நடிகைகள் மூலம் காரியத்தைச் சாதித்த அதிகாரிகள் - அண்ணா பல்கலைக்கழக மறுகூட்டல் வில்லங்கம் Sponsored`அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுகூட்டல் விவகாரத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உமா மட்டுமல்லாமல் பதிவாளர் கணேசன் மீதும் நடவடிக்கை எடுங்கள்' என்று துணைவேந்தருக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுகூட்டல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீஸார், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா, திண்டிவனம் கல்லூரியின் முதல்வராக இருந்த விஜயக்குமார், மண்டல அலுவலர் சிவக்குமார் மற்றும் 7 பேராசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மறுகூட்டல் விவகாரம் தொடர்பாக மாணவர்கள், தேர்வுத் தாள்களைத் திருத்திய பேராசிரியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடந்துவருகிறது. இதற்கிடையில் உமா, விஜயக்குமார், சிவக்குமார் மற்றும் பேராசிரியர்கள் மீது அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

Sponsored


இந்த நிலையில், மறுகூட்டல் விவகாரத்தில் பதிவாளர் கணேசன் மீது அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. உமா மீது மட்டுமல்லாமல் கணேசன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கூட்டமைப்பின் தலைவர் அருண்ஆரம் தெரிவித்துள்ளார். 

Sponsored


இதுகுறித்து அவர் கூறுகையில், ``மறுகூட்டல் விவகாரத்தில் நடந்த முறைகேடு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தற்போது தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா மற்றும் 9 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விதிகளை மீறி பதிவாளர் கணேசன் இந்தப் பதவியில் இருந்துவருகிறார். பதிவாளருக்குத் தெரியாமல் இந்த முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அவர் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார். 

அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் சிலர் கூறுகையில், ``முறைகேடு நடந்த சமயத்தில் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பணியிடம் காலியாக இருந்தது. இதனால் பதிவாளர்தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்க வேண்டும். பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகங்களுக்கு அடிக்கடி சிலர் வந்து சென்றுள்ளனர். அவர்கள்தான் புரோக்கர்கள் போலச் செயல்பட்டனர். குறிப்பாக மூன்று பேர் பதிவாளர் அலுவலகத்திலேயே முகாமிட்டிருந்தனர். இவர்கள் எல்லோரும் தி.நகரில் உள்ள பிரபலமான  நட்சத்திர ஹோட்டலில்தான் டீலிங் பேசுவார்கள். இதற்காக நடிகைகள் மூலம் தங்களுடைய காரியங்களைச் சாதித்தக்கதையும் இருக்கிறது" என்றனர். 

ஆசிரியர்கள் கூட்டமைப்பினரின் குற்றச்சாட்டுகள் குறித்து பதிவாளர் கணேசனிடம் கேட்டதற்கு, ``இந்தப் புகாரில் உண்மையில்லை. என்மீதுள்ள காழ்ப்பு உணர்ச்சி காரணமாக நீண்டகாலமாக இந்தக் குற்றச்சாட்டுகள் என்மீது வைக்கப்பட்டுவருகின்றன. என் தரப்பு நியாயத்தை விளக்கமாகத் தெரிவிப்பேன்" என்றார். 

அண்ணா பல்கலைக்கழக மறுகூட்டல் விவகாரத்தின் மறுபக்கத்தில் இன்னும் சிலர் உள்ளனர். அவர்களின் முகத்திரை லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கிழிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். Trending Articles

Sponsored