ஒரு வாரம் முன்னரே மெரினாவில் பதிந்த ஸ்கெட்ச்! கருணாநிதி சமாதிப் பணி அப்டேட்



Sponsored



ந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரும் சட்டமன்ற உறுப்பினருமான திமுக தலைவர் கருணாநிதிக்கு சமாதி அமைக்க மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

கருணாநிதியின் சமாதியானது அண்ணா சமாதிப் பகுதியில்தான் அமைக்கப்படுகிறது எனத் தெளிவாகக் கூறப்பட்டாலும், அந்தப் பகுதியில் சட்டப் பிரச்னை இருக்கிறது என அரசுத் தரப்பில் காரணம் கூறப்பட்டது. தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இது தொடர்பாக நேற்று இரவு விளக்கம் ஒன்றை வெளியிட்டார். ஆனால் அண்ணா சமாதி அமைந்துள்ள பகுதியானது கூவம் ஆற்றின் படுகைப் பகுதியில்தான் உள்ளது என்பதற்கான தெளிவான ஆவணங்கள் பொதுப்பணித்துறையிடம் உள்ளன. நீதிமன்றத்திலும் இது குறித்து சர்ச்சை எதுவும் இல்லை. ஆனாலும் கடற்கரைப் பகுதி மேலாண்மைச் சட்ட ஒழுங்குக்குள் வரும் பகுதியான எம்ஜிஆர் சமாதியையும் அதற்குள் அமைக்கப்பட்ட ஜெயலலிதா சமாதியையும் அண்ணா சமாதியுடன் இணைத்து தகவல்கள் பரப்பப்படுகின்றன. 

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் மறுப்புக்கெதிராக முறையீடு செய்யப்பட்டு, அதில் கருணாநிதி சமாதிக்கான அனுமதி வழங்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கருணாநிதியின் சமாதி கட்டுமானத்துக்கான பணிகளில் பொதுப்பணித் துறையினர் இறங்கினர். 

Sponsored


முன்னதாக, நேற்று இரவிலும் நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டால் அடுத்த கட்டமாக செய்யவேண்டிய பணிகளைத் தொடங்குவதற்காக பொதுப்பணித் துறை அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால் வழக்கு விசாரணை இன்று காலையும் நீட்டிக்கப்பட்டதால், எழிலகம் பொதுப்பணித் துறை வளாகத்தில் காலையிலேயே வந்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் காத்திருந்தனர். 

Sponsored


சமாதி கட்டுமானப் பணிகள் குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

“சமாதிக்குள் பெட்டியை வைப்பதற்காக சுமார் 8 அடி ஆழத்தில் பத்துக்கு நான்கு அடி பரப்பில் குழியை வெட்டி, சுற்றுச்சுவர் அமைக்கவேண்டும். பொதுவாக, முக்கால் அடி தடிமனுக்கு இந்தத் தொட்டியின் சுவர் அமைக்கப்படும்; பெட்டியின் அமைப்பைப் பொறுத்து ஒன்றரை அடி தடிமன் அளவும் கட்டப்படும். இந்தச் சுவருக்கு 22 செ.மீ. நீளம் 10 செ.மீ. அகலம் கொண்ட செங்கற்கள்தான் பயன்படுத்தப்படும். முக்கால் அடியோ ஒன்றரை அடியோ சுவரைக் கட்டிய பிறகு, அது ‘செட்’ ஆவதற்கு குறைந்தது மூன்று மணி நேரம் அவசியமாகத் தேவைப்படும். போதுமான அவகாசம் கிடைத்தால் உரிய முறைப்படி சமாதியை அமைக்கலாம். இதற்காகத்தான் பொறியாளர்கள் இரண்டு நாட்களாக பரபரப்பாக வேலைசெய்துவருகிறார்கள்” என்றனர், பெயர்கூற விரும்பாத சில அதிகாரிகள். 

ஜெயலலிதாவின் சமாதி அமைக்கப்பட்டபோது, அவர் முதலமைச்சர் என்பதால், பொதுப்பணித் துறையின் சார்பிலேயே பெட்டியும் தயார்செய்யப்பட்டது. ஜெயலலிதாவுடன் அவரின் வீட்டில் தங்கியிருந்த சசிகலாவின் ஆலோசனையுடன் ஜெயலலிதாவுக்கான பெட்டி உருவாக்கப்பட்டது. இப்போது 5 முறை முதலமைச்சரான கருணாநிதியைப் பொறுத்தவரை, திமுகவின் சார்பிலேயே பெட்டி தயார்செய்யப்படும்; எனவே, பொதுப்பணித் துறை முன்னாள் அமைச்சரும் திமுகவின் முதன்மைச் செயலாளருமான துரைமுருகனும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் தங்கள் தரப்பு யோசனைகளைக் கூறிவருகிறார். 

பொதுப்பணித் துறையின் கட்டடப் பிரிவு தலைமைப்பொறியாளர் மனோகரன், கண்காணிப்புப் பொறியாளர் (பொறுப்பு) மன்மதன், செயற்பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகர், உதவி செயற்பொறியாளர் ஆல்வின் மற்றும் உதவிப் பொறியாளர்கள் எழிலகம் வளாகம் அருகில் உள்ள துறைத் தலைமையகத்துக்கு வந்தனர். அண்ணா சமாதிக்கு துரைமுருகன் வந்ததையடுத்து, உரிய அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர். 

“நேற்று இரவே துரைமுருகன் உட்பட திமுக தரப்பினர் அண்ணா சமாதியில் கருணாநிதி சமாதிக்கான இடம் தொடர்பாக வந்து பார்த்துச்சென்றனர். ஒரு வாரத்துக்கு முன்னரும் அவர்கள் பார்த்துவிட்டுச் சென்றனர்” என பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். 



Trending Articles

Sponsored