யானை வழித்தட ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு 48 மணிநேரம் கெடு! - நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரம்Sponsoredநீலகிரி மாவட்டத்தில் யானையின் வழித்தடத்தில் இருக்கும் உணவு விடுதிகளை 48 மணிநேரத்தில் இடித்துத் தள்ள வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காகக் கடந்த 7 வருடங்களாக நடந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. நீலகிரி மாவட்டம், மசினகுடி கிராமத்தில் முதுமலை சரணாலயத்தை ஒட்டிய பகுதிகளில் யானைகளின் வழித்தடங்களில் அமைந்துள்ளன. அவற்றை மறித்து கட்டடங்கள் மற்றும் விடுதிகளைக் கட்டுவதற்கு கடந்த 2011-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. மேலும், யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்டப் பகுதிகளில் உள்ள விவசாய நில உரிமையாளர்களும் விடுதி உரிமையாளர்களும் தங்களுடைய குடியிருப்புகளைக் காலி செய்து மாவட்ட ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. 

அதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அந்த மனுவுடன் இந்தியா முழுவதும் உள்ள யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என ரங்கராஜன் தாக்கல் செய்த மனுவையும் இணைத்து விசாரித்து வந்தது. கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்த வழக்கில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், `நீலகிரி மாவட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன. அதை அகற்றவும் விதிகளை முறைப்படுத்தவும் வேண்டும்' என்று வாதிட்டார். இதையடுத்து அதை விசாரித்த நீதிபதிகள் 'நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துக் கட்டியுள்ள கட்டடங்களின் எண்ணிக்கை, அவற்றால் யானைகளுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் நான்கு வாரங்களுக்குள் எழுத்துபூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவிட்டிருந்தனர். அதே நேரத்தில் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்துக் கட்டடங்கள் இருந்தால் இடிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 

Sponsored


அதில், யானை வழித்தடத்தில் இருக்கும் அங்கீகாரமற்ற கட்டடங்களை 48 மணிநேரத்தில் இடிக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அங்கீகாரமற்ற உணவகங்களுக்கும், காட்டேஜ்களுக்கும் உடனடியாக சீல் வைக்க வேண்டும். நீலகிரி மாவட்டங்களில் அதிக அளவிலான கட்டடங்கள் விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளன. நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வீடுகட்ட அனுமதி வாங்கி காட்டேஜ்களாக மாற்றிப் பயன்படுத்தி வருவது கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதை முறைப்படுத்தும் வகையில் வீட்டு மனைக் குடியிருப்புகளைக் காட்டேஜ்களாக மாற்றிப் பயன்படுத்துவது தொடர்பான விவரங்களை உள்ளாட்சி நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்பிக்கும் பட்சத்தில் அனுமதியில்லாத காட்டேஜ்களுக்கு செப்டம்பர் மாதம் சீல் வைத்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் உத்தரவிட்டுள்ளது. 

Sponsored


கடந்த மாதம் 3-ம் தேதி, நொய்யல் ஆற்றின் கிளை ஓடைகளை ஆக்கிரமித்துக், காருண்யா கல்வி நிறுவனம் கட்டிய கட்டடங்களை அகற்றக்கோரிய வழக்கில், கோவை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதேபோல கடந்த ஜூலை மாதம் தமிழக சட்டப் பேரவையின் கடைசி நாளில் சி.ஏ.ஜி ஓர் அறிக்கையைச் சமர்பித்திருந்தது. அதில் ஈஷா யோகா மையம் மலைப்பகுதிகளைக் காக்கும் ஆணையத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் வாங்காமல் கட்டடங்கள் கட்டியிருப்பதாக சி.ஏ.ஜி அறிக்கை வெளியிட்டிருந்தது, அதை மறுத்து ஈஷா யோகா மையம் சார்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. யானைகள் வழித்தடம் தொடர்பாக மத்திய அரசு 2017-ம் ஆண்டு வரைவுத் திட்டத்தை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியிருந்தது. அதில் 5 மாநிலங்களைத் தவிர, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. இந்த விஷயத்தில் தமிழக அரசு அலட்சியப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது.

அதேபோல 2017-ம் ஆண்டு நிலவரப்படி, கடந்த 10 ஆண்டுகளில் 973 யானைகள் இறந்துள்ளன. ஒவ்வோர் ஆண்டுக்கும் சராசரியாக 97 யானைகள் வீதம் இறந்துகொண்டிருக்கின்றன. மேற்குத்தொடர்ச்சி மலையில் யானைகள் வழித்தடம், நீர் வழித்தடங்கள், வன ஆக்கிரமிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளும் யானை போன்ற வனவிலங்குகள் இறப்பும் நீடித்துக்கொண்டேதானிருக்கின்றன, அதற்கு ஒரு முடிவுதான் இன்னமும் கிடைக்கவில்லை. Trending Articles

Sponsored