குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 3-வது நாளாக குளிக்கத் தடை!



குற்றாலம் அருவிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு 3-வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Sponsored


நெல்லை மாவட்டம், குற்றாலம் அருவிகளில் மே மாதம் இறுதியில் தொடங்கும் சீசன் ஜூலை வரை நீடிப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு, தற்போது வரையிலும் சீசன் சீராக நீடிக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறது. 

Sponsored


மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 143 அடி கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 2 அடி அதிகரித்து 114 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 7 அடி அதிகரித்து 130 அடியாக உள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் தற்போது 71 அடியாக இருக்கிறது.   

Sponsored


மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைப் பகுதியில் தலா 3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு அணைப் பகுதியில் 1.4 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது. கடனா அணைக்கட்டுப் பகுதியில் 2 மி.மீ மழை பெய்துள்ளது. ராம நதி அணைப் பகுதியில் 8 மி.மீ மழை பதிவாகி உள்ளது. குண்டாறு, நம்பியாறு அணைக்கட்டுகளில் 7 மி.மீ மழை பதிவானது. 

தொடர்ந்து பெய்யும் கனமழையால் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கடந்த இரு தினங்களாக மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து தண்ணீர் அதிகமாக வந்துகொண்டிருப்பதால் மூன்றாவது நாளாக இன்றும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியின் அனைத்துப் பிரிவுகளிலும் தண்ணீர் அதிகமாக வருவதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. குற்றாலம் பகுதியில் தென்றலுடன் சாரல் பெய்து வருவதால் பயணிகள் அந்தச் சூழலை மட்டும் அனுபவித்து வருகிறார்கள்.



Trending Articles

Sponsored