பசுமை வழிச் சாலை குறித்து 35 விவசாயிகள் கட்டணமின்றி வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி!Sponsoredபசுமை வழிச் சாலைத் திட்டம் தொடர்பாக 35 விவசாயிகள் கட்டணமின்றி வழக்கு தொடரலாம் என உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை சேலம் இடையேயான பசுமை வழிச் சாலை திட்டத்துக்குத் தடை விதிக்கக்கோரி பா.ம.க எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜகோபாலன், இந்திய அரசியல் சாசனபடி சொத்துரிமை அடிப்படை உரிமை இல்லை என்றும், எனவே அரசு திட்டங்களுக்கு தடை விதிக்க கோர முடியாது என்றும் தெரிவித்தார். அதேபோல, பசுமை  வழிச்சாலை திட்டத்தைப் பொருத்தமட்டில் ஆரம்பக்கட்ட பணிகள் மட்டுமே நடைபெற்று வருவதாகத் தெரிவித்த அவர் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதிக்குப் பிறகே, மற்ற பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.

Sponsored


இதையடுத்து அன்புமணி ராமதாஸ் தரப்பில், இதுபோன்ற சாலை அமைக்கும் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளிக்காத நிலையில் நிலங்களைக் கையகப்படுத்த அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் அந்த நிலங்களை பிற ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேலி அமைக்கும் அதிகாரம் மட்டுமே அரசுக்கு இருப்பதாகவும், இதை மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல ஈ.சி.ஆர் சாலை அமைக்கும்போது சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்காத நிலையில் அந்த நிலங்களை கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இந்தத் திட்டம் கைவிடப்பட்டதால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படாது என்றும் அந்த நிலங்கள் தமிழக அரசுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் இதனால் நடுத்தர விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

Sponsored


அதேபோல இந்த வழக்கில் சேலம் மாவட்டம் பாரப்பட்டி, நிலவரப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஜெயவேல் உள்ளிட்ட 35 விவசாயிகளை நீதிமன்ற கட்டணம் இல்லாமல் இந்த வழக்கில் மனுதாரராகச் சேர்க்க வேண்டுமென அன்புமணி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு வழக்குரைஞர், இத்திட்டத்துக்கு நிலங்கள் வழங்கும் 1,200 விவசாயிகளில் 37 பேர் மட்டுமே  நீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும், அவர்களை இந்த வழக்கில் இணைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஒரு திட்டத்தில் எதிர்ப்புகளின் எண்ணிக்கையை நீதிமன்றம் கருதாது என்றும் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்தாலும் அந்த மனுவை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் எனத் தெரிவித்து, 35 விவசாயிகள் கட்டணம் இல்லாமல் வழக்கு தொடர அனுமதி வழங்கினார். அதேபோல இந்த வழக்கு குறித்து தற்போது வரை தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்துக்கே தள்ளிவைத்தனர்.Trending Articles

Sponsored