"பொன்.மாணிக்கவேலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.!" - அறநிலையத்துறை சங்கங்கள் குற்றச்சாட்டுSponsoredசிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்று அறநிலையத்துறை சங்கங்களின் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

காஞ்சிபுரம் சிலை மோசடி வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அறநிலையத்துறையின் அனைத்துச் சங்க கூட்டமைப்பின் சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் நடந்தது. 

"இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு குற்றவாளிகளைக் காப்பாற்ற நடத்தப்படவில்லை. 'குற்றம் செய்தால் தூக்கில் கூட போடுங்கள்' ஆனால் முறையான விசாரணை நடத்தப்படவேண்டும்" என்ற கோரிக்கையோடு அறநிலையத்துறையின் அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பினர் பேசத் தொடங்கினர். ''கூடுதல் ஆணையர் கவிதா மீது எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல், முகாந்தரமின்றியும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அவரைப் பற்றியும் அறநிலையத்துறை பற்றியும் உண்மைக்கு மாறான தகவல்களை ஊடகங்களில் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே இத்துறை அலுவலர்கள் மீது சிலைக் கடத்தலுக்கு உடந்தை என ஒரு தவறான மாய பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது.

Sponsored


Sponsored


கோயிலுக்குச் சொந்தமான சிலைகள் குறித்த புள்ளி விவரங்களை அறநிலையத்துறையில் பொன். மாணிக்கவேல் கேட்டிருக்கிறார். ஆனால், பாதுகாப்புக் கருதி முன்னாள் ஆணையர் தனபால் அந்தத் தகவலை கொடுக்கவில்லை. சிலைக் களவு குறித்துக் கேட்டால், அந்தச் சிலைகள் குறித்த விவரத்தை மட்டும் தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களை மனதில் வைத்து பழிவாங்கும் நோக்கத்தோடு தனபாலை கைது செய்திருக்கிறார் பொன்.மாணிக்கவேல். காஞ்சிபுரம் சிலை வழக்கில், கவிதா கொடுத்த ஒப்புதலின் அடிப்படையில்தான் தங்கம் வசூலிக்கப்பட்டதாக சொல்லச் சொல்லி முத்தையா ஸ்தபதியைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். காஞ்சிபுரம் இரட்டைத் திருமாளிகை திருப்பணி தொடர்பான வழக்கில் கவிதா முன் ஜாமின் பெற்றதையடுத்து, சோமஸ்கந்தர் சிலை விவகாரத்தில் செயல் அலுவலர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உள்நோக்கத்துடன் கைது செய்துள்ளனர். குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்ட செயல் அலுவலர் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பழநி மற்றும் காஞ்சிபுரம் கோயில்களில் இருந்த பழுதடைந்த சிலைகளை மேலும் பழுதடையாமல் பராமரிக்கவே புதிய சிலை செய்யப்பட்டது. இதற்காக பல்வேறு துறைகளிடமும் ஒப்புதல் பெறப்பட்டது குறிப்பிடவேண்டிய ஒன்று.  சிலைகளை செய்வதற்கு பொதுமக்களிடம்  தங்கம் பெறப்பட்டதாக யூகத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை பொதுமக்கள் யாரும் தங்கம் கொடுத்ததாகப் புகார் அளித்ததாகத் தெரியவில்லை. அறநிலையத்துறை அலுவலக ஆவணங்களின்படி 1920 முதல் 2017 வரை 803 கோயில்களில் 2145 விக்ரகங்கள் மற்றும் 478 சிலைகள் களவு போயுள்ளன. இதில் 56 மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு 18 சிலைகள் மட்டும் கோயிலில் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. 33 கோயில்களில் நடைபெற்ற களவுகளில் காணாமல் போன  385 சிலைகள் குறித்த வழக்குகள் கண்டுபிடிக்க இயலவில்லை என்று காவல்துறையால் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவுபடி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்த சிலைகளைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால், புதிது புதிதாக வழக்குகளை அறநிலையத்துறை அலுவலர்கள் மீது வேண்டுமென்றே பதிவு செய்து வருகிறது.

பழனி மற்றும் காஞ்சிபுரம் வழக்குகளில் சிலைகள் எதுவும் களவு போகவில்லை. ஆனால், யூகத்தின் அடிப்படையில் உபயமாகத் தரப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்குப் பதியப்படுகிறது. இதுவரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல்செய்யப்படவில்லை. தற்போது, கைது செய்யப்பட்டிருக்கும் கவிதா மீது முதல் தகவல் அறிக்கைக் கூடப் போடவில்லை. விசாரணைக்கும் அழைக்கவில்லை. இது வேண்டும் என்றே பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட வழக்கு. அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம். அதற்காக தமிழகத்தில் பலரும் வேலை செய்து வருகிறார்கள். அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வேண்டும் என்றே பொய் வழக்குகளைப் போடவைத்து பொன்.மாணிக்கவேலை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இயக்குகிறது'' என்று சிலைக் கடத்தல் பிரிவு ஐ.ஜி மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள்.Trending Articles

Sponsored