`பட்டுப்புடவை, நகையெல்லாம் எரிஞ்சு போச்சு!’ - ஏழைத் தாயைக் கலங்க வைத்த தீ விபத்து



Sponsored



தஞ்சையில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்று, ஓர் ஏழைக் குடும்பத்தின் வாழ்வை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டுவிட்டது. 'என் மகள் திருமணத்துக்காக வாங்கிய பட்டுப் புடவைகள் எல்லாம் எரிந்து சாம்பலாகிவிட்டன' எனக் கதறுகிறார் மணமகளின் தாய். 

தஞ்சாவூர் நகரப் பகுதியில் உள்ளது மேட்டு எல்லையம்மன் கோயில் தெரு. இங்கு நூற்றுக்கும் மேல் அடித்தட்டு மக்களின் வீடுகள் உள்ளன. கடந்த வாரம் இந்தப் பகுதியில் இருந்த வீடு ஒன்றில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் 19 வீடுகள் எரிந்து சாம்பலாகின. இதில் பலரது உடைமைகளும் எரிந்துபோயின. தீ விபத்தைக் கேள்விப்பட்டு வந்த அரசியல் கட்சிகளும் தொண்டு நிறுவனங்களும் சின்னச் சின்ன உதவிகள் செய்தாலும், அந்த மக்களுக்குப் போதிய உதவிகள் கிடைக்கவில்லை. `மீண்டும் கூரைக் கட்டி வாழ்வதற்கான உதவிகள் கிடைக்காதா' எனத் தவித்து வருகின்றனர். 

இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், லட்சுமி என்ற பெண் தன் மகளுக்குத் திருமணத்துக்கு தேதி குறித்துவிட்டு அதற்குத் தேவையான அனைத்து பொருள்களையும் வாங்கி வைத்திருக்கிறார். இவை அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகியதோடு மட்டுமல்லாமல், வீடும் எலும்புக்கூடாய் காட்சியளிக்கிறது. இதனால் செய்வது அறியாமல் தவித்து நிற்கிறார் லட்சுமி. 

Sponsored


Sponsored


லட்சுமியிடம் பேசினோம். ``எனக்கு இரண்டு மகள்கள், இரண்டு ஆண் பிள்ளைகள். 10 வருடங்களுக்கு முன்பே என் வீட்டுக்காரர் செத்துட்டார். என் பிள்ளைகளைக் கூலி வேலை செஞ்சு காப்பாத்திட்டு வர்றேன். இப்ப என் பெரிய பையன், பெயின்ட் அடிக்கற வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாத்திட்டு வர்றான். என் பொண்ணு ராஜேஷ்வரிக்கு மாப்பிள்ளையைப் பார்த்து முடிச்சுட்டேன். வர்ற 29-ம் தேதி திருமணம் நடத்த நிச்சயமும் செஞ்சுட்டோம். இதுக்காகக் கல்யாண பட்டுப் புடவை, நகை, கொலுசு, சீர் வரிசை பொருள்னு எல்லாத்தையும் வாங்கிட்டோம். இத்தனை வருஷ காலமா கொஞ்ச கொஞ்சமா சேர்த்து வச்ச பணத்தில்தான் இத்தனையும் வாங்கினேன். கல்யாண பத்திரிகையும் அடிச்சோம். ஆனால், இதெல்லாம் தீவிபத்தில் எரிஞ்சு சாம்பலாயிடுச்சு. 

நான்தான் வாழ்க்கையில் படாத கஷ்டம் எல்லாம் பட்டுட்டேன். என் மகள் வாழ்க்கையாவது நல்லா இருக்கனும்னுதான் பார்த்து பார்த்து எல்லாத்தையும் வாங்கினேன். ஆனால், பட்டுப் புடவை, நகையெல்லாம் எரிஞ்சு கருகிப் போய்க் கிடக்கு. பத்திரிகையும் பாதி எரிஞ்சு போய் இருக்கு. இதெல்லாத்தையும்விட இருக்கறதுக்கு வீடு இல்லாம நிர்க்கதியா நிக்கறோம். இப்ப நானும் என் மகனும் கடன் கேட்டு அலைஞ்சுட்டு இருக்கோம். இதுவரைக்கும் கடன் கிடைக்கல. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து நம்பிக்கையா பேசிட்டு போயிருக்காங்க. இதுதான் இப்போதைக்கு எங்களுக்கு ஆறுதல். கலெக்டர் அண்ணாதுரையிடமும் மனு கொடுத்துட்டு வந்திருக்கோம். ஆளும் கட்சிக்காரங்க, என்ன தேவைன்னுகூடக் கேக்காம வேட்டி, சட்டை, அஞ்சாயிரம் பணம்னு கொடுத்துட்டுப் போயிட்டாங்க. கலெக்டர் நடவடிக்கை எடுப்பார்னு காத்துட்டு இருக்கோம்" என்றார் கண்ணீரைத் துடைத்தபடி.



Trending Articles

Sponsored