`ஐநாவில் பேசிவிட்டு வந்தால் லுக் அவுட் நோட்டீஸா?’ - சீறும் திருமுருகன் காந்தி #VikatanExclusiveSponsoredஐநா மனித உரிமைகள் பேரவையில் தூத்துக்குடி மனித உரிமை மீறலைப் பற்றிப் பேசிவிட்டு வந்ததால் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டிருப்பது, அரசாங்கத்தின் மனித உரிமை மீறலை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது என்று மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார். 

தூத்துக்குடியில் கடந்த மே 22 அன்று அமைதியாகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டிலும், அதையடுத்த தாக்குதலிலும் 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டும் உத்தரவுகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்பது மட்டுமன்றி, மனித உரிமைகள் மீறலிலும் போலீஸ் அதிகாரிகள் முதல் காவலர்கள்வரை ஈடுபட்டனர் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. தமிழக அளவிலும் இந்திய அளவிலும் மனித உரிமை அமைப்புகள் சார்பில், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் பலரும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து மனித உரிமை மீறல்களை உறுதிப்படுத்தி வருகின்றனர். 

இந்தநிலையில் தூத்துக்குடி வன்முறை, படுகொலைகள் குறித்து நடப்பு ஐநா மனிதவுரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரையொட்டி, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உலக நாடுகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப் பேசினார். கடந்த மாதம் ஐரோப்பா சென்றவர், அங்குள்ள மனிதவுரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடமும் நேரில் விவரித்தார். அதைத் தொடர்ந்து அங்கு தூத்துக்குடி படுகொலைகள், மனிதவுரிமை மீறல்களைக் கண்டித்து, போராட்டங்களும் நடத்தப்பட்டன. 

Sponsored


Sponsored


ஐரோப்பியப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய திருமுருகன் காந்தியை, இன்று அதிகாலை பெங்களூரு விமானநிலையத்தில் குடிவரவுத் துறை அதிகாரிகள் தடுத்துநிறுத்தி, `நாட்டின் எந்த விமானநிலையத்தில் வந்திறங்கினாலும் உங்களைத் தடுத்துவைக்குமாறு லுக் அவுட் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது’ எனக் கூறி, அவரைத் தடுத்துவைத்து விமானநிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 

அவர்களிடம் திருமுருகன் காந்தி விளக்கம் கேட்டபோது, சென்னை போலீஸார் பதிந்திருக்கும் 124 ஏ வழக்கு உட்பட்ட வழக்குகளில் அவரைக் கைதுசெய்வதற்காகத் தடுத்துவைக்கவேண்டும் என சென்னை போலீஸார் தெரிவித்ததாகப் பதிலளித்தனர். தொடர்ந்து பெங்களூரு விமானநிலைய போலீஸ்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தியிடம் பேசினோம். 

ஐநாவின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பேசியதற்காகக் கைதுசெய்திருப்பதே இந்த அரசாங்கத்தின் மனிதவுரிமை மீறலை அப்பட்டமாகக் காட்டுகிறது என்றவர், தொடர்ந்து பேசினார். 

``தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தையொட்டிய படுகொலைகள், மனிதவுரிமைமீறல்கள் பற்றி தமிழ்நாட்டிலும் வெளிமாநிலங்களிலும் யாரும் பேசிவிடாமல் அரசுகள் தடுத்துவருகின்றன. இதனாலும் தமிழ்நாட்டில் பன்னாட்டுத் தொழிற்சாலைகள் இழைத்துவரும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் கொண்டுசெல்லவேண்டும் என்பதாலும், ஐநா மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் பேசுவதற்காகச் சென்றேன். தேசங்கடந்த தொழில்நிறுவனங்களின் மனிதவுரிமை மீறல்கள் குறித்த ஐநா மனிதவுரிமைப் பேரவையின் சிறப்பு அறிக்கையாளர் அனிதா சாஸ்திரியுடன் இணைந்து இதற்கான அழுத்தத்தைத் தரும் பணிகளில் ஈடுபட்டோம். ஐரோப்பிய அளவில் இதே நோக்கத்துக்காகச் செயற்படும் அமைப்புகளுடனும் கலந்துபேசி, போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, போராட்டத்தில் ஈடுபடுவோரைத் தடுப்புக்காவலில் வைக்கும் தமிழ்நாட்டு அரசின் கருப்புச்சட்டங்கள், எப்படி பிரிட்டன் ஆக்கிரமிப்புக் காலத்தில் கொண்டுவரப்பட்டும் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது, காந்தியையே இந்தத் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ்தான் பிரிட்டன் அரசு வைத்திருந்தது என்பதையும் ஐரோப்பிய மனிதவுரிமை அமைப்புகளுடன் பகிர்ந்துகொண்டோம். உலக அரங்கில் இந்த அரசுகளின் மனிதவுரிமை மீறலைக் கொண்டுபோவதால் இவர்கள் காட்டிவந்த ஜனநாயக பிம்பம் பாதிக்கப்படும் என நினைக்கிறார்கள். ஒன்றுமில்லாத பழைய வழக்குகளை எடுத்து, விமானநிலையங்களுக்குத் தேடுதல் அறிவிக்கை lookout notice கொடுக்கும் அளவுக்கு மிக மோசமான நாடுகளில்கூட நடக்காத நிகழ்வு. இதன் மூலமாகவும் இந்த அரசு, எப்படி மனிதவுரிமைகளை மீறுகிறது என்பதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்கிறது” என்று விவரித்தார், திருமுருகன் காந்தி. Trending Articles

Sponsored