‘சமாதி விவகாரத்தை நான் பார்த்துக்கொள்கிறேன்!’  - ஸ்டாலினின் நள்ளிரவு தீர்மானம் Sponsoredமெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதிக்கும் இடம் பெற்றுத் தரும் சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் செயல் தலைவர் ஸ்டாலின். ' தமிழக அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என நிர்வாகிகள் கூறியபோது, அவர்களை அமைதிப்படுத்திவிட்டார். அவரது மௌனம்தான் வெற்றியைத் தேடித் தந்தது' என நெகிழ்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள். 

சென்னை, காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் வீட்டுக்குக் கருணாநிதி உடல் கொண்டு செல்லப்பட்ட அதேநேரத்தில், அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதிக்கு இடம் அளிக்க தமிழக அரசு மறுப்புத் தெரிவித்த தகவலை அறிந்து மிகுந்த மனவேதனைக்கு ஆளானார் ஸ்டாலின். 'சமாதி அமைவதற்கான நியாயங்களை எடுத்துக் கூறியும் அனுமதி மறுத்துவிட்டது எந்த வகையில் நியாயம்?' என முதல்வர் தரப்புக்குத் தகவல் தெரிவித்தனர் தி.மு.க நிர்வாகிகள். 'அண்ணா சமாதியில் இடம் இல்லை' என்ற தகவல் வெளியான சில நிமிடங்களில், காவேரி மருத்துவமனை வாசலில் போலீஸாரோடு மோதத் தொடங்கிவிட்டனர் தி.மு.க தொண்டர்கள். இதன் அடுத்தகட்டமாக, தி.மு.க முன்னணி நிர்வாகிகளைத் தொடர்புகொண்ட மாவட்ட நிர்வாகிகள், ‘அண்ணா சமாதியில்தான் கலைஞர் துயில் கொள்ள வேண்டும். இந்த அரசை இவ்வளவு நாள் விட்டு வைத்ததே தவறு. மாவட்டங்களில் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். செயல் தலைவரின் ஒப்புதல் வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்துள்ளனர். 

Sponsored


நிலைமை மோசமடைவதைக் கண்ட ஸ்டாலின், ‘பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்படக் கூடாது’ எனக் கண்டிப்பான குரலில் கூறியதோடு மட்டுமல்லாமல், ‘கழக உடன்பிறப்புகள் கட்டுப்பாடுகள் காத்து, அண்ணாவும் கலைஞரும் கற்றுத் தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை மனதில் உறுதியாக நிலை நிறுத்தி, எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் அளித்துவிடாமல் அமைதி காத்திட வேண்டும் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இதன்பிறகே, மாவட்ட நிர்வாகிகள் அமைதி காத்தனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், ``தமிழக அரசு இழுத்தடிப்பதைக் கண்டதும், தந்தை இறந்த துயரத்திலும் மிகப் பொறுமையாகவே இந்த விவகாரத்தைக் கையாண்டார் செயல் தலைவர். ‘இந்த விவகாரத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். நம்முடைய தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் தெரிவிப்போம். அமைதி காத்து வெற்றி பெறுவோம்’ எனக் கூறியதோடு, ராஜாஜி ஹாலில் இருந்தபடியே மூத்த வழக்கறிஞரை வில்சனை நேரில் அழைத்து விவாதித்தார். ‘சட்டரீதியாக எந்தெந்த விஷயங்களை முன்வைக்க வேண்டும்?’ எனத் தீவிரமாக ஆலோசித்தார். இதன்பின்னர், நீதியரசர் குலுவாடி ரமேஷிடம் கழக வழக்கறிஞர்கள் முறையிட்டனர். 

Sponsored


இந்த விவாதத்தில், தமிழக அரசு தரப்பில் மறுப்பதற்கான காரணங்களை விளக்கியுள்ளனர். இதையடுத்துப் பேசிய நீதியரசர், ‘ஒரு வார கால அவகாசம் கேட்பீர்களா? 10.30 மணி வரையெல்லாம் நேரம் கொடுக்க முடியாது. நாளை 8 மணிக்குள் உங்கள் தரப்பு விளக்கத்தைக் கொடுங்கள்’ எனக் கறாராகக் கூறிவிட்டார். இதன் பின்னரும் கழக வழக்கறிஞர்களிடம் நள்ளிரவு மீண்டும் விவாதித்தார் ஸ்டாலின். மெரினா தொடர்பாக, வழக்குப் போட்டவர்களும் உடனே வாபஸ் பெற்றுவிட்டனர். இதெல்லாம் அடுத்தடுத்து நடந்த அதிரடிகள். இப்படி நடக்கும் என எடப்பாடி பழனிசாமி எதிர்பார்க்கவில்லை. இன்று காலை, ‘காமராஜர், ராஜாஜி, ஜானகி ஆகியோருக்கெல்லாம் மெரினாவில் சமாதி அமைக்கப்படவில்லை’ என்றெல்லாம் அரசுத் தரப்பில் தெரிவித்தனர். சொல்லப் போனால், மெரினாவில் காமராஜருக்கு சமாதி அமைக்க வேண்டும் என அந்தக் காலத்தில் கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை. ‘தமிழக அரசின் பக்கம் தொழில்நுட்பரீதியான காரணங்கள் எதுவும் இல்லை. எங்கள் பக்கம் நியாயம் கிடைக்கும்’ என உறுதியாக நம்பினோம். இதற்குக் காரணம், இந்த விவகாரத்தை செயல் தலைவர் கையாண்டவிதம்தான். அவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டிருந்தால், தமிழகத்தில் நிலவரம் வேறு மாதிரி சென்றிருக்கும். 24 மணி நேரம் சமாதிக்காக நடந்த போராட்டம் சாதகமாக முடிவுக்கு வந்த உற்சாகத்தை வெளிப்படுத்த முடியாமல் குலுங்கி அழுதார் ஸ்டாலின்!” என்றார் கலக்கமும் மகிழ்வுமான குரலில்!Trending Articles

Sponsored