ஸ்டெர்லைட் தீர்ப்பு... பசுமைத் தீர்ப்பாயம், வேதாந்தா, நித்யானந்த் ஜெயராமன் சொல்வது என்ன?



Sponsored



தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அதனால் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி வேதாந்தா நிறுவனம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு அளிக்கப்பட்டது. 

இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜூலை 5-ம் தேதி நடைபெற்றது. அப்போது, இது தொடர்பாக தமிழக அரசும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் பதிலளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு முன் இந்த மனு, கடந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லியில் நேற்று (09.08.2018) விசாரணை நடைபெற்றது. 

Sponsored


வேதாந்தா நிறுவனம் கொடுத்துள்ள மனுவில், ``தூத்துக்குடி சிப்காட் பகுதியில் பல தொழிற்சாலைகள் உள்ளன. ஸ்டெர்லைட் ஆலையால் மட்டுமே மாசு ஏற்படுகிறது என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. மாசுபாடு தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எந்தவிதமான விளக்கமும் ஆலைத் தரப்பினரிடம் கேட்கவில்லை. காப்பர் மணலை இறக்குமதி செய்வோரின் தூண்டுதலால் மட்டுமே போராட்டம் நடைபெற்றது. பசுமைத் தீர்ப்பாயம் நியமிக்கும் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பில் ஒரு மாதம் ஆலையை இயக்குகிறோம். அக்குழுவின் அறிக்கையின்படி மாசுபாட்டினை அளவீடு செய்து பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே, ஆலையை மீண்டும் இயக்க அனுமதி அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

Sponsored


தமிழக அரசின் சார்பில், `ஆலையைத் திறக்கக் கூறி வேதாந்தா தொடர்ந்திருக்கும் வழக்கு விசாரணைக்கு ஏற்றது கிடையாது. மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இதை தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஏற்க மறுத்துவிட்டது. வேதாந்தா குழுமம் தொடுத்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தது. மேலும், `ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளலாம். உற்பத்திப் பணிகளை மட்டும் மேற்கொள்ளக் கூடாது. நிர்வாக ரீதியான பணிகளுக்கு மட்டுமே பணியாளர்கள் அனுமதிக்க வேண்டும். ஆலை இயங்காமல் இருப்பதை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கண்காணிக்க வேண்டும். ஆலையில் அமிலக் கசிவைக் கண்காணிப்பதற்காகத் தனியாக ஓர் அதிகாரியை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நியமிக்க வேண்டும். தமிழக அரசு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை இந்த வழக்கின் மனு தொடர்பாக 10 நாள்களுக்குள் பதில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ' என்று தீர்ப்பளித்துள்ளது. 

இதையடுத்து மாசுபடுவது தொடர்பான அறிவியல்பூர்வமான ஆதாரங்களை ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. அன்றுதான் ஸ்டெர்லைட் தொடர்ந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியாகும். இந்நிலையில் இத்தீர்ப்பு பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர், நித்யானந்த் ஜெயராமனிடம் பேசினோம். 

``தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நினைத்தால் பத்து நாள்கள் அல்ல, இரண்டே நாள்களில் அதற்கான தகவல்களை தொகுத்துவிடலாம். அதைச் செய்யாமல் விட்டுவிட்டாலோ அல்லது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முன்வைக்கும் ஆதாரங்கள் சிறு தவறுகளாகக் குறிப்பிட்டால், வழக்கு நீர்த்துப்போகும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு அரசாணையை மட்டும் வெளியிட்டது. அதை மாற்றி தாமிர உருக்கு ஆலைத் தமிழகத்தில் இருக்கக் கூடாது என்று கொள்கை முடிவை எடுக்க வேண்டும். இது நடந்தால்தான் ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தை விட்டு முழுமையாக வெளியேறும். இல்லையெனில் அடுத்த பத்து நாள்களில் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம்" என்றார்

இது பற்றி ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பேசினோம். ``இந்தத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். நிர்வாக ரீதியிலான பணிகளை மேற்கொள்ளலாம் என்ற இடைக்கால உத்தரவை ஸ்டெர்லைட் வரவேற்கிறது" என்று மட்டும் பதில் சொன்னார்கள்.



Trending Articles

Sponsored