் தனது முன் மாதிரியாக, தான்யாவைக் கூறுவார். தான்யா ரஷ்யாவின் பிறந்தவர். தனது ஆறாம் வயதில் தந்தையை இழந்தவர். இரண்டாம் உலகப்போரின்போது அவருக்கு வயது 11. அப்போரில் நடந்த கொடூரத்தைக் கண்ட சாட்சி இவரின் குடும்பம். தான் கண்ட அவலத்தை டைரியில் எழுதி வைத்தார் தான்யா. அதைத் தெரிந்துகொண்ட ஹிட்லர் அதை அழிக்க முயல்கிறார். அதிலிருந்து தப்பிக்க, குடும்பத்தினர் ஒவ்வொருவராக இழக்கிறார். குழந்தைகளோடு குழந்தையாகத் தப்பித்துச் செல்கிறார் தான்யா. ஆனாலும் காசநோயால் தனது 14 வது வயதில் இறந்துவிடுகிறார். ஆனபோதும் அவரின் டைரிக்குறிப்புகளே இரண்டாம் போர் துயரத்தின் சாட்சியாக இருந்துவருகிறது. கடைசி வரைக்கும் சாட்சியைக் காப்பாற்ற முயலும் அந்தப் போர்க் குணமே பாப்பா உமாநாத்துக்கு அவரை நேசிக்க வைத்திருக்கிறது.  

1989 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டர். அப்பகுதியின் பிரதான சிக்கலான குடிநீர் பிரச்னையைத் தீர்த்தார். பெண்கள் விடுதலை, சமூக ஏற்றத்தாழ்வு உள்ளிட்டவற்றில் சமரசமின்றி களம் கண்டார். மேடைகளில் எளிய மக்களின் குரலாக ஒலித்தார். வாச்சாத்தி கிராமத்துப் பெண்களுக்கு நடந்த கொடுமையை எதிராகவும் சிதம்பரம் பத்மினி வழக்கிலும் தொடர்ந்து களத்தில் நின்று அவர்களுக்கு நம்பிக்கையும் நீதியும் பெற்றுத்தருவதில் தளர்வற்றுப் போராடினார். சடங்கு, தாலி மறுப்புத் திருமணம் செய்துகொண்டாலும் மகிழ்ச்சியோடு வாழ முடியும் என்பதை தன் கணவரோடு ஐம்பதாண்டுகளுக்கு மேலாக இணைந்த, பிணக்கற்று வாழ்ந்து காட்டினார். இவர்களின் மகள் உ.வாசுகி தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். பல போராட்டங்களை முன்னெடுப்பவர்.

இடதுசாரி இயக்க வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடித்த தலைவர் பாப்பா உமாநாத் 2010 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவரின் செயல்பாடுகளால் என்றென்றும் அவர் நினைக்கூரப் படுவார். 
 Trending Articles

Sponsored