இன்றுடன் முடிவுக்கு வரும் வழக்கு..! 7 பேர் விடுதலையில் தமிழக அரசு முடிவு என்ன?Sponsoredராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வரவுள்ளது. அந்த வழக்கு தொடர்பாக  தமிழ் ஆர்வலர்  ஒருவரிடம் பேசுகையில், '18-2-2014 அன்று பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் மரண தண்டனையை குறைப்பு செய்த அன்றைய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதாசிவம் அமர்வு, தீர்ப்பின் இறுதியில் மூவரின் ஆயுள் தண்டனையானது குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு 432-ன் கீழ் உரிய அரசின் தண்டனை கழிவுக்கு உட்பட்டது என்று குறிப்பிட்டிருந்தது.

அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் 7 பேரையும் குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு 432-ன் கீழ் விடுதலை செய்ய வேண்டுமெனில், பிரிவு 435(1)ன்படி மத்திய அரசிடம் கலந்தாலோசனை செய்ய வேண்டும் என்பதால் 19-4-2014 அன்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். மேலும், அன்றைய தினமே பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலைக்கு சட்டப்பேரவையில் அனைத்து கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றினார். மாநில அரசின் கடிதத்துக்கு பதில் சொல்வதற்கு பதிலாக அன்றைய மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் சென்று 7 பேரின் விடுதலைக்கு தடையாணை பெற்றது. மத்திய அரசு தொடர்ந்த வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் அமர்வுக்கு மாற்றப்பட்டது.

Sponsored


இந்த வழக்கில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2.12.2015 அன்று தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் ஏழு பேரும் மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழான தண்டனைக் காலத்தை முடித்துவிட்டனர் என்பதாலும் தற்போது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் படி ஆயுள் தண்டனையை அனுபவித்துவருவதால், மாநில அரசே அவர்களது தண்டனையை குறைப்பதற்கு உரிய அரசு. அதேநேரம் குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு 432ன்கீழ் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்குவதற்கு 435(1)ன் கீழ் மத்திய அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று தீர்ப்பளித்தது.  

Sponsored


மேலும், 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்வும் தெரிவித்தது. 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இரண்டாவது முறையாக 2-3-2016-ம் ஆண்டு அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதலைக் கேட்டு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தின் மீது மூன்று மாதங்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று 23-1-2018 அன்று நீதிபதி உத்தரவிட்டார். அதனையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்வதென்ற மாநில அரசின் முடிவுக்கு ஒப்புதல் தர முடியாது என்று 18-4-2018ம் தேதியன்று மத்திய அரசு தெரிவித்தது. இந்த நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் வரவுள்ளது. முன்னதாக, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய அரசியல் யாப்பு உறுப்பு 161-ன் கீழ் மாநில அரசுக்கு கட்டற்ற அதிகாரம் உள்ள நிலையில், மறைந்த முதல்வர் குற்ற விசாரணை முறைச் சட்டப்படி முடிவெடுத்து விடுதலையை சிக்கலாக்கிவிட்டார் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்பட தமிழகத்தின் அனைத்து கட்சிகளாலும் விமர்சிக்கப்பட்டு வந்தது.

மேலும், அரசியல் யாப்பு உறுப்பு 161ன்கீழ் அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்து ஆளுநர் மூலம் ஏழு பேர் விடுதலை செய்ய  வேண்டும் என்று அனைவரும் குரல் கொடுத்தனர். அந்தச் சமயங்களில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று தமிழக அரசு கூறிவந்தது. தற்போது, நாளையுடன் நீதிமன்ற நிலுவை முடிவுக்கு வருவதால் அரசியல் யாப்பு உறுப்பு 161ன் கீழ் விடுதலை செய்ய வழி ஏற்பட்டுள்ளது. 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது' என்றார். Trending Articles

Sponsored