`என்னை வெளியேற்ற நடக்கும் சதிகளில் இதுவும் ஒன்று'- சமையலர் பாப்பாள் வேதனை



என்னை இந்தப் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்ற நடக்கும் சதிகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது என்று கூறிய சமையலர் பாப்பாள்,  பள்ளியின் தலைமையாசிரியர் சசிகலாமீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Sponsored


திருப்பூர் மாவட்டம், திருமலைக் கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியில் சமீபத்தில் நடந்தேறிய தீண்டாமை விவகாரம் தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அந்தப் பள்ளியில் சத்துணவு சமையலராகப் பணியாற்றி வரும் பாப்பாள் என்ற பெண்மணி பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக சமையல் பணியில் ஈடுபடக்கூடாது என்று சில மாணவர்களின் பெற்றோர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்காக அந்தப் பள்ளிக்கூடத்தைப் பூட்டி அராஜகத்திலும் ஈடுபட்டனர். அந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 89 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அதில் தற்போது வரை 8 பேரை கைது செய்திருக்கிறார்கள். சமையலர் பாப்பாள் அரசிடம் முறைப்படி உத்தரவு பெற்று அதே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் திருமலைக் கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியில், பாப்பாள் சமைத்த சத்துணவில் பல்லி ஒன்று கிடந்ததாக சர்ச்சை வெடித்தது. அன்றைய தினம் மதியவேளையில், அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு வழக்கம்போல சத்துணவு பரிமாறப்பட்டபோது, ஒரு மாணவியின் தட்டில் மட்டும் இறந்துபோய் காய்ந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்திருக்கிறது. அதையடுத்து அப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 12 மாணவர்களையும் உடனடியாக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார்கள். அதில் யாருக்கும் எந்தவிதமான விபரீதமும் ஏற்படவில்லை. இந்நிலையில், அப்பள்ளியின் தலைமையாசிரியர் சசிகலா, காவல்துறையில் அப்பள்ளியின் சமையலர் பாப்பாள் மற்றும் சமையல் உதவியாளர் மல்லிகா ஆகியோர்மீது புகார் அளித்திருக்கிறார். அதனடிப்படையில், பணியின்போது கவனக்குறைவாக செயல்பட்டதாக பாப்பாள் மற்றும் மல்லிகா ஆகிய இருவர்மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

Sponsored


இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சமையலர் பாப்பாள், ``என்னை இந்தப் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்ற நடக்கும் சதிகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. நான் சமைத்து முடித்து, மாணவர்களுக்கு உணவைப் பரிமாறும்போது, இறந்த பல்லியை சாப்பாட்டுத் தட்டில்போட்டு என்னைச் சிக்க வைத்துள்ளனர். சமைக்கும்போதே பல்லி விழுந்திருந்தால், அது சாப்பாட்டுடன் நன்றாக வெந்திருக்கும் அல்லது துண்டாகிபோயிருக்கும். முழுமையாகக் காய்ந்த நிலையில், ஒருவரது தட்டில் மட்டும் எப்படி வந்திருக்க முடியும். இறந்த பல்லியை யாருக்கும் தெரியாமல் சாப்பாட்டுத் தட்டில் போட்டிருக்கிறார்கள். இதற்குப் பள்ளியின் தலைமையாசிரியர் சசிகலாவும் உடந்தையாக இருந்துள்ளார்.

Sponsored


சம்பந்தப்பட்ட மாணவி, சாப்பாட்டை வாங்கி வைத்துவிட்டு, அதன்பிறகு கழிப்பறைக்குச் சென்றுவிட்டு வந்துதான் உணவு சாப்பிட அமர்ந்தார். அப்போது தலைமையாசிரியை சசிகலா அந்த மாணவியை தடுத்து, சாப்பாட்டு தட்டில் பல்லி கிடப்பதாக பிரச்னையை ஆரம்பித்து வைத்துள்ளார். ஆனால், அச்சமயம் அங்கிருந்த மற்ற மாணவர்கள் அனைவருமே சத்துணவை முழுமையாகச் சாப்பிட்டு முடித்தார்கள். என்னுடைய மகளும் இதே பள்ளியில்தான் படித்துக்கொண்டு இருக்கிறார். அவளும் தினமும் சத்துணவு சாப்பிட்டு வருகிறார். இங்குள்ள அனைத்து குழந்தைகளையும் என் மகளைப்போல நினைத்துத்தான் அக்கறையுடன் சமைத்து சோறு போடுகிறேன். என்னைப் பழிவாங்க நினைத்து அந்தக் குழந்தைகளை ஏன் பலிகடா ஆக்குகிறார்கள் என்பதுதான் எனக்கு வேதனையாக உள்ளது. வேண்டுமென்றே பிரச்னையை ஏற்படுத்தியிருக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் சசிகலாமீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றுகூறி முடித்தார்.

``தங்களின் குடும்பத்துக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவி வருகிறது. எனவே, அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்'' என பாப்பாளின் குடும்பத்தார் ஏற்கெனவே திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.



Trending Articles

Sponsored