`நலம் விசாரிக்கப் போனேன், என்னை நலம் விசாரித்து அனுப்பினார் கலைஞர்!’ - பாலபாரதிSponsoredமிழ்நாடு சட்டசபையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக, உறுப்பினராகப் பதவி வகித்தவர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்  மு.கருணாநிதி. முதல்வராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் கட்சித் தலைவராகவும் திறம்படச் செயல்பட்டவர். நேற்று மாலை (ஆகஸ்ட் 7) அவர் இறந்தது, தமிழக அரசியலுக்குப் பெரும் இழப்பு என்று பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் சட்டமன்றத்தில் அவரோடு பணியாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) யின் பாலபாரதியிடம் பேசினேன். 

``கலைஞரிடம் பார்த்து நான் வியந்த குணங்கள் இரண்டு. ஒன்று, அவரின் பொறுமை. பொதுவாழ்வில் பல ஏற்ற இறக்கங்களைப் பார்த்ததிலிருந்து கிடைத்திருக்கலாம் அல்லது அவரது இயல்பான குணமாகவும் இருக்கக்கூடும். இடியே விழப்போகிறது என்பதுபோன்ற சூழல்களிலும் பதற்றம் அடையாமல், நிதானமாக அதைக் கையாள்வது. இப்படிச் சொல்வதால், அந்த விஷயத்தில் அலட்சியமாகச் செயல்படுவார் என நினைக்க வேண்டாம். பொறுப்பு உணர்வும் பொறுமையும் கலந்து எப்படி அதற்குத் தீர்வு கிடைக்குமோ அதைச் செய்வார்.  

அடுத்து, சட்டமன்றத்தில் கேள்விகளை எதிர்கொள்ளும் பாங்கு. ஒருபோதும் அவர் கேள்விகளைத் தவிர்ப்பவர் அல்ல. அதற்கான சாமார்த்தியமான பதில்களை அளிப்பதில் வல்லவர். ஒருமுறை எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன், `மதுரையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணிகள் எந்த நிலையில் உள்ளது?' என்று கேள்வி எழுப்பியதற்கு, ``அரும்பும் நிலையில் உள்ளது' என்றார் சிரித்துக்கொண்டே. 

Sponsored


கலைஞர், சட்டமன்றத்துக்கு ஒருநாளும் தாமதமாக வந்து நான் பார்த்தது இல்லை. ஒன்பதரைக்கு அலுவல் தொடங்குகிறது என்றால், பத்து நிமிடங்கள் முன்பே வந்து, சபாநாயகரின் இருக்கைக்குச் சென்று அன்றைய பணிகள் குறித்த சிறு உரையாடல் நடத்திவிட்டே சபைக்கு வருவார். இது ஒரு மரபுதான். பலரும் இதைப் பின்பற்றுவதில்லையே! 

Sponsored


நாம் அவரிடம் சொல்வதில் நியாயம் இருக்கும்பட்சத்தில் அதை ஏற்றுக்கொள்வதில் சுணக்கம் காட்டியதேயில்லை. ஆதி திராவிட நலத்துறை மானியம் குறித்து அனைத்து மானியக் கோரிக்கைகளோடும் சேர்த்தே விவாதிக்கப்பட்டிருந்தது. நான், ஆதி திராவிட நலத்துறை மானியக் கோரிக்கையைத் தனியே விவாதிக்கும்படி ஏற்பாடு செய்யக்கேட்டுக்கொண்டதை உடனே ஏற்றுக்கொண்டார். அடித்தள மக்களின் பிரச்னைகளைக் கணிவுடன் அணுக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். சட்டசபையும் சுவையோடும் அதேநேரம் அர்த்தபூர்வமாகவும் வழி நடத்தியதில் தன்னிகரற்றவர். 

அதேபோல, வீட்டு வசதித்துறை வாரியத்தால் வீடு பெற்றவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் பட்டா கிடைக்காமல் இருந்தது. அதற்கான வழக்கு 25 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. இதனை, கலைஞர் பார்வைக்குக் கொண்டு சென்றோம். அவர் எடுத்த நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் இந்தப் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்தது. அரசுக்கு வருமானமும், வீட்டுச் சொந்தக்காரர்களுக்குப் பட்டாவும் கிடைத்தன. இஸ்லாமிய மாணவிகளின் படிப்பு பாதியில் நிற்பதற்கு, தனியே அவர்களுக்கு விடுதி இல்லாததும் ஒரு காரணம் என்பதை முன் வைத்தேன். உடனடியாக, தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் விடுதி அமைத்துத்தந்தார். சிலர் வருவதற்காகக் காத்திருந்தபோது, அவருடன் தனியே உரையாடும் நேரம் கிடைத்தது. அப்போது `தீக்கதிரில் வெளியாகும் செய்திகளின் தன்மையைப் பற்றி விரிவாகப் பேசினார். `உத்தப்புரம்' பிரச்னையின் தீவிரத்தை அதன் வழியேதான் உணர்ந்திருக்கிறார். 
இப்படிப் பலவற்றைச் சொல்லிக்கொண்டே செல்லலாம். 

எங்கோ ஒரு மூலையில் ஒன்று நடந்தாலும் அதைத் தெரிந்துகொள்வதும், அதற்குத் தக்க நடவடிக்கை எடுப்பதும் கலைஞரின் இயல்பு. ஒருமுறை திண்டுக்கல் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஒட்டுமொத்தமாகத் தள்ளுபடியானதை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். அதனால், எங்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். மண்டபத்தின் வாசலில் ஏறிக்கொண்டிருந்தபோது காவல் துறை உயர் அதிகாரி செல்போனைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தார். `சி.எம் உங்கக் கிட்ட பேசணுமாம்' என்றார். வாங்கினேன். எதிர்முனையில் அப்போதைய முதல்வர் கலைஞர். என்ன பிரச்னை என்று விசாரித்தார். என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டார். இப்போதைக்குத் தேர்தலை ரத்து செய்வதே சரி என்றேன். அன்றிரவே அப்படியே ஆணை வந்தது. இந்தச் சம்பவம் நெகிழச் செய்தது. ஏனென்றால், அவர் நினைத்திருந்தால் உதவியாளரைப் பேச வைத்திருக்கலாம். முதல்வர்கள் தாமே நேரடியாகப் பேசுவது அபூர்வம்தானே?

கலைஞருக்கு முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை நடந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அப்போது எங்கள் கட்சித் தலைவர்களோடு அவரை நலம் விசாரிக்கச் சென்றேன். ஆனால், அவர் ரொம்பவும் உற்சாகமாக, `என்னம்மா எப்படி இருக்கீங்க?' என என்னை நலம் விசாரித்தார். அந்தளவுக்கு மன உறுதிமிக்கவர். 

கலைஞர் பேச, இயங்க முடியாமல் போனதிலிருந்தே ஒரு வெற்றிடம் உருவாகிவிட்டது. அவரின் அறிக்கைகள் ஒவ்வொன்றும் பலத்த அதிர்வுகளைத் தரக்கூடியது. அவரின் மரணம் பேரிழப்பு. இந்த நேரத்தில் அவரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர மறுக்கும் தமிழ்நாட்டு அரசின் செயல்பாடு நாகரிகமானது அல்ல" என்றார். Trending Articles

Sponsored