தங்கம் கடத்தல் விவகாரம்... விசாரணை வளையத்தில் சுங்க அதிகாரிகள்! - 3-வது நாளாக சி.பி.ஐ சோதனை



Sponsored



தங்கம் கடத்தலுக்குத் துணை போன திருச்சி விமான நிலைய சுங்க அதிகாரிகள் 6 பேர் உட்பட 19 பேர் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பதும், திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் நடத்தும் சோதனை 3 நாள்களாக  தொடர்வதாலும் பரபரப்பு நிலவுகிறது. 
 

 
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குத் தினமும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் தங்கம், வெளிநாட்டு கரன்ஸிகள், நட்சத்திர ஆமைகள் உள்ளிட்ட உயிரினங்கள் கடத்துவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
 
கடந்த ஜூலை 31-ம் தேதி இரவு மலேசியாவிலிருந்து வந்த 'மலிண்டோ' ஏர் விமானத்தில்  2 கோடி மதிப்பிலான 6.5 கிலோ தங்கமும், ரூ.10 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்ஸி நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
 
இதுதொடர்பாக விமான நிலையத்தில் செயல்படும் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்களான புதுக்கோட்டையைச் சேர்ந்த முகம்மது ஷெரிஃப், தஞ்சாவூரைச் சேர்ந்த பிரதீப் செளரிராஜ், தேனியைச் சேர்ந்த மகிமை பிரபு உள்ளிட்ட 5 பேரை மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.
 
இவர்களிடம் நடத்திய  விசாரணையில் திருச்சி விமான நிலையத்தில் நடக்கும் தங்கக் கடத்தலுக்கும், திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
 
இந்நிலையில், கடந்த 5-ம் தேதி மாலை, திருச்சி விமான நிலையத்துக்கு மலேசியாவிலிருந்து கொழும்பு வழியாக வந்த தனியார் விமானத்தில்  தங்கம் மற்றும் வெளிநாட்டுப் பொருள்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து  மதுரையிலிருந்து சி.பி.ஐ எஸ்.பி மைக்கேல் ராஜ் தலைமையில் இரண்டு டி.எஸ்.பி-க்கள், சி.பி.ஐ இன்ஸ்பெக்டர்கள் மதுசூதனன், சூர்யக்குமார், அஜின்ராஜ், பாமா உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர்  திடீரென நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.
 
இந்தச் சோதனையில் சுங்கத்துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டு  வெளியே அனுப்பப்பட்ட 70-க்கும் மேற்பட்ட பயணிகளை மீண்டும் விமான நிலையத்துக்குள் உள்ளே அழைத்துச் சென்று சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
 
அடுத்து 60-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளைப் பிடித்து தனித்தனியாக விசாரணை நடத்தபட்டது. மேலும் பயணிகள் கொண்டு வந்த பொருள்கள், ஆவணங்களும் சோதனை நடத்தப்பட்டது.
 
சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில், பயணிகளிடம் திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு எலெக்ட்ரானிக்ஸ், தங்கம் உள்ளிட்ட பொருள்களுக்கு உரிய வரி விதிக்காமல்  வெளியே அனுப்பியது தெரியவந்தது. இதன் மூலம் சுங்கத்துறை அதிகாரிகள் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் சி.பி.ஐ விசாரணை துவக்கினர். அந்த விசாரணை நேற்று நள்ளிரவுவரை தொடர்ந்தது.
 
மேலும், இந்த விசாரணையில், திருச்சி  விமானநிலைய சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேசலு, கண்காணிப்பாளர்கள் கழுகாசாலமூர்த்தி, ராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் ஹனீஸ் பாத்திமா, காசாளர் பிரசாந்த் கவுதம், எம்.டி.எஸ் எனப்படும் பிரிவைச் சேர்ந்த ஃபிரட்டி எட்வர்டு நாட்டு அதிகாரிகளும், பயணிகள் போர்வையில்  தங்கம் கடத்தலுக்குப் பயன்படும் குருவிகள் என அழைக்கப்படும் தங்க கடத்தலுக்குப் பயன்படும் கூலி ஆட்களான புதுக்கோட்டை முருகேஷ், திருச்சி ராமலிங்கம் நகரைச் சேர்ந்த தமயந்தி, அவரின் கணவர் தேவக்குமார், மனோகரன், முத்துக்குமார் என்கிற சரவணன், அப்துல் ரமேஷ், கனகா, சாந்தி, ராமலட்சுமி, லட்சுமி, வள்ளி, புஷ்பா, இலங்கையைச் சேர்ந்த மகேஸ்வரன், சுரேஷ் என்கிற சுப்பையா உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களுக்கு மூன்று வேலையும் அவர்களுக்குத் தேவையான உணவு, டீ மற்றும் ஸ்நாக்ஸ் உள்ளிட்டவை முறையே சி.பி.ஐ அதிகாரிகள் வழங்கியபடி விசாரணை நடத்தினர். இறுதியாக கைது செய்யப்பட்ட அனைவரும் மதுரை சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நேற்று நள்ளிரவு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் உள்ள பொருள்கள், தங்கக் கட்டிகள், எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் உள்ளிட்டவை இன்னும்  கணக்கிடப்படாமல் இருப்பதால் அது குறித்த விவரங்களைப் பதிவு செய்வதற்கு சி.பி.ஐ விசாரணை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மூன்றாவது நாள்களாக இன்று காலை வரை விசாரணை தொடர்கிறது.
 
இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள், அவர்களை அனுப்பியவர்கள்  திருச்சி விமான நிலையத்தில் மெல்ல மெல்ல கூடி வருவதாலும் சி.பி.ஐ விசாரணை தொடர்வதாலும் திருச்சி விமான நிலையம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது.

Sponsored




Trending Articles

Sponsored