`எம்.ஜி.ஆரின் ரசிகர்; திராவிடக் கட்சியின் வெறியர்’ - கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவந்த அ.தி.மு.க பிரமுகருக்கு நடந்த துயரம்!



Sponsored



தி.மு.க தலைவர் கருணாநிதி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும்போது, கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தார் வேலூர் கஸ்பாவை சேர்ந்த அ.தி.மு.க பிரதிநிதி மோகன்.

தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது.

Sponsored


கருணாநிதி உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்குத் தனி வழி உருவாக்கப்பட்டது. அந்த வழியில் வி.ஐ.பி-கள் அஞ்சலி செலுத்தினர். அதேபோன்று, பொதுமக்களுக்கென்று தனிவழி உருவாக்கப்பட்டது. அந்த வழியில் பொதுமக்கள் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது கருணாநிதி உடலை கடைசியாகப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் சில இடங்களில் போலீஸார் வைத்திருந்த தடுப்புகளைத் தகர்த்துவிட்டு முன்னேறி சென்றனர். அப்படி முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதையில் பொதுமக்கள் நுழைந்தபோது கட்டுக்குள் கொண்டுவராத அளவுக்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

Sponsored


இந்த நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி 4 பேர் பலியானார்கள். 22 பேர் படுகாயம் அடைந்தனர். அவ்வாறு கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களில் ஒருவர் வேலூர் கஸ்பாவை சேர்ந்த மோகன் (60) ஆகும். இவர், வேலூர் கஸ்பா பகுதி அ.தி.மு.க துணை செயலாளர் ஆவார். அ.தி.மு.க-வின் தீவிர விசுவாசி. இவருடைய மனைவி பார்வதி. இவருக்கு, ஒரு மகன் ஒரு மகள். 

தந்தையை இழந்த சோகத்தில் இருந்த அவரின் குடுபத்துக்கு ஆறுதல் கூறிவிட்டுப் பேசினோம். மகள் இந்துமதியிடம் பேசினோம், ``அப்பா, அண்ணா காலத்தில் தி.மு.க-வில் உறுப்பினராக இருந்தார். தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து சென்று அ.தி.மு.க-வை தொடங்கியதும் அவர் அதில் சேர்ந்தார். 45 ஆண்டுகளாக அ.தி.மு.க-வில் இருந்து வந்தார். எம்.ஜி.ஆரின் தீவர ரசிகன். திராவிட கட்சிகளின் வெறித்தனமான ரசிகன் என்றே சொல்லலாம் அப்பாவை. 7-ம் தேதி கருணாநிதி இறந்த தகவல் டிவியில் பார்த்துவிட்டு 8-ம் தேதி காலை ரயில் ஏறி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னைக்குப் புறப்பட்டார்.

நான் அப்பவே கேட்டேன், ஏன்பா தி.மு.க தலைவர்தானே இறந்தார் அதற்கு நீங்கள் ஏன் போவணும் என்று. அதற்கு அவர், "திராவிடக் கட்சிகளின் கடைசி தலைவர் கலைஞர்" அதனால் நான் போய் அவர் முகத்தைப் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன் பின்பு, நாங்களும் அமைதியானோம். ஆனால், 8-ம் தேதி மாலை போன் செய்தால் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. கூட்டத்தில் பிஸியாக இருப்பார். பிறகு அவரே போன் செய்வார் என்று இருந்தேம். ஆனால், மறுநாள் காலையில்தான் தெரிந்தது அவர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துவிட்டார்" என்று கண்ணீர்விட்டு அழுதார் இந்துமதி.

மேலும் மோகன், எம்.ஜி.ஆர் இறப்பின்போதும், ஜெயலலிதா இறப்பின்போதும், ஜானகி இறப்பின்போதும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Trending Articles

Sponsored