``அத்தாச்சி’னு கூப்பிடுற குரலைக் கேட்கணுமே நானு!’ கருணாநிதிக்காகத் திருக்குவளையில் உருகும் 96 வயது பாட்டிSponsored``திருக்குவளைக்குச் சென்றால், நான் பிறந்த வீட்டுக்குக்கூடப் போய் பார்க்க முடியாது. அந்த அளவுக்குக் கூட்டம். பத்துப் பேர், நூறு பேரை இடித்துத் தள்ளிக்கொண்டுதான் உள்ளே நுழைய முடியும்.``பிறந்த ஊருக்குச் செல்ல நேரும்போது ஏற்படும் அன்புத் தொந்தரவுகளைப் பற்றி திமுக தலைவர் கருணாநிதி ஒரு நேர்காணலில் கூறியிருப்பார். அவர் எங்கு பேசினாலும் அதில் சொந்த ஊரான திருக்குவளை பற்றி ஒரு வரியாவது வந்துவிடும். தன்னுடைய பால்ய கால நண்பர் தென்னன் பற்றிப் பேசும்போது தனி உற்சாகம் வந்துவிடும் அவரின் குரலுக்கு. திருவாரூருக்கு எப்போது வந்தாலும் தென்னனைச் சந்திக்காமல் சென்றதேயில்லை என்று சொல்லலாம். 2011 ம் ஆண்டு தென்னன் இறந்தபோது ரொம்பவே கலங்கிவிட்டார். `இன்று என் ``நண்பனை'' இழந்து நிற்கிறேன். எனக்கு எத்தனையோ நண்பர்கள் உண்டென்ற போதிலும், ``நண்பன்'' என்ற தகுதியிலே முதலிடத்தில் வைத்துக்கருதப்படும், திருவாரூர் தென்னனை இன்று இழந்துவிட்டேன்!' எனக் கண்ணீர் பதிவை அளித்திருந்தார். கருணாநிதி தனது ஊரை, நண்பர்களை எவ்வளவு நேசித்தாரோ, அந்தளவுக்கு அவர்களும் இவரைப் போற்றிக்கொண்டாடுகின்றனர். 

தமிழ்நாட்டு காவிரி டெல்டா மாவட்டத்தில் கடைமடையில், திருவாரூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் திருக்குவளை. அங்கு எளிமையான குடும்பத்தில் பிறந்த கருணாநிதி தமிழ்நாட்டின் முதல்வராக ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். திமுக எனும் பெரும் அரசியல் கட்சியின் தலைவராக 50 ஆண்டுகள் பதவி வகித்துச் சாதித்திருக்கிறார் என்றால், அந்தப் பெருமை அந்த ஊருக்கும் உண்டல்லவா.. நேற்று மாலை, கருணாநிதி இறந்த செய்தியைக் கேட்டு திருக்குவளை கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அவர் பிறந்த வீட்டுக்கு மக்கள் வந்து தங்கள் துயரைப் பகிர்ந்துகொண்டு சென்ற வண்ணமிருக்கின்றனர். அவர்களில் கருணாநிதியை விட ஒரு வயது கூடுதலான பட்டம்மாள் ஆழ்ந்த துயரில் அழுதுகொண்டிருந்தார். அவரோடு பேசினோம். 

Sponsored


``சின்னப் பிள்ளையா இருக்கும்போது அவரோடு ஓடி, ஆடி விளையாண்டதெல்லாம் ஞாபகத்துக்கு வருது. அவங்க அம்மா, கோயில்ல வேலை பார்த்துட்டு இருப்பாங்க. அப்ப என்னோடத்தான் பேசிட்டும், சண்டை வளர்த்துட்டும் இருக்கும். கோயில்ல பதினெட்டு நாள் உற்சவம் நடக்கும். அப்ப, பட்டை சாதம் கொடுப்பாங்க. அதை வாங்கிட்டு வந்து, தூரமாக இருக்கிற எங்க வீட்டுல கொடுக்கும். பள்ளிக்கூடத்துக்குச் சேர்ந்துதான் போவோம். நல்லா படிக்கும். இன்னும்... சில விஷயங்க மறந்துடுச்சு. அப்புறம் பெரிய ஆளாயிடுச்சு. திருவாரூர்ல கூட்டத்துக்குப் பேச வந்தா போய்ப் பார்ப்பேன். நல்லாப் பேசும். நேத்து சாயந்தரம் இறந்துடுச்சுனு டிவியில பார்த்ததும் ரொம்ப கஷ்டமா இருக்கு. அத்தாச்சி, அத்தாச்சினுதான் என்னைக் கூப்பிடும். அப்படிக் கூப்புடுற குரலை ஒருவாட்டி கேட்கணுமே! " கண் கலங்குகிறார். அருகில் இருப்பவர்கள் அவரைத் தேற்றிப் பேசச் சொல்கிறார்கள். 

Sponsored


``இப்பக் கூட மெட்ராஸ் போய் ஒரு தடவைப் பார்த்துடணும்னு தோணுது... எனக்கும் வயசாயிடுச்சு. எங்க போறது? அப்படியே போனாலும் அவ்வளவு பெரிய கூட்டத்துல நாம எப்படிக் கிட்ட போய் பார்க்க முடியும்" என்று நா தழு தழுக்கச் சொல்கிறார் பட்டம்மாள். இவரைப் போலவே கருணாநிதியோடு பேசி, பழகிய பலரும் மிகுந்த வருத்தத்தோடு இருக்கின்றனர். சிலர் தங்கள் வீட்டில் ஒருவர் இறந்ததாகக் கருதி மொட்டை அடித்துக்கொண்டு துயரத்தை வெளிப்படுத்துகின்றனர். 

சின்னச் சிறு கிராமத்திலிருந்து தொடங்கிய கருணாநிதியின் அரசியல் பயணம் இந்தியாவே வியந்து பார்க்க வைத்தது என்றால் அது மிகையல்ல. அவரின் இழப்பு திருக்குவளையை உலுக்கிவிட்டது. Trending Articles

Sponsored