அண்ணா அருகே இட ஒதுக்கீடு... இறுதிப் போராட்டத்தில் கருணாநிதி !Sponsoredதமிழகத்தின் முக்கியத் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகிய இருவருமே கருணாநிதியின் தனித்திறமைகளை நன்கு அறிந்து, அவரைச் சந்தித்த மாத்திரத்திலேயே அரவணைத்துக் கொண்டதோடு, அந்தந்தக் காலக்கட்டத்தில் இருபெரும் தலைவர்களும் தங்களோடு கருணாநிதியை ஆதரித்து வைத்துக் கொண்டனர். 

திருவாரூர் மாவட்டத்தின் திருக்குவளை மண்ணில் 1924 ஜூன் மாதம் 3-ம் தேதி பிறந்தவர் கருணாநிதி. சண்முகசுந்தரம், பெரியநாயகி ஆகியோர் கருணாநிதியுடன் பிறந்த சகோதரிகள். பள்ளிப் பருவத்திலேயே 'மாணவ நேசன்' என்ற கையெழுத்துப் பிரதியைத் தொடங்கி, எதிர்கால 'முரசொலி'-க்கு அடித்தளமிட்டவர் கருணாநிதி. அடுத்ததாக, அரசியல் பாதைக்கு 'மாணவர் தமிழ் மன்றம்' என்ற அமைப்பின் மூலம் வித்திட்டவர் அவர். அந்தக் காலகட்டத்திலேயே கருணாநிதியின் அழைப்பை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அப்போது பயின்றுவந்த க. அன்பழகன், கே.ஏ. மதியழகன் ஆகியோர் அந்த மன்றத்தில் சிறப்புரையாற்றினர்.

Sponsored


'பதினைந்து வயதில் கையெழுத்துப் பத்திரிகை, பதினேழு வயதில் மாணவர் மன்றம்' என்று இளமையிலேயே புலிப்பாய்ச்சல் கொண்டு செயல்பட்ட கருணாநிதி, தன்னுடைய பதினெட்டாவது வயதில் மேலும் வேகத்தைக் கூட்டினார். ஆம்...1942-ம் ஆண்டில் அறிஞர் அண்ணாவின் 'திராவிட நாடு' ஏட்டில் கருணாநிதி எழுதிய 'இளமைப்பலி' என்ற கட்டுரை பிரசுரம் ஆனது. அந்தக் கட்டுரையின் எழுத்து வீச்சைக் கண்டு, கிறங்கிப்போன, அண்ணா, அந்தக் கட்டுரையை எழுதிய கருணாநிதியைக் கண்டிப்பாக ஒருநாள் பார்க்க வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டார். அவர் நினைத்துக் கொண்டிருந்த அந்த நாளும் வந்தது. திருவாரூரில் விழா ஒன்றில் பங்கேற்கத் தேதி கொடுத்திருந்தார் அண்ணா. விழாவை ஏற்பாடு செய்தவர்கள், அண்ணாவை வரவேற்று அழைத்துப் போக, ஊர் எல்லையில் கூடி நின்றிருந்தனர். அப்போது, அவர்களிடம் அண்ணா, "இந்த ஊரில், கருணாநிதி என்று ஒருவர் இருக்கிறார். அவரை நான் பார்க்க வேண்டும்" என்றார். அண்ணாவின் எண்ணத்தை நிறைவேற்ற, கிளம்பிப்போன விழாக்குழுவினர், அடுத்த சில நிமிடங்களில் மாணவனாக இருந்த கருணாநிதியை அண்ணா முன்பு கொண்டு நிறுத்தினார்கள். இளமைப்பலி கட்டுரையை எழுதியவர், பெரிய ஆளாக இருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்த அண்ணாவுக்கு வியப்பு மேலும் அதிகமாகி விட்டது. ஒன்றும் சொல்லிக் கொள்ளாமல், "அருமையான கட்டுரைப்பா, நல்லா எழுதியிருக்கீங்க, நல்லா வருவீங்க" என்று பாராட்டிவிட்டு, கருணாநிதியின் முகத்தை தன் நினைவில் ஏற்றிக்கொண்டார்.

Sponsored


இந்தச் சந்திப்புதான், கருணாநிதியின் எதிர்காலத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது.  எழுத்து, பத்திரிகை, மாணவர் மன்றம் என்றிருந்த கருணாநிதி, நாடகங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஒன்றல்ல, இரண்டல்ல ஒரே ஆண்டில் இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை நடத்தினார். அவருடைய நாடகங்களில் தமிழர் நலன், பகுத்தறிவு, அரசியல் நையாண்டிகள் தூக்கலாக இருக்க, கருணாநிதியின் திறமைகள் குறித்து, பெரியார் கவனத்துக்குப் போனது. கருணாநிதியைப் பார்க்க விரும்பி, அவரை வரவழைத்தார் பெரியார். கருணாநிதியைச் சந்தித்துப் பேசிய சில நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தார், 'குடியரசு' வார இதழுக்கு துணை ஆசிரியராக கருணாநிதியை நியமிப்பது என்று. நியமித்தும் விட்டார்.

அதே காலகட்டத்தில்தான் பத்மாவதியுடனான கருணாநிதியின் முதல் திருமணம் (1944) நடந்தது. திருவாரூரில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தார் கருணாநிதி. 'எழுத்தாளர், திராவிடர் கழகப் பேச்சாளர், ஆற்றலாளர் கருணாநிதி' என்று விளம்பரப்படுத்தப் படாத இமேஜ், கோடம்பாக்கம் பக்கமாக இடம்பெயர்ந்தது. அப்போது, கோவை ஜூபிடர் நிறுவனம், தங்களின் 'ராஜகுமாரி' திரைப்படத்துக்கு வசனம் எழுத கருணாநிதிக்கு வாய்ப்பு வழங்கியது. சினிமாவில் கருணாநிதி, சிகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில்தான், பத்மாவதி உடல்நலக் குறைவால் காலமானார். கைக்குழந்தை மு.க.முத்துவை ஒரு தோளில் சுமந்தபடி, ஒரு போராட்ட வாழ்க்கையை தனி மனிதனாக எதிர்கொண்டார் கருணாநிதி. ஓரிரு ஆண்டுகள் இடைவெளியில் தயாளு அம்மாள், கருணாநிதிக்கு (1948, செப்டம்பர்,15) துணையாகத் தோள்கொடுக்க வந்தார். இருவருக்கும் திருமணம் ஆனது. அடுத்த நான்காண்டுகளில் (1952) கருணாநிதியின் புகழ், பராசக்தி படத்தின் மூலம் உச்சத்தைத் தொட்டது. கருணாநிதியின் வசனத்தை உச்சரித்த, வி.சி. கணேசனும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனாக மாற, இந்தப் படமே காரணமாக அமைந்தது.

திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து, தி.மு.க. தோன்றிய பின்னர், தி.மு.க. நடத்திய கல்லக்குடி ரயில் மறிப்புப் போராட்டம் (1953 ஜூலை), கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ரயிலை மறித்தக் குற்றத்திற்காக ஆறுமாத கடுங்காவல் சிறைவாசம் பெற்ற கருணாநிதி, சட்டத்தை உருவாக்கும் சட்டமன்றத்துக்குள் நுழையவும் இந்த சிறைவாசமே கைகொடுத்தது. 1957-ல் குளித்தலை தொகுதியில் வென்றவர், தொடர்ந்து அவர் சந்தித்த அனைத்துச் சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வியையே சந்திக்காமல் வெற்றிவாகை சூடினார். தி.மு.க. எதிர்கொண்ட 1967-ம் ஆண்டு பொதுத்தேர்தல், தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியது. 20 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தத் தேர்தலாக அது அமைந்தது. தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளாக, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, ஆட்சியைக் கைப்பற்ற முடியாதவாறு அந்தத் தேர்தல் இருக்கும் என்பது அப்போது தெரிந்திருக்க முடியாது. தமிழகத்தை அன்றுதொடங்கி இன்றுவரை தி.மு.க.வும், அதில் இருந்து பிரிந்த அ.தி.மு.க.வும் ஆட்சி செய்து வருகின்றன. 1969-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தி.மு.க நிறுவனரும், தமிழக முதல்வராக இருந்தவருமான அண்ணா மறைந்ததும், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கருணாநிதி கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமையேற்றார். மத்திய - மாநில அதிகாரப்பங்கீடு பற்றி நிர்ணயிக்க 'ராஜமன்னார்' குழு அமைத்ததும், போக்குவரத்துத் துறையை அரசுத் துறை ஆக்கியதும் கருணாநிதியின் அன்றைய சாதனைகளாக அமைந்தன. 13 முறை சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தோல்வியையே சந்திக்காத எம்.எல்.ஏ, ஐந்துமுறை முதலமைச்சர் என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டவர் கருணாநிதி மட்டுமே.

மாநில தலைநகரங்களில் சுதந்திரத் தினத்தன்று முதலமைச்சர் கொடியேற்றும் உரிமை, சொத்துக்களில் பெண்களுக்கு சமஉரிமை, மகளிர் சுய உதவிக்குழு, விவசாயிகளின் நலனுக்காக உழவர் சந்தை, கைரிக்‌ஷா ஒழிப்பு உள்ளிட்ட பல சாதனைகளை சட்டப்பூர்வமாக்கி, அதில் வெற்றி கண்டவர் கருணாநிதி. மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் போன்ற சொல்லாடல்களை வழக்கு மொழியாக்கிய தொலைநோக்கு சிந்தனையாளராகவும் கருணாநிதி திகழ்ந்தார்.

கதை, வசனம் எழுதி அனைத்து சினிமாப் படங்களிலும் சமூக மாற்றம் மற்றும் பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடையே நயம்படப் புகுத்திய பெருமையும் கருணாநிதியையே சேரும். எழுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென தன்னிகரில்லா இடம்பிடித்தவர். தமிழகத்தின் அன்றாடச் செய்திகளிலும் தொடர்ந்து இடம் பிடித்த பெருமை கருணாநிதிக்கு உண்டு. அப்பேற்பட்ட பெருமைக்குரிய கருணாநிதி, தன் மறைவுக்குப் பின்னரும் மெரினாவில் இடம் ஒதுக்கும் பிரச்னையில் தலைப்புச் செய்தியாகி இருக்கிறார். இறப்பு என்றாலும் அதை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் நாளாக 7.8.2018 என்று கருணாநிதியின் இறப்பு நாள் அமைந்திருப்பதை என்னவென்று சொல்வது? 

பின்தங்கிய மக்களின் இட ஒதுக்கீடுக்காகப் போராடி, சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்த கருணாநிதியின் உடலை, அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்வதற்காக இடம் கேட்டு, மறைவுக்குப் பிறகும், அவருடைய உடன்பிறப்புகள் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் யாருமே நினைத்துப் பார்த்திருக்க முடியாது.

வீடற்றோருக்கு இரண்டு சென்ட் நிலம் வழங்கும் திட்டம் கொண்டு வந்தவர், கருணாநிதி. இன்று கருணாநிதியின் உடலை அடக்கம் செய்து கொள்ள, தமிழக அரசு, 'இரண்டு ஏக்கர் நிலம் தருகிறோம்' என்று சொல்கிறது. அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றவருக்கு, அந்த இதயத்தின் அருகில் இடம் கிடைப்பது நீதிமன்றத்தின் கையில் இருப்பது காலத்தின் விந்தை...!Trending Articles

Sponsored