ஒன்றரை ஏக்கர் பயிரை அழித்த தம்பி... குடும்பத்துடன் தற்கொலை செய்ய கலெக்டர் ஆபீஸுக்கு வந்த விவசாயிSponsoredதன் விளைநிலத்தில் விஷ மருந்தை அடித்து பயிர்களைச் சேதப்படுத்தியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் குடும்பத்துடன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்ய வந்தார். போலீஸ் சோதனையின்போது பூச்சி மருந்தை கண்டுபிடித்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.   
 

நெல்லை மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தேவிபட்டிணத்தைச் சேர்ந்தவர் திருமலைச்செல்வன். விவசாயி. இவருக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. திருமலைச்செல்வனுக்கும் அவருடைய சகோதரர் முருகனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில், திருமலைச்செல்வன் பயிரிட்டிருந்த வெங்காயப் பயிரை விஷ மருந்து தெளித்து முருகன் சேதப்படுத்தியுள்ளார். 

Sponsored


அந்த மருந்து தெளித்ததால் வெங்காயம் முழுவதும் காய்ந்து சேதமடைந்துவிட்டது. அத்துடன், விளை நிலத்தில் இருந்த விவசாயக் கிணற்றிலும் பூச்சிமருந்து தெளிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த தண்ணீரைக் குடிக்கும் ஆடு, மாடு போன்றவை உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தனக்கு ஏற்பட்ட இந்தப் பாதிப்பு குறித்து திருமலைச்செல்வன், சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

Sponsored


அதனால் அதிருப்தி அடைந்த திருமலைச்செல்வன், தனது தாய் சோலையம்மாள், மனைவி தங்கம்மாள் மற்றும் இரண்டு மகள்கள். மற்றும் மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். ஆட்சியரைச் சந்தித்து முறையிடுவது எனவும் அதில் எந்த முடிவும் கிடைக்காவிட்டால் பூச்சி மருந்தைக் குடிப்பது எனவும் முடிவு செய்து வந்துள்ளனர். ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தபோது பூச்சி மருந்துப் பாட்டிலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். 

இது குறித்து திருமலைச்செல்வன் கூறுகையில், ``சொத்து தகராறில் எங்களின் விவசாய நிலம் பூச்சி மருந்து ஊற்றி அழிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒருமுறை இதேபோல செய்தபோதும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலை தொடர்வதால் எங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காவிட்டால் ஆட்சியர் அலுவலகத்திலேயே தற்கொலை செய்துகொள்வோம்’’ எனத் தெரிவித்தார். Trending Articles

Sponsored