``ஏம்மா... உன்பேரு என்ன காவிரியா?'' - கலைஞரின் கலகல பக்கம் சொல்லும் கி.வீரமணிSponsoredதிராவிட இயக்கத்தில் பாலபாடம் பயின்றவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி! தொடக்க காலங்களில் தோழர்களோடு கிராமங்கள்தோறும் சைக்கிளில் பயணித்து கழகப் பிரசாரப் பணியாற்றியவர்! அந்தவகையில், தற்போதைய திராவிடர் கழகத்தின் தலைவரான கி.வீரமணிக்கும் கருணாநிதிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 

``கருணாநிதிக்கும் எனக்குமான உறவு என்பது 75 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிறுவயது மாணவப் பருவத்திலிருந்தே தொடங்கியது!
1-5-1945-ல், `தென்மண்டல திராவிட மாணவர்கள் மாநாட்டை' திருவாரூரில் மாணவராக இருந்த கருணாநிதிதான் தலைமையேற்று நடத்தினார். அப்போது 12 வயது மாணவனான எனக்கு `போர்க்களம் நோக்கி' என்ற தலைப்பில் பேச வாய்ப்பளித்தவர் கருணாநிதி!'' என்று மலரும் நினைவுகளில் மூழ்கும் கி.வீரமணி, தொடர்ந்து கருணாநிதியுடனான தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
``2009- ம் ஆண்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், முதுகுத் தண்டுவட அறுவைச் சிகிச்சைக்காக கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை எல்லாம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. 

Sponsored


மருத்துவர், அங்கிருந்த பெண் செவிலியரிடம் `மயக்கம் தெளிந்து பேஷன்ட் விழிக்கும்போது, அனஸ்தீஸியாவின் பாதிப்பால் தண்ணீர் தாகம் எடுக்கும். ஆனாலும் அதிகளவில் தண்ணீர் கொடுத்துவிடக் கூடாது. அது உடல்நிலையைப் பாதிக்கும். எனவே, நாக்கு நனையும்படி சில சொட்டு நீரை மட்டும் கொடுங்கள்' என்று அறிவுறுத்திவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டார்.

Sponsored


கருணாநிதிக்கு மெள்ள மயக்கம் தெளிய ஆரம்பித்தது. மருத்துவர் சொல்லியிருந்ததுபோலவே, அவருக்கு தாகம் எடுத்தது. செவிலியரை அழைத்து தண்ணீர் கேட்டார். அந்த செவிலியரும் மருத்துவர் சொல்லியிருந்தபடியே சில துளி நீரை மட்டும் பருகக் கொடுத்தார். தாகம் தணியாத கருணாநிதி, மீண்டும் குடிக்கத் தண்ணீர் கேட்டார். அப்போதும், அந்த செவிலியர் சில துளி நீரை மட்டும் கொடுக்கவே.... 'ஏம்மா... உன்பேரு என்ன காவிரியா?' என்று கேட்டேவிட்டார் கருணாநிதி. 

அந்த செவிலியப் பெண்ணுக்கோ அவரின் கேள்வி புரியவில்லை. உடனிருந்த நாங்களோ அந்தச் சூழ்நிலையிலும் சிரித்துவிட்டோம்.

`விடுதலை' மாலை பத்திரிகை. பெரியார் திடல் அலுவலகத்தில் காலையிலேயே, விடுதலை நாளேட்டுக்குத் தயாராகும் அன்றைய செய்திகளைப் படித்துப் பார்த்து பிழை திருத்தம் மற்றும் செய்திகள் குறித்த வடிவமைப்புகளை சரிபார்த்துவிட்டுத்தான் அடையாரிலுள்ள என் வீட்டுக்கு மதிய உணவுக்காக வந்து சேருவேன். 

மாலையில் அச்சடிக்கப்பட்ட விடுதலை நாளிதழ்களை சைக்கிளில் கொண்டுபோய் வீடு வீடாக விநியோகம் செய்வார்கள் பத்திரிகை விநியோக நண்பர்கள். அந்தவகையில், கருணாநிதி குடியிருக்கும் கோபாலபுரம் பகுதியில் நாளிதழ் விநியோகத்தை முடித்துவிட்டுத்தான் அடையார் பகுதியிலுள்ள எனது வீட்டுக்கு நாளிதழைக் கொண்டு வருவார் விநியோக நண்பர்.

இந்த இடைப்பட்ட நேரத்துக்குள், கருணாநிதி `விடுதலை' நாளிதழைப் படித்துப் பார்த்து அதிலுள்ள எழுத்துப் பிழை அல்லது கருத்துப் பிழைகளைக் குறித்துவைத்துக்கொண்டு தொலைபேசியிலேயே என்னிடம் விசாரிப்பார். 

`பத்திரிகையின் ஆசிரியர் நான் என்றாலும்கூட, முதலில் உங்களுக்குத்தான் பத்திரிகை வருகிறது. நீங்களும் படித்துப் பார்த்து கருத்து சொல்கிறீர்கள்... அதனால் முதல் ஆசிரியர் நீங்கள்தான். அந்தக் காலத்தில் ஈரோட்டு குருகுலத்தில், `குடியரசு' பத்திரிகையின் உதவியாளராகப் பிழைதிருத்தம் செய்த பணியை இப்போதுவரை செய்துவருகிறீர்கள். அந்தவகையில், நீங்கள்தான் உண்மையான முதல் ஆசிரியர்!' என்று நான் வேடிக்கையாகச் சொல்வதுண்டு!

பெரியாரின் வழியில், 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருந்தவர் கருணாநிதி. முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும்போதும்கூட, நாளிதழ்களில் ஆரம்பித்து வார இதழ், புத்தகங்கள் என அனைத்தையும் விரைந்து வாசிக்கும் பழக்கம் அவருக்கு உண்டு! 

அதுமட்டுமல்ல... அமைச்சர் பெருமக்கள், என்னைப் போன்ற நண்பர்கள் புடைசூழ சாயங்கால நேரத்தில், மெரினா கடற்கரை மணலில் அமர்ந்து பேசுவது கருணாநிதிக்கு ரொம்பவும் பிடிக்கும். 

அகில இந்திய வானொலி நிலையத்துக்கு நேர் எதிரில் இருக்கும் கடற்கரைப் பகுதியில், அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். முறுக்கு, சீடை என்று நொறுக்குத் தீனி யாராவது கொண்டுவருவார்கள். அதையும் சாப்பிட்டுக்கொண்டே பல விஷயங்களை கலந்துரையாடுவோம். 
அந்த உரையாடல்களுக்கு நடுவிலேயும், நாளைய சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு என்ன பதில் சொல்லவேண்டும், என்னென்ன குறிப்புகள் எடுக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் அவ்வப்போது உதவியாளர் சண்முகநாதனிடம் குறிப்பு கொடுத்துக்கொண்டே இருப்பார். 

இரவு நேரம் என்பதால், கடற்கரையில் அதிக வெளிச்சம் இருக்காது. எனவே, பக்கத்தில் காவலுக்கு நின்று கொண்டிருக்கும் காவலர்களிடமிருந்து டார்ச் லைட்டை வாங்கி காகிதத்தில் வெளிச்சம் பாய்ச்சி குறிப்புகள் எழுதிக்கொடுப்பார். அந்தளவுக்கு ஓய்வின்றி உழைப்பவர்!''

கலங்கும் கண்களுடன் சொல்லிமுடிக்கிறார் கி.வீரமணி!Trending Articles

Sponsored