உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை தாக்கல் செய்யாதது ஏன்? - உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்Sponsoredஉள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை இன்று தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் இன்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் அட்டவணையைத் தாக்கல் செய்யவில்லை. 

தமிழகத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டு நீண்ட நாள்கள் ஆகியும் மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. எனவே, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ் பாரதி உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் அறிவிப்புகள் வெளியிடாத மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். 

Sponsored


கடந்த ஜூலை 31-ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் தேர்தல் அட்டவணையைத் தாக்கல் செய்ய வேண்டும் மற்றும் இது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையமும் தமிழக அரசும் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மீறினால் மாநிலத் தேர்தல் ஆணையம் மீது நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

Sponsored


அதன்படி இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையைத் தாக்கல் செய்யவில்லை. மாநிலத் தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர் நேரில் ஆஜராகி ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்தனர். அதில் வார்டு மறுவரையறைப் பணிகள் இன்னும் நிறைவடையாததால் தேர்தல் அட்டவணையைத் தாக்கல் செய்ய இயலவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஊரக வார்டு மறுவரையறை அறிக்கை ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள்ளும் நகர்ப்புற வார்டு மறு வரையறை அறிக்கை ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள்ளும் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்குத் தமிழக அரசு ஒப்புதல் வழங்கிய அடுத்த மூன்று மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சுந்தர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. தி.மு.க தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. Trending Articles

Sponsored