கருணாநிதி நல்லடக்கத்துக்கு மெரினாவில் அனுமதி மறுப்பு ஏன்! - பின்னணி சர்ச்சைகள், சமரசங்கள்



தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அண்ணா சமாதி அருகே இடம் அளிக்கப்படாததைக் கண்டித்து, காவேரி மருத்துவமனை வாசலில் பெரும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர் தொண்டர்கள். ‘கருணாநிதிக்கு இடம் அளிக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். சில அரசியல் காரணங்களால் அமைதி காக்கிறார்’ என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

Sponsored



காவேரி மருத்துவமனையில், கடந்த 10 நாள்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த கருணாநிதியின் உடல்நிலை, நேற்று கடும் பின்னடைவைச் சந்தித்தது. இதையடுத்து, அவருக்கு 24 மணி நேர கெடுவை விதித்தனர் மருத்துவர்கள். இன்று அவரது உடல்நிலையில் பெரிதாக முன்னேற்றம் எதுவும் இல்லாததால், அடுத்தகட்டப் பணிகளைத் தொடங்குமாறு குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினர் மருத்துவர்கள். இதன்பின்னர், கலங்கிய கண்களோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கக் கிளம்பினார் ஸ்டாலின். அவருடன் அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் உடன் சென்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த சந்திப்பில், ‘உங்கள் கோரிக்கைகளைப் பரிசீலிக்கிறேன். எங்கள் தரப்பில் எந்தவிதச் சிக்கலும் இல்லை’ என முதல்வர் தரப்பில் விவரித்ததாகத் தெரிவித்தனர் ஆளும்கட்சி நிர்வாகிகள். 

Sponsored


இதற்கு முன்னதாக, நேரு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் கடந்த 6-ம் தேதி முதல்வரைச் சந்தித்து இதே கோரிக்கையை வைத்தபோது, ‘காந்தி மண்டபம் அருகில் இடம் பார்த்துக்கொள்ளலாம். அண்ணா சமாதியில் கிடைப்பது அரிது’ எனத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே, இன்று எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். அந்த நேரத்தில் எந்தப் பதிலும் சொல்லாமல் நேரம் கடத்திப் பதில் அளித்தது, தி.மு.க தரப்பைக் கொந்தளிக்கவைத்துவிட்டது. ‘நாம் நினைத்திருந்தால் எப்போதோ இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம். காலம் தாழ்த்தியதன் விளைவுதான் இதெல்லாம்’ எனக் குடும்ப உறுப்பினர்கள் கொந்தளித்தனர். 

Sponsored


இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், “அண்ணா சமாதியில் இடம் கொடுக்கப்படுவது தொடர்பாக, கடந்த மூன்று நாள்களுக்கும் மேலாக கருத்து மாறுபாடு இருந்து வந்தது. அ.தி.மு.க தரப்பிலிருந்து வரும் எதிர்ப்புகளைக் கவனித்த கனிமொழி, ‘ஒரு போன்காலில் பிரதமரிடம் அனுமதியை வாங்கிவிட முடியும்’ எனக் கூறியபடியே அவரைத் தொடர்புகொண்டு பேசினார். அங்கிருந்தும் நல்ல பதிலே கிடைத்துள்ளது. இதன் பின்னர், நேற்று கருணாநிதியைச் சந்திக்க வந்த நிதின் கட்கரியிடமும் இந்த விவரத்தை எடுத்துக் கூறியிருக்கிறார் ஸ்டாலின். அவரும், நான் முதல்வரிடம் பேசுகிறேன் என உறுதியளித்தார். இவ்வளவும் நடந்த பிறகு, ஆளும்கட்சி தரப்பில் அனுமதி மறுக்கப்படுவதன் பின்னணியில் பா.ஜ.க அரசு இருப்பதாகச் சந்தேகிக்கிறார் ஸ்டாலின். 

தங்களிடமிருந்து பா.ஜ.க நிர்வாகிகள் சில வாக்குறுதிகளை எதிர்பார்ப்பதால்தான், சமாதியில் இடம் கொடுக்காமல் இழுத்தடிப்பதாகவும் குடும்ப உறவுகள் நினைக்கின்றனர். ‘தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான கலைஞருக்கு இடம் கொடுப்பதைப் பெருந்தன்மையான விஷயமாகத்தான் எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். ஆனால், டெல்லியின் நோக்கம் வேறு விதமாக இருக்கிறது. இப்படியோர் அரசியல் மூவ் நடப்பதை அறிந்து பா.ஜ.க-வின் சிக்னலைப் பெறுவதற்காகத் தனக்கு வேண்டிய முக்கிய நபர் ஒருவரை டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் ஸ்டாலின். அவரிடம் இருந்தும் உறுதியான தகவல் வரவில்லை. நாளை மாலைக்குள் அண்ணா சமாதியில் இடம் கிடைத்துவிடும் என நம்பிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்” என்றார் விரிவாக. 

அதேநேரம், சமாதி விவகாரம் குறித்துப் பேசும் அ.தி.மு.க நிர்வாகிகளோ, “ஜெயலலிதா பாணியிலேயே இந்த விவகாரத்தை அணுகும் முடிவில் எடப்பாடி பழனிசாமி இல்லை. ‘அனுமதி கேட்டு வந்தால் சட்டச் சிக்கல்களை விவரித்துக் கூறுங்கள். தி.மு.க எதிர்ப்பை வலுப்படுத்தினால்தான், நீங்கள் உயர முடியும். அதையும் மீறி சமாதிக்கு இடம் அளித்தால், அ.தி.மு.க தொண்டர்களின் வாக்குகளே கிடைக்காமல் போய்விடும்’ என்றெல்லாம் கட்சி நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தியுள்ளனர். டெல்லியின் அழுத்தம் காரணமாகத்தான் அமைதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்கின்றனர். 

“அண்ணா சமாதியில் உடனடியாக இடம் அளித்தால், ‘தி.மு.க-வோடு கூட்டு வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள்’ என்ற எண்ணம் தோன்றிவிடும். எனவே, பிரச்னை வீரியமானதும் அனுமதி கொடுத்துவிடுவார் எடப்பாடி பழனிசாமி. அண்ணா சமாதி அருகில் நிச்சயம் இடம்பெறுவார் கருணாநிதி” என்ற குரல்களும் கோபாலபுரம் வட்டாரத்தில் எதிரொலிக்கின்றன. இதுதொடர்பாக தி.மு.க தாக்கல்செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. 



Trending Articles

Sponsored