மெரினாவில் துயில் கொள்ள கருணாநிதி விரும்பியது ஏன்?



ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகம் மீண்டும் கண்ணீர்க் கடலில் மூழ்கியுள்ளது. தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையடுத்து தமிழகம் கண்ணீர்க் கடலில் தத்தளிக்கிறது. தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்தது. இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்யத் தடையில்லை என்று அறிவித்துள்ளது. தீர்ப்பைக் கேட்டதும் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் முகத்தைப் பொத்திக் கொண்டு கண்ணீர் விட்டு அழுதார். கனிமொழி, துரைமுருகன், ஆ.ராசா ஆகியோரும் கண்ணீர் விட்டு அழுதது தி.மு.க தொண்டர்களை கலங்கடித்தது.

Sponsored


சென்னைக்கு அடையாளம் மெரினா கடற்கரை என்றால் மெரினா கடற்கரைக்கு அண்ணா சமாதி ஓர் அடையாளம். முதல்முறையாக இங்கே தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் உடல்தான் புதைக்கப்பட்டு அண்ணா சமாதியாக உருவாக்கப்பட்டது. இந்த அண்ணா சதுக்கம்  தி.மு.க-வினர் அ.தி.மு.க-வினர் இருவருக்குமே  மிக முக்கியமானது. அண்ணா சமாதியையொட்டி அருங்காட்சியமும் உள்ளது. 

Sponsored


தி.மு.க ஆட்சிக்காலத்தில் அண்ணா சதுக்கம் புணரமைக்கப்பட்டபோது, அதன்  முகப்பில் உதயசூரியன் உருவம் வடிவமைக்கப்பட்டது.  ஆட்சி மாறியதும் காட்சி மாறும் என்பதுபோல ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் முகப்பில் இருந்த உதயசூரியனை அகற்றிவிட்டு  இரு யானைத் தந்தங்களை அமைத்தார். அப்போது, அண்ணா சதுக்கம் முழுவதும் மார்பிள் பதிக்கப்பட்டது. சுனாமியின்போது அண்ணா சதுக்கம் பாதிப்புக்குள்ளாக, சுமார் ஒன்றரை கோடி செலவில்  புதுப்பிக்கப்பட்டது. தமிழக செய்தித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அண்ணா சதுக்கத்தைப் பராமரிக்கும் பொறுப்பு பொதுப்பணித்துறை செய்து வருகிறது. 

Sponsored


இறப்புக்குப் பின் மெரினாவில் துயில வேண்டுமென்பதுதான் கருணாநிதியின் விருப்பம். உயிருடன் இருக்கும்போதே ஒருமுறை தன் ஆசையை கருணாநிதி வெளிப்படையாக கூறியிருக்கிறார். மெரினாவில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்கு சமாதிகள் உள்ளன. இப்போது, நீதிமன்றம் கருணாநிதிக்கும் அடக்கம் செய்யத் தடை இல்லை என்று அறிவித்துவிட்டதால் தன் குருவின் மடியிலேயே தி.மு.க தலைவர் துயில் கொள்ளப் போகிறார்.

தமிழக அரசு இடம் தருவதாக அறிவித்த காந்தி மண்டபம் அருகே முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, பக்தவச்சலம், காமராஜர் ஆகியோருக்கு சமாதிகள் உள்ளன. 



Trending Articles

Sponsored