தூத்துக்குடி பரலோக மாதா ஆலய 335-வது விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!Sponsoredபிரசித்திபெற்ற வீரமாமுனிவர் பங்குத்தந்தையாக சேவை ஆற்றிய, காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தின் 335-வது விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள காமநாயக்கன்பட்டியில் பழைமை வாய்ந்த பிரசித்திபெற்ற புனித பரலோக மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 335-வது விண்ணேற்பு பெருவிழா நேற்றிரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு ஆயர் வரவேற்பு மற்றும் நற்கருணை ஆலய அடிக்கல் நாட்டு விழா ஆகியவை நடந்தன. தொடர்ந்து ஆலயம் முன்பு கொடிமரம் நடப்பட்டது. கொடிமரத்தில் முதலாவதாக ஆலயக் கொடியும், அதைத் தொடர்ந்து இறைமக்கள் கொண்டு வந்திருந்த வண்ணக்கொடிகளும் அணிவகுப்பாகக் கட்டப்பட்டன. கொடியேற்றத்தை முன்னிட்டு ஆலய வளாகத்தில் சமபந்தி விருந்து நடைபெற்றது.

Sponsored


மதுரை பேராயர் கொடியை ஆசீர்வதிக்க, கொடிமரத்தில் வாணவேடிக்கைகளுடன் கொடியேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருப்பலி மற்றும் மறையுரை நடத்தப்பட்டது. திருவிழாவின் 6-வது நாளான வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி மரியன்னை மாநாடு, 7-ம் நாளான வரும் 12-ம் தேதி காலை 8 மணிக்கு புதுநன்மை விழா, 9-ம் நாளான 14-ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி மற்றும் ஆராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10-ம் திருநாளான ஆகஸ்ட் 15-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு தேரடித் திருப்பலி நடைபெறுகிறது.  அதைத் தொடர்ந்து,  கும்பிடு சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Sponsored


திருவிழா ஏற்பாடுகளை ஆலயப் பங்குத்தந்தைகள், காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி இறைமக்கள் செய்து வருகின்றனர். காமநாயக்கன்பட்டி திருவிழாவையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருவிழாவை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடியிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மருத்துவ முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு, இயேசுவின் தந்தையாகிய புனித சூசையப்பரின் வரலாறு ஆகியவற்றை தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்ப தமிழ் இலக்கியத்தில் ‘தேம்பாவணி’ என்ற சிறப்பு பெற்ற காவியத்தையும் எழுதிய வீரமாமுனிவர் இத்தலத்தின் 7-வது பங்குத்தந்தையாக சேவை ஆற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Trending Articles

Sponsored