``நாட்டு விதைகளை மீட்பதுதான் நம் ஆரோக்கியத்துக்கான வழி!” - களை கட்டிய விதைத்திருவிழாSponsoredஇன்றைய நவீனக் காலகட்டத்தில் எல்லாமே அவசர அவசரமாகப் பெற வேண்டும் என்பதால் நாம் நோய்களையும் இலவசமாகப் பெற்றுக்கொண்டிருக்கிறோம். மனித உடலில் ஏற்படும் நோய்களை நாம் உணவு மூலமே குணப்படுத்த முடியும். இதை உணர்ந்து கொண்டுதான் பாரம்பர்ய விதைத்திருவிழாக்களை தமிழகம் முழுவதும் பரவலாக விவசாயிகள் நடத்திவருகிறார்கள். அந்த வகையில் அரியலூரில் `தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்க'த்தின் சார்பில் விதைத்திருவிழா, கண்காட்சி மற்றும் இயற்கை வேளாண்மை கருத்தரங்குகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 

                                               

கண்காட்சியில் நாட்டு நெல் ரகங்களான நவரா, கல்லுருண்டை, பால்குடவாளை, மாப்பிள்ளைச் சம்பா எனப் பல்வேறு பாரம்பர்ய வகை நெல் விதைகள், நாட்டுக்கம்பு, குதிரை வாலி, சோளம் உள்ளிட்ட சிறுதானிய விதைகள், கடலை, உளுந்து, முந்திரி, நாட்டுப் பருத்தி விதைகள், மூலிகைச் செடிகள் உள்ளிட்டவை கண்காட்சியில் வைக்கப்பட்டன. மேலும், இயற்கைச் சாகுபடிக்கான இடுபொருள்கள், இயற்கை உணவுகள், வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்த ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. 

Sponsored


                                   

                                                           

Sponsored


தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் கருப்பையா பேசத்தொடங்கினார். ``விவசாயிகள் நாட்டு

விதைகளை விட்டுவிட்டு வீரிய ரக விதைகளைப் பயன்படுத்துவதால் மனிதன் மட்டுமல்லாமல் கால்நடைகள் உட்கொள்ளும் உணவிலும் பல்வேறு ரசாயனப் பூச்சி மருந்துகள் கலந்துள்ளதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அதிகளவில் ரசாயன உரம், பூச்சி மருந்துகள் பயன்படுத்துவதால் மண்ணின் தன்மை பாதிக்கப்பட்டு உயிரற்ற மண்ணாக மாறி வருகின்றது. இதைத் தவிர்க்கும் வகையில் விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற கருத்து தற்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு விவசாயியும் விதைகளில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும். விதைக்காகப் பன்னாட்டு நிறுவனங்களை நாடுவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். நாட்டு விதைகளை ஒவ்வொரு விவசாயியும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள வேண்டும் இதன் மூலம் நாட்டு விதைகளைப் பெருக்கிக்கொள்ள முடியும். விவசாயத்துக்கு விதைகளே பிரதானம் என்பதை அனைத்து விவசாயிகளும் உணர வேண்டும். நாட்டு விதைகள் மறைந்து வீரிய ஒட்டு ரக விதைகளையே விவசாயிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், பல்வேறு

பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க மறைந்துவிட்ட நாட்டு விதைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டும்." என்றார்.

மரபு வழி நெல் குறித்து மயில்வாகனன் பேசத் தொடங்கினார். ``இன்றைய நவீனக் காலகட்டத்தில் எல்லாமே அவசர அவசரமாகப் பெற வேண்டும் என்பதால் நாம் நோய்களையும் இலவசமாகப் பெற்றுக்கொண்டிருக்கிறோம். மனித உடலில் ஏற்படும் நோய்களை நாம் உணவிலேயே குணப்படுத்த முடியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். நவரா இது சிறுபிள்ளைகளுக்கு இளம் வயதில் பிடிக்கும் சளியைப் போக்கக்கூடியது. நவராவைத் தொடர்ந்து கஞ்சி வைத்துக் குடித்தாலோ அல்லது சாதத்தைச் சாப்பிட்டு வந்தாலோ சளி முழுமையாகக் குணமடையும். அதேபோல் ஆரிய வைத்தியத்தில் இந்த நவராவை லேகியம் மற்றும் சூரணத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். இது கேரளாவின் பாரம்பர்ய ரக பயிர். இது 130 நாள் வயது கொண்ட பயிர். பால் குடவாளை இந்த அரிசியைக் குழந்தை பெற்ற தாய்மார்கள் சாப்பிட்டு வந்தால் அதிக அளவில் பால்சுரக்கும். இது 140 நாள் வயது கொண்ட பயிர். கல்லுருண்டை அந்தக் காலத்தில் படைவீரர்கள் சாப்பிட்ட உணவு இது. இந்த உணவைச் சாப்பிட்டால் கல்லுருண்டை மாதிரி திடகாத்திரமாக இருக்கிறான் பாருனு சொல்லுவாங்க. இது போன்று 2 லட்சம் மரபு வழி நெல்கள் இருந்துள்ளன. தற்பொழுது அதை இழந்துவிட்டு நமது பாரம்பர்ய நெல்களை தேடிக்கொண்டிருக்கிறோம். இதுவரையிலும் நான் 85 வகையான நெல்களை கண்டுபிடித்து வைத்துள்ளேன். நாம் அனைவரும் மரபு வழி நெல்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்." என்று முடித்துக்கொண்டார். 

அடுத்ததாக சமூக ஆர்வலரும், முந்திரி விவசாயியுமான வீரமணி பேசத்தொடங்கினார். ``நமது பாரம்பர்ய விதைகளைக் கையில் எடுக்க வேண்டும். பாரம்பர்ய விதைகளைக் காப்பதைப்போல விதைகளுக்கு உயிர்கொடுக்கும் நிலத்தையும் பாதுகாக்க வேண்டும். மழலைக்கு நிகரான விதையைக் காப்பதுபோல, தாயான மண்ணைக் காக்க வேண்டும். மண் வளமாக இருந்தால்தான் விதைகள் முளைக்கும். அதனால்தான் மண்ணில் வீசும் விதைகளைத் துளிர்க்கச் செய்கிறது. மண்ணும், மண்புழுக்களும் இல்லை எனில் விதைகள் வளராது. மண்புழுக்கள்தாம் ஒரு மண்ணின் சொத்து. நாட்டு விதைகள் மறைந்து வீரிய ஒட்டு ரக விதைகளையே விவசாயிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க, மறைந்து விட்ட நாட்டு விதைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக விதைத் திருவிழா நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. இவ்வகையான திருவிழாவை அரசே நடத்தி விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறினார். 

கண்காட்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான நாட்டு விதைகளை வாங்கிச் சென்றனர். திருவிழாவுக்கு வந்தவர்களுக்கு இயற்கை முறையில் தயாரிக்க உணவுகள், நவதானிய உணவுகள் வழங்கப்பட்டன. Trending Articles

Sponsored