முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள்!



Sponsored



தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகித்த பாஸ்கரன் ஆகஸ்ட் 5-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் இவரை மீண்டும் துணைவேந்தராக பதவி நீட்டிப்பு செய்யக் கூடாது என இப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்குவது தமிழ்ப் பல்கலைக்கழக மரபுக்கு விரோதமானது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பதவி வகித்த பாஸ்கரன், பேராசிரியர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு முறைகேடான வகையில் பல லட்சம் ரூபாய் பணம் பெற்றதாக தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வுச் சிறகுகள் மற்றும் ஆய்வு மாணவர்கள் கூட்டமைப்பினர் வெளிப்படையாக குற்றம்சாட்டி வந்தார்கள். இதுதொடர்பாக இவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆளுநர், பல்கலைக்கழக மானியக்குழு, இந்தியக் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் கடிதம் எழுதினார்கள். இந்நிலையில்தான் நேற்று துணைவேந்தர் பாஸ்கரன் பணி ஓய்வு பெற்றார். இவர் மீண்டும் பதவி நீட்டிப்பு பெறுவதற்கு முயற்சி செய்வதாகவும் இது தமிழ்ப் பல்கலைக்கழக மரபுக்கு விரோதமானது எனவும் இங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

Sponsored


இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆய்வு மாணவர்கள், 'துணைவேந்தராக இருந்த பாஸ்கரன், முறைகேடான முறையில் பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளுக்கு விரோதமாக, தகுதியற்ற நபர்களை பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப்பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களில் நியமித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். இந்நிலையில்தான் அவர் ஓய்வு பெற்றுள்ளார். இதனால் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்ய, பேராசிரியர் சுப்ரமணியம் தலைமையில் இடைக்கால பொறுப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

Sponsored


ஆனால், இதை முடக்குவதற்கும், பதவி நீட்டிப்பு பெறுவதற்கும் பாஸ்கரன் முயற்சி செய்கிறார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்த வி.ஐ.சுப்ரமணியத்துக்கு மட்டுமே பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அவர் உலக அளவில் புகழ்பெற்ற மிகப்பெரிய தமிழக அறிஞர் என்பதாலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தை வடிவமைத்து மிகவும் திறமையாக நிர்வாகம் செய்ததாலும்தான் அப்பொழுது தமிழக அரசு தாமாக முன்வந்து அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கியது. அதன் பிறகு வேறு எவருக்கும் பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இது மரபாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பாஸ்கரனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கினால் நீதிமன்றம் செல்லவும் தயாராக இருக்கிறோம்' எனக் கொந்தளிப்புடன் தெரிவித்தனர்.



Trending Articles

Sponsored