திருச்சி ஏர்போர்ட்டில் சுங்கத்துறை அதிகாரிகளை குறித்துவைத்துப் பிடித்த சி.பி.ஐ! - அதிர்ச்சி தகவல்Sponsoredதிருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம், நட்சத்திர ஆமைகள், கடல் அட்டைகள், வெளிநாட்டுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பிடிப்பது வாடிக்கையாகியுள்ளது. கடந்த வாரம் மலேசியாவிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த தனியார் விமானம் தங்கக் கட்டிகள் கடத்தப்படுவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை மத்தியப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ எடையுள்ள 46 தங்கக் கட்டிகள் சிக்கின. இதற்குக் காரணமான 
5 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

தொடர்ந்து பலரிடம் இது தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், நேற்று மாலை சிங்கப்பூரிலிருந்து இலங்கை வழியாக வந்த பயணிகள் விமானத்தில் பொருள்கள் கடத்தப்படுவதாகத் தகவல் வந்தது. இதன் அடிப்படையில் மதுரையிலிருந்து திருச்சி வந்த சி.பி.ஐ, எஸ்.பி மைக்கேல்ராஜ் தலைமையில் 2 டி.எஸ்.பி-க்கள், இன்ஸ்பெக்டர் மதுசூதனன் ஆகியோர் தலைமையில்10-க்கும் மேற்பட்ட சி.பி.ஐ அதிகாரிகள் மாலை 4 மணியளவில் திருச்சி விமான நிலையத்துக்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது விமானத்திலிருந்து வெளியே சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிய பயணிகள் உட்பட அனைவரையும் விமான நிலையத்துக்குள் மீண்டும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

சுமார் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்த விமானத்தில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். ஒரு சில பயணிகளை வெளியே அனுப்பிவிட்டு, இறுதியாக எட்டு பெண்கள் உட்பட சுமார் 29 பேர் சந்தேகப்படும் பயணிகளைப் பிடித்து வைத்திருக்கும் சி.பி.ஐ அதிகாரிகள் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், இன்று காலை 9.30 மணியளவில் 3 சுங்கத்துறை அதிகாரிகளை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணைக்கு வெளியில் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனால் விமான நிலையம் பரபரப்பாகவே காட்சியளித்தது. இந்நிலையில் சற்றுமுன் தங்கம் மற்றும் வெளிநாட்டுப் பொருள்கள் கடத்தலுக்குத் துணைபோன சுங்கத்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 3 பேர் மற்றும் பயணிகள் 5 பேர் என மொத்தம் 8 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கைது செய்யப்பட்டவர்கள் மதுரை சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

Sponsored


சி.பி.ஐ அதிகாரிகளின் விசாரணையில் சிக்கி 10 மணி நேரத்துக்குப் பிறகு, வந்த பயணிகளிடம் பேசினோம். ‘வழக்கமாகத் திருச்சி விமான நிலைய வளாகத்தில் மட்டும் தினமும் 15-க்கும் மேற்பட்ட கொக்குகள் எனும் தங்கக் கடத்தல் தரகர்கள் வலம்வருகிறார்கள். இவர்களுக்கு விமானநிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள், சுங்கத்துறை அதிகாரிகள் ஆகியோர் நல்ல பழக்கம். அதிகமுறை வெளிநாடுகளுக்குச் செல்லும் தங்கம் கடத்தலுக்கு பயன்படும் குருவிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சுலபமாகக் கண்காணிக்க முடியும். அப்படிக் கண்டுபிடிக்கும் குருவிகளிடம் பணம் பார்க்கும் அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் அதிகரித்துவிட்டார்கள். இவர்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் குருவிகளைக் குறிவைப்பதாகவும் அவர்களை சோதனை செய்தால், ஒரு சீட்டில் குறித்துக்கொண்டு குருவிகளை அனுப்பிவிட்டு, சிறிது நேரம் கழித்து சீருடைகளை மாற்றிக்கொண்டு வெளியே வந்து விமான நிலைய வளாகத்திலேயே குருவிகளிடம் சுலபமாக வெளியே விட்டதற்கான தொகையை வாங்கிக்கொள்வது வழக்கம். ஆனால், நேற்று பணியில் இருந்த அதிகாரிகள், பணத்தை வாங்கி பையில் வைத்துக்கொண்டு, குருவிகளோடு வெளியே வந்தபோது அதிரடியாக வந்த சி.பி.ஐ அதிகாரிகள் அவர்களை அப்படியே அமுக்கி விமான நிலையத்துக்குள் கொண்டு சென்று விசாரித்தனர். அப்போது விலை உயர்ந்த சிகரெட்டுகள், எலெக்ட்ரானிக் பொருள்கள், தங்கக் கட்டிகள் சிக்கின. சிக்கிய அதிகாரிகளைவிட, இன்னும் பணி செய்யும் அதிகாரிகள் பலரும் சி.பி.ஐ அதிகாரிகளின் கிடுக்கிப் பிடி விசாரணைக்குத் தப்பவில்லை. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. அதிகாரிகள் சிலரையும் பயணிகள் சிலரையும் பிடித்து வைத்துள்ளனர். நாங்கள் வைத்திருந்த பொருள்களை எல்லாம் வாங்கிக்கொண்டு அனுப்பினார்கள்'' என்றார்கள்.

Sponsored


சி.பி.ஐ அதிகாரிகளின் தொடர் விசாரணையின் காரணமாக இன்று காலை மலேசியாவிலிருந்து திருச்சி வந்த தனியார் விமான நிலையத்தில் பயணம் செய்ய முன் பதிவு செய்திருந்த 40 பயணிகள் பயணத்தை ரத்து செய்திருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. அதனால், ஏர் ஏசியா விமானம் ரத்து செய்யப்பட்டது. மேலும் சிக்கிய அதிகாரிகளின் வீடுகளிலும் பெண் பயணி ஒருவரின் வீடுகளிலும் சி.பி.ஐ சோதனை நடத்துவதாகக் கூறப்படுகிறது. தங்கக் கடத்தலுக்கு துணைபோன அதிகாரிகளை சி.பி.ஐ பிடித்திருப்பதும் விசாரணை தொடர்வதும் பல விசயங்களை பூதாகரமாக்கும் என்கிறார்கள் விமான நிலைய அதிகாரிகள்.

 
 Trending Articles

Sponsored