அண்ணா சமாதியின் வலதுபுறத்தில் கருணாநிதியின் உடல் அடக்கம்!Sponsored 

அண்ணா சமாதிக்குப்பின்னால் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி நேற்று மாலை மரணமடைந்தார். அவரின் உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான தொண்டர்கள் அவருக்கு நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். கருணாநிதியின் உடலை, மெரினாவில் உள்ள அண்ணாசமாதியின் அருகே நல்லடக்கம் செய்ய செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவசர வழக்காக நேற்றிரவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழக அரசு, பதில் மனுத்தாக்கல் செய்ய இன்று காலை 8 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், மெரினாவில் அண்ணா சமாதியில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய இடத்தை ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதைக்கேட்ட தி.மு.க.வினர் மகிழ்ச்சியடைந்தனர். தீர்ப்பைக் கேள்விப்பட்டதும் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் ஆனந்தக் கண்ணீரில் நனைந்தனர். 

Sponsored


தீர்ப்பு குறித்து தி.மு.க. தரப்பு வழக்கறிஞர் வில்சன், ``ஸ்டாலின் வலியுறுத்திய கோரிக்கைகளில் மெரினாவில் அண்ணா சமாதியில் இடத்தை மட்டும் தமிழக அரசு ஒதுக்கவில்லை. அதற்குப்பதிலாக கிண்டி காந்தி நினைவிடம், ராஜாஜி அரங்கம் ஆகியவற்றில் 2 ஏக்கர் இடத்தை ஒதுக்குவதாக தமிழக அரசு அறிவித்தது. அதை எதிர்த்துதான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் மெரினாவில் அண்ணா சமாதிக்குப் பின்னால் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.

Sponsored
இதனிடையே, அண்ணா நினைவிடத்தின் வலதுபுறத்தில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்யும் இடம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.Trending Articles

Sponsored