`கலைஞரும் எங்க அப்பாவும்..!’ - அந்த நாளை நினைவூட்டும் சோமுவின் மகள்Sponsoredகருணாநிதிக்கு கல்லக்குடி போராட்டம் முதல் தஞ்சாவூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டது வரை பக்கபலமாக உடன் இருந்து உதவிகள் செய்தவர் சோமு. இவர் தி.மு.க-வில் தஞ்சாவூரின் முதல் நகரச் செயலாளராகப் பதவி வகித்தவர். 1962 தேர்தல் சமயத்தில் சோமுவின் வீட்டுக்கு அருகிலேயே குடும்பத்தோடு குடியேறினார் கருணாநிதி. அப்போது முதல் இருவரும் குடும்ப நண்பர்களாக மாறினார்கள். `ஆறு மாதம் மட்டுமே அந்த வீட்டில் இருந்தாலும் எங்களையும் எங்க அப்பாவையும் என்றைக்குமே மறக்காமல் பல உதவிகளைச் செய்தவர் தலைவர் கலைஞர்'' என்கிறார் சோமுவின் மூத்த மகள் சரோஜா.

``தி.மு.க-வின் கோட்டை எனத் தஞ்சாவூரைச் சொல்வார்கள். அதற்கு காரணம் தஞ்சாவூரில் கருணாநிதியின் கால்கள் படாதே இடமே இல்லை என்கிற அளவுக்கு அவர் உழைத்ததே காரணம். சொந்த மாவட்டமான தஞ்சாவூரில் 1962-ம் ஆண்டு தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டார் கருணாநிதி. அப்போது தஞ்சாவூரிலேயே தங்கி வேலை பார்த்தால்தான் சரியாக இருக்கும் என எண்ணி அதற்காக அப்போதைய நகரச் செயலாளராக இருந்த என் அப்பா சோமுவை அணுகினார். அண்ணே எனக்குத் தஞ்சாவூரில் தங்குவதற்கு வீடு வாடகைக்குப் பாருங்க எனச் சொன்னார். அப்பாவும் நாங்க தங்கியிருந்த கொடிமரத்து மூலையில் எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டையே பார்த்துக்கொடுத்தார். ஓட்டு வீடான அதில் கருணாநிதி தன் குடும்பத்தோடு குடியேறிய உடனேயே தேர்தல் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார். அப்போ எனக்கு 14 வயசு இருக்கும்'' என மலரும் நினைவுகளில் மூழ்கி பேச ஆரம்பித்தார் 70 வயதுக்கு மேல் இருக்கும் சரோஜா.

Sponsored


மேலும் தொடர்ந்த அவர், அப்பாவும் கருணாநிதியும் எப்போதும் ஒண்ணாதான் இருப்பாங்க. கலைஞர் எப்பவுமே சுறுசுறுப்பாக இருப்பார். கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் பேனாவும் பேப்பருமாக உட்கார்ந்து எழுதிக்கொண்டே இருப்பார். தயாளு அம்மாள், கலைஞரின் அக்கா இரண்டு பேர் என எங்க குடும்பம் மாதிரியே அவங்க குடும்பமும் பெரியது. மு.க.முத்து, அழகிரி, ஸ்டாலின் எல்லாம் சின்ன குழந்தைங்களாக இருப்பாங்க. அப்பவே மு.க.முத்து தானே தாளம் தட்டி அழகா பாட்டெல்லாம் பாடுவார். செல்வந்தரான பரிசுத்தநாடாரை எதிர்த்து தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டார் கலைஞர். அப்பா கலைஞர் எல்லாம் பிரசாரத்துக்காக வெளியே சென்றதும் தயாளு அம்மாள் எங்க வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்து பேசிகிட்டு இருப்பாங்க.

Sponsored


கலைஞருக்கு கொத்தமல்லி சட்னின்னா ரொம்ப பிடிக்கும். காரம் அதிகமாக இருக்கக் கூடாது. எங்க வீட்டிலிருந்து கொத்த மல்லி சட்னி அறைத்துக் கொடுப்போம். திலகர் திடலில் நடந்த பிரசார கூட்டத்துக்கு தயாளு அம்மாளோடு சேர்ந்து எங்க குடும்பத்தினரும் சென்றோம். அப்ப நாற்காலி எல்லாம் கிடையாது. அனைவரும் தரையில் உட்கார்ந்துகொண்டு பேச்சை கேட்டோம். அப்ப கலைஞர் பேசிய பேச்சு இன்னும் என் காதில் ஒலிக்கிறது. இதுபோல் பல கூட்டங்களுக்கு தயாளு அம்மாளுடன் சென்றிருக்கிறோம். கலைஞர் வீட்டில் எப்போதும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். எங்க வீட்டுக்கு எதிரே பெரிய திடல் இருக்கும். அங்கு நின்றுகொண்டுதான் பல கூட்டங்களை நடத்துவார் கலைஞர். பிரசாரத்துக்கு போகும் போதெல்லாம் எங்க தாத்தாவிடம் ஆசீர்வாதம் வாங்கிட்டுதான் போவார். அவரும் வெற்றி உனக்குதான் என வாழ்த்தி அனுப்புவார். தேர்தல் முடிவில் கலைஞர் பெரும் வெற்றி பெற்றார். அதன் பிறகும்  சில மாதங்கள் இந்த வீட்டில் இருந்தவர்கள் பின்னர், சென்னைக்கு குடியேறினார்கள்.

அதன் பிறகும் எங்க நட்பு தொடர்ந்தது. அப்பா எப்போது சென்றாலும் வாங்க அண்ணே என வாஞ்சையாக அழைத்து மரியாதை செய்வாராம். எங்க அப்பா கலைஞரிடம் கொண்ட நட்பாலும் அதைக் கலைஞர் மதித்த காரணத்தாலும் எங்கள் வீட்டில் மூன்று பேருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்தார் கலைஞர். அப்பா மறைவுக்குப் பிறகு தொடர்புகள் இல்லாமல் போய்விட்டது. என் மகன்  சிங்கப்பூர் செல்லும்போது அவனை அனுப்பிவைப்பதற்காகச் சென்னை சென்று கட்சி அலுவலகம் அருகே நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். காரில் சென்ற கலைஞர் எங்களை அடையாளம் கண்டு அழைத்து வரச் சொல்லி வாழ்த்தி வழியனுப்பியதோடு முரசொலியிலும் செய்தியாக வரவைத்தார் கலைஞர். அதேபோல் என் தம்பி திருமணத்துக்கு அழைப்பிதழ் அனுப்பினோம். பதிலுக்கு அவர் கைபடவே எழுதி வாழ்த்து மடல் அனுப்பினார் அதுதான் கலைஞர்.

அதே போல் கல்லக்குடி போராட்டத்தின்போது எங்க அப்பா சோமு கலைஞருடன் கூட இருந்ததோடு கைதாகி சிறைக்கும் சென்றார். இரண்டு பேரும் ஒன்றாகச் சிறையில் இருந்தார்கள். அதில் விடுதலையாகி வெளியே வரும்போது எடுத்துக்கொண்ட போட்டோ இன்றைக்கும் சாட்சியாக எங்க வீட்டில் உள்ளது. பின்னாளில் அவர் எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும் அந்த எளிமை மட்டும் அவரிடம் எப்போதும் இருந்தது. அவர் குடியிருந்த வீடு இப்போது மாடி வீடாக மாறிவிட்டது. தலைவரும் எங்களை விட்டு மறைந்துவிட்டார். ஆனால், நினைவுகள் மட்டும் நெஞ்சில் அப்படியே இருக்கிறது'' என கண்கள் கலங்க கூறினார்.Trending Articles

Sponsored