`இனிமேல் கலைஞர் தாத்தா வரமாட்டாரா?'- அமைதிப் பேரணியில் கண் கலங்க வைத்த சிறுமிSponsoredதி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தஞ்சாவூரில் நடந்த அமைதி ஊர்வலத்தில் ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் சாப்பிடாமல் தன் அப்பாவோடு ஊர்வலத்தில் கலந்துகொண்டதோடு, ``கருணாநிதி தாத்தா ஓய்வெடுக்கப் போயிட்டார். இனிமேல் திரும்பி வரமாட்டார் என எல்லோரும் சொல்றாங்க. இனிமேல் அவர் வரமாட்டாரா?'' என  ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களிடம் அப்பாவியாய் கேட்டவருக்குப் பதில் சொல்ல முடியாமல் அனைவரும் தவித்தனர். அப்போது பெரியவர் ஒருவர், கருணாநிதி சூரியனாக எப்போதும் நம்முடன் இருப்பார்'' எனக் கூற, அனைவரும் கண் கலங்கியது சோகத்தை ஏற்படுத்தியது.

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, `தமிழகம் இருண்டது, ஓய்வறியா சூரியனே; ஓய்வெடுக்கச் சென்று விட்டாயோ, தமிழின் முகவரியே' என தஞ்சாவூர் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருந்தனர் தி.மு.க-வினர். மேலும், அனைத்துக் கட்சி சார்பில் ரயிலடியிலிருந்து அண்ணா சிலை வரை அமைதி ஊர்வலம்  நடைபெற்றது. இதில் சுமையா பாத்திமா என்ற ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி, தன் அப்பா மற்றும் தம்பியோடு  கலந்துகொண்டார். அவர் அப்பாவிடம் பேசினோம். ``நான் தி.மு.க கட்சியைச் சேர்ந்தவன். வீட்டில் எப்போதும் தலைவர் கருணாநிதியைப் பற்றி பேசிக்கொண்டிருப்பேன். அதை உன்னிப்பாக கவனிப்பாள் என் மகள். நேற்றிலிருந்து  நான் கவலையோடு இருந்தேன். `ஏன் அப்பா இப்படி இருக்கீங்க டிவியில வேற கருணாநிதி மறைந்துவிட்டார் எனச் சொல்றாங்க. கண்ணாடிப் பெட்டிக்குள் கருணாநிதி படுத்து இருப்பதையும் காண்பிக்கிறாங்க. இனிமேல் அவர்  நம்முன் வர மாட்டாரா' எனக் கேட்டவளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்தேன். ஒரு வழியாக என்னைத் தேற்றிக்கொண்டு நான், `கருணாநிதி தாத்தா ஓய்வெடுக்கப் போயிட்டார். இனிமேல் திரும்பி வரமாட்டார்' என்றேன். அதிலிருந்து அவளும் அமைதியாகிவிட்டாள்.

Sponsored


Sponsored


காலையிலேயே நான் அமைதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளக் கிளம்பினேன். அப்பா நானும் வரேன் எனச் சொன்னாள். சரி சாப்பிட்டுவிட்டு வா எனக் கூறினேன். எனக்கு சாப்பாடு வேண்டாம் எனக் கூறி என்னுடன் கிளம்பிவிட்டாள். அப்புறம் என் மகனும் நானும் வரேன் என அழ அவனையும் அழைத்துக்கொண்டு ஊர்வலத்துக்கு வந்து விட்டேன். இங்கும் எல்லோரிடமும் என்னிடம் கேட்டதையே கேட்கிறாள்'' என்றார்.

சுமையா பாத்திமாவிடம் கேட்டதற்கு, ``கருணாநிதி தாத்தா இனிமேல் நம் முன் வர மாட்டார் எனச் சொன்னாங்க. அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். கண்ணாடி பெட்டிக்குள் படுத்துள்ள அவருக்கு மக்கள் மாலை போட்டு அழுவதை டிவியில் பார்த்தேன். அதான் நானும் அவருக்கான இறுதி மரியாதையை செலுத்துவதற்கு அப்பாவோடு வந்தேன். இருந்தாலும் நம் முன் கருணாநிதி தாத்தா வரமாட்டாரா என்ற ஏக்கத்தோடு எல்லோரிடமும் கேட்டேன். யாரும் சரியாகப் பதில் சொல்லமாட்டேங்கிறாங்க. கருணாநிதி தாத்தா ஓய்வெடுக்கப் போய் விட்டாரா'' என நம்மிடமும் கேட்டாள் அதே குழந்தை தனத்துடன்.Trending Articles

Sponsored