``சொந்த ஊர்ப் பாசத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத கருணாநிதி!" - ஓட்டுநர் பகிரும் நினைவுகள்Sponsoredமார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் நல்லசிவமும், கலைஞர் கருணாநிதியும் ஒருமுறை காரில் பயணம் செய்தனர். அப்போது, ``'கார் டிரைவர் சம்பத் உங்க ஊர்க்காரர்' என்று கருணாநிதியிடம் நல்லசிவம் அறிமுகம் செய்ததும், என் அப்பா பெயரையும், தெரு பெயரைக் கேட்டுத் தெரிந்துகொண்ட கருணாநிதி, எங்க குடும்பக் கதை மொத்ததையும் சொல்லி மகிழ்ந்தவர்" என்கிறார் கார் ஓட்டுநரும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான சம்பத்.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, தன் சொந்த ஊரை உள்ளடக்கிய திருவாரூர் மாவட்ட மக்களைக் கண்டாலே உள்ளமும், இதயமும் அப்படியே குளிர்ந்து போகும். அந்த அளவுக்குத் தன் சொந்த ஊர் மக்களின் மீது பாசம் கொண்டவர் கருணாநிதி என்பதற்கு சம்பத்தின் மலரும் நினைவுகளே சாட்சி.

திருவாரூரைச் சேர்ந்தவரும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை அலுவலகத்தில் வாகன ஓட்டுநராக இருப்பவருமான சம்பத், ``கருணாநிதி தன்னிடம் காட்டிய ஊர்ப் பாசத்தை" பகிர்ந்துகொண்டார்.

Sponsored


Sponsored


மலரும் நினைவு 1:

``1983-ம் ஆண்டு உலக வங்கி நிதியுதவியோடு மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர். அதற்காக மீனவர் குப்பங்களைக் காலிசெய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மீனவர்கள் தங்களின் இடத்தை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. இந்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் தேவாரம் மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் தலைமையில் நள்ளிரவில் மீனவர்களின் வீடுகளுக்குள் காவல்துறை புகுந்து மீனவர்களை துவம்சம் செய்தது. அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடத்த திட்டமிடப்பட்டது. அதில் கலந்துகொள்வதற்காக கருணாநிதியின் காருக்கு அடுத்து, மார்க்ஸிஸ்ட் முன்னாள் மாநிலச் செயலாளர் நல்லசிவம் கார் போய்க் கொண்டிருந்தது. திடீரென கருணாநிதியின் கார் நின்றுவிட்டது. உடனே எங்கள் காரில் ஏறி முன் சீட்டில் உட்காந்தார் கருணாநிதி. கார் சிறிது தூரம் போனதும், நல்லசிவம் சொன்னார், `சம்பத் உங்க ஊர்க்காரர்' என்று. உடனே, `எந்த ஊருய்யா நீ' என்று கேட்டார் கருணாநிதி. நான், திருவாரூர் என்று சொன்னேன். `எந்த தெரு?' என்று கேட்டார். `வைரவன் சந்து' என்றேன். `வைரவன் தெருவா, சந்தா` என்று கேட்டார். `வைரவன் சந்து' என்றேன். `உங்க அப்பா பேரு என்ன?' கருணாநிதி கேட்டார். `வைரவன் செட்டியார், அடுப்புக் கரிக்கடைக்காரர்' என்றேன். எங்க குடும்ப தலைமுறையையே சொல்ல ஆரம்பித்துவிட்டார் கருணாநிதி. மேலும், `தோழர் நல்லசிவத்திடம் எனக்கு ஒரு டிரைவர் வேணும், என் மருமகள் துர்கா அடிக்கடிக் கோயிலுக்குப் போறா...' என்றார். உடனே, நல்லசிவம், `நீங்க சம்பத்தை இழுத்துறாதீங்க. எங்களுக்கே இப்பத்தான் ஒரு நல்ல ஓட்டுநர் தோழர் கிடைத்திருக்கிறார்' என்றார். 

உடனே கருணாநிதி, `சம்பத் நம்ம ஏரியாவுல இருந்துக்கிட்டு, நீ எப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்த?' என்றார். குறுக்கிட்ட தோழர் நல்லசிவமோ, `சம்பத், அ.தி.மு.க.-காரர்' என்றார். உடனே நான், `எம்ஜிஆர் ரசிகன், கட்சிக்காரன் கிடையாது' என்றேன். `எந்த உதவின்னாலும், எப்போதும் நீ என்கிட்ட வரலாம்' என்று சொன்னபோது, மெரினா கடற்கரையை அடைந்துவிட்டோம்" என்றார்.

மலரும் நினைவு 2:

``மேற்குவங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவின் மனைவிக்கு கண் ஆபரேஷன் செய்வதற்காக சென்னை வந்தார். அப்போது, தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தார். சென்னை விமான நிலையத்துக்குக் குண்டுதுளைக்காத அம்பாசிடர் கார் வந்தது. `நான் முதல்வராக இங்கு வரவில்லை. என் மனைவிக்காக மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன்' என்று சொல்லி, கட்சியோட காரில் ஏறிக்கொண்டார் ஜோதிபாசு. இதற்கிடையே கருணாநிதி வீட்டில் ஜோதிபாசுவுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டைனிங் டேபிள் முன் எல்லோரும் உட்காரும்போது என்னையும் அழைத்து உட்கார வைத்தார் ஜோதிபாசு. அப்போது கருணாநிதி சொன்னார், `சம்பத், என் ஊர்க்காரர். என் உறவுக்காரரும்கூட' என்று என்னை அறிமுகப்படுத்தினார். அப்போது, `சம்பத், நீ வராம இருக்காதே, இவுங்க வந்தாத்தான் வரணும்னு இருக்கக் கூடாது. அடிக்கடி வந்து போய்யா' எனப் பாசத்தோடு சொல்லி அனுப்பினார்".

மலரும் நினைவு 3:

``என்.வரதராஜன் உடல் நலம் சரியில்லாத நேரம் அது. அப்போதும் கருணாநிதிதான் முதலமைச்சர். அப்பாயின்மென்ட் வாங்கிட்டு கோட்டையில சந்திக்கப் போகும்போது, பத்து நிமிஷம் லேட்டாயிடுச்சு. அந்த நேரம் பார்த்து உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வந்துட்டார். உடனே கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா? `என்.வி பத்துநிமிசம் வெயிட் பண்ணுங்க. உங்ககிட்ட நிறைய மனம் விட்டு பேசவேண்டியது இருக்கு. சம்பத்து, நீ போயிடாதடா கீழபோகச் சொல்வானுங்க, ஓரமா நில்லுடா...' அப்படின்னார். அவர், சொன்னது மாதிரியே எங்களைத் திரும்ப அறைக்குள் அழைத்துப் பேசினார். அந்தச் சம்பவத்தை இப்போது நினைத்தாலும், எனக்கு உடம்பெல்லாம் மெய்சிலிர்த்துப் போகும். அந்தநாள் என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்". 

மலரும் நினைவு 4:

``திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், அகில இந்திய மாதர் சங்கத் தலைவருமாக இருந்தவர் பாப்பா உமாநாத். இவர், கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரைப் பார்க்க கோட்டைக்குப் போகும்போது என்னையும் அழைத்துச் சென்றார். அப்போது, என்னிடம் கருணாநிதி, `என்னை எப்போதும் வேண்டுமாலும் நீ சந்திக்கலாம்; என்ன உதவி என்றாலும் தயங்காமல் கேட்கலாம்' என்று சொல்லி ஊர்ப் பாசத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல் என்னிடம் எப்போதும் அன்புகாட்டியவர் கருணாநிதி".

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராக சம்பத் இல்லாமல் இருந்திருந்தால், கருணாநிதிக்குப் பிடித்த, அவருடைய ஊரைச் சேர்ந்த கார் டிரைவராக இன்றைக்கும் இருந்திருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.Trending Articles

Sponsored