கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்! - காவேரி மருத்துவமனை அறிக்கைSponsoredஉடல்நலக்குறைவால் சிகிச்சைபெற்றுவரும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலைகுறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக கருணாநிதி ஓய்வில் இருந்துவந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை மருத்துவர்கள், அவருக்கு கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை அளித்துவந்தனர். இந்த நிலையில், திடீரென அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்படவே அவர், காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 28-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு மருத்துவக்குழுவினர் தொடர் சிகிச்சை அளித்துவருகின்றனர். அவரது உடல்நிலைகுறித்து காவேரி மருத்துவமனை தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டுவருகிறது. அந்த வகையில், இதுவரை 6 அறிக்கைகள் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டிருக்கின்றன. நேற்று மாலை வெளியான அறிக்கையில், `வயது முதிர்வின் காரணமாக, தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் உறுப்புகளைச் செயல்படவைப்பது சவாலாக உள்ளது. அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது; தொடர்ந்து அவர், மருத்துவக் கண்காணிப்பில் இருந்துவருகிறார். கருணாநிதிக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைக்கு அவரின் உடல்நிலை ஒத்துழைப்பதுகுறித்து அடுத்த 24 மணிநேரத்துக்குப் பிறகு தெரியவரும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Sponsored


இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்த இந்த சந்திப்புக்குப் பின்னர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டி.ஜி.பி ராஜேந்திரன் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். மேலும், வெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகள் அனைவரும் சென்னைக்கு உடனடியாக வருமாறு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும், கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டு, முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். கருணாநிதியின் உடல்நிலைகுறித்து அறிய தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பாக குவிந்தவண்ணம் இருக்கின்றனர். 

Sponsored


இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலைகுறித்து காவேரி மருத்துவமனை தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``கருணாநிதியின் உடல்நிலையில் கடந்த சில மணி நேரமாக பின்னடைவு ஏற்பட்டுவருகிறது. தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும், அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் மோசமடைந்துவருகின்றன. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Trending Articles

Sponsored