வரலாற்றுத் தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்! - திருமாவளவன்Sponsored
"அனைத்துத் தளங்களிலும் அளப்பரிய சாதனைகள் செய்து அழியாப் புகழீட்டியுள்ள வரலாற்றுத் தலைவர் கருணாநிதிக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதை வழங்கிச் சிறப்பித்திட வேண்டும்" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``அன்னைத் தமிழைக் காப்பதற்காக ஆவேச நெருப்பாய் ஆர்த்தெழுந்து, அரசியல் களத்தில் தமிழ்க்கொடி ஏந்தி அகவை பதினான்கில் அடியெடுத்து வைத்தவர் அரசியலறிஞர் கருணாநிதி. பள்ளிக்குச் செல்லும் பாலபருவத்தில் போருக்குச் செல்லும் படைவீரனாய்ப் பொதுவாழ்வைத் தொடங்கிய போராளித் தலைவர் கருணாநிதி.

Sponsored


எண்பது ஆண்டுகள் பொதுவாழ்க்கை; எனினும், ஒவ்வொரு நொடியும் போராட்டம்! எத்தனை எத்தனை இடர்கள்; தடைகள்! எத்தனை எத்தனை சதிகள்; பழிகள்! அனைத்தையும் தகர்த்துத் தவிடுபொடியாக்கி, அரசியல் சிகரத்தின் உச்சத்தைத் தொட்ட ஆற்றலாளர் தலைவர் கருணாநிதி. அவர் அண்ணாவுக்குத் தம்பி; அதனால், எதையும் தாங்கும் இதயம்! அவர் பெரியாருக்குப் பிள்ளை; அதனால், போர்க்குணத்தில் இமயம்! அவர் தமிழுக்குத் தொண்டர்; அதனால் தமிழினத்துக்குத் தலைவர்! ``தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்னும் பாவேந்தரின் வாக்குக்கேற்ப கருணாநிதிக்கு என்றும் சாவே இல்லை! கருணாநிதி என்னும் இந்த ஒற்றைச்சொல், நமது இன்பத் தமிழின் எல்லையில்லா இலக்கியமாய் விரிந்து பரந்து உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிறது.

Sponsored


மூவாத் தமிழின் மூச்சாய் இயங்கியவர் முத்தமிழறிஞர் கருணாநிதி. தமிழுக்கு மூச்சு அவர் என்றால், அவருக்கு மூச்சுத் தமிழ்! தமிழுக்கு அடுத்து சமூகநீதியும் சமத்துவமும் தாம் அவருக்குக் கொள்கை மூச்சாகும். அனைத்துச் சாதியினரும் அர்ச்சராகச் சட்டம், அனைத்துச் சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க சமத்துவபுரம் ஆகியவை அவற்றுக்குச் சான்றுகளாகும். தலித்துகள், பழங்குடிகள், மகளிர், சிறுபான்மையினர், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் போன்ற விளிம்புநிலை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கருணாநிதி, தமிழுக்கு, தமிழருக்கு, தமிழ்நாட்டுக்கு, தமிழீழத்துக்கு, மாநில உரிமைகளுக்கு என தனது வாழ்வை முழுமையாக ஒப்படைத்துக்கொண்ட மாமனிதர் ஆவார். அவரது இழப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்திய தேசத்துக்கேப் பேரிழப்பாகும்.

மிகவும் எளிய சமூகப்பின்னணியில் தோன்றி, அரசியல், சமூகம், இலக்கியம் போன்ற அனைத்துத் தளங்களிலும் அளப்பரிய சாதனைகள் செய்து அழியாப் புகழீட்டியுள்ள வரலாற்றுத் தலைவர் கருணாநிதிக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதை வழங்கிச் சிறப்பித்திட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். வரலாறாய் வாழும் கலைஞருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்!" என்று கூறியுள்ளார்.Trending Articles

Sponsored