``மறுமதிப்பீட்டில் மங்காத்தா..!’’ பதிவாளர் கணேசனை கைகாட்டும் ஆசிரியர்கள்



Sponsored



தமிழகத்தில் `நம்பர் ஒன்' பல்கலைக்கழகம் என்று மார்தட்டிக்கொள்ளும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், 'விடைத்தாள் மறுமதிப்பீடு மோசடி மற்றும் ஊழல்' புகாரில் சிக்கி, ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கே தீராத அவமானத்தையும், தலைகுனிவையும் ஏற்படுத்தி இருக்கிறது. ''மாணவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, விடைத்தாள் மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண் அளித்தனர்'' என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் மோசடிகள் குறித்து, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தோலுரித்துக் காட்டியுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் உமா, உதவிப் பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தவிர, குற்றம்சாட்டப்பட்டுள்ள மறுமதிப்பீட்டு ஆய்வாளர்கள் ஏழு பேரிடம் விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். அவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் தேர்வுகள் தொடர்பாக சில ஆவணங்களைக் கைப்பற்றி இருக்கிறார்கள். விசாரணைக்கு ஆஜராகுமாறு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, `சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது.

இதுபற்றி தமிழ் மாநிலக் காங்கிரஸ் மாணவர் அணித் தலைவர் சுனில் ராஜா, "3.3.2015 முதல் 2.3.2018-ம் ஆண்டு காலகட்டத்துக்குத் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பேராசிரியர் ஜி.வி.உமா-வை நியமித்தது, அப்போதைய துணைவேந்தர் ராஜாராம். ஆனால், ராஜாராம் ஓய்வு பெற்றபிறகு, பதிவாளர் கணேசன் பொறுப்பில் அண்ணா பல்கலைக்கழகம் இருந்தபோது, 2017-ம் ஆண்டு ஏப்ரல் / மே மாதங்களில் நடந்த தேர்வுகளில்தான் பெரும்பாலும் இந்த மோசடி நடந்துள்ளது. 2013-ம் ஆண்டு பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்ட கணேசன், 2014-ம் ஆண்டு முழுநேரப் பதிவாளராக நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டு பதவிக்காலம் முடிந்த நிலையில், அவரை தற்போது பொறுப்பு பதிவாளராக மீண்டும் நியமித்துள்ளார்கள். உமாவுக்கு முன்பு பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றிய வெங்கடேசனே இப்போது மீண்டும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆக்கப்பட்டுள்ளார். இப்படி, குறிப்பிட்ட சிலர்தான், அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கியப் பொறுப்புகளைத் தங்களின் 'சிறப்புத் திறமைகள்' மூலம் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில், அதிரடி நடவடிக்கை எடுத்தால்தான் பல்கலைக்கழகம் உருப்படும்'' என்றார்.

Sponsored


Sponsored


சொத்துகளைப் பறிமுதல் செய்க!

அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சிலரிடம் பேசினோம். ''துணைவேந்தர் பதவியைப் பணம் கொடுத்து கைப்பற்றுவதே இவ்வளவு பிரச்னைகளுக்கும் மூல காரணம். துணைவேந்தராகப் பொறுப்பேற்பவர், தான் சம்பாதிப்பதற்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடம் பல வகையில் கையை நீட்டுவதுடன், தகுதி இல்லாதவர்களுக்கு உயர் பதவியை வழங்கி, அவர்களையும் இடைத்தரகர்களாக மாற்றிவிடுகின்றனர். இதனால், துணைவேந்தரும் அவரால் பதவி பெற்றவர்களும் எங்கெல்லாம் பணம் பார்க்க முடியுமோ, அங்கெல்லாம் பணம் பார்த்துவிடுகின்றனர். இதில் தேர்வுத்துறையும் தப்பவில்லை. துணைவேந்தருக்கு பங்கு கொடுப்பவர்கள், அவர்களுக்கு வேண்டிய தொகையையும் சம்பாதித்துக்கொள்கிறார்கள். தற்போது ஒன்றிரண்டு பேரை மட்டும் பணியிடை நீக்கம் செய்துவிட்டால் மட்டும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைத்துவிட முடியுமா. கடந்த 10 ஆண்டுகளாகத் துணைவேந்தர்களாகப் பதவி வகித்தவர்கள், பதிவாளர்கள், தேர்வுக்கட்டுப்பாட்டு துறையில் பணியாற்றியவர்கள் என அனைவரையும் விசாரிக்க வேண்டும். அப்போதுதான், பல மர்ம முடிச்சுகள் அவிழும். இந்தக் கறுப்பு ஆடுகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்கள் சட்டவிரோதமாகச் சேர்த்த சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். மறுமதிப்பீடு முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், இனியாவது உயர் கல்வித்துறை உஷாராக வேண்டும். 

வசூல், பாலியல் சீண்டல்கள்:

தவிர, தேர்வுத்துறையைத் தாண்டி, பல்கலைக்கழகத்தின் மற்ற துறைகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. செமஸ்டர் தேர்வுகளில் இன்டர்னல் மதிப்பெண் போடுவதற்கும், ஆராய்ச்சிப் படிப்புகளை மாணவர்கள் முடிக்கவும் சில பேராசிரியர்கள் செய்யும் பாலியல் சீண்டல்கள், கட்டாயப் பண வசூல் உள்ளிட்டவை குறித்து ஏராளமான புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும் அவற்றின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பதிவாளர் கணேசன், உறுப்புக் கல்லூரிகள் ஒருங்கிணைப்பாளர் முத்தன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் ஆகிய மூன்று பேரையும் மீறி, அண்ணா பல்கலைக்கழகத்தில் எதையும் செய்துவிட முடியாது. கோட்டையில் இருக்கும் உயர் கல்வித்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு இந்த மூன்று பேர் என்ன சொல்கிறார்களோ, அதுதான் வேதவாக்கு. இவர்களை, முக்கியப் பொறுப்புகளில் வைத்துக்கொண்டு சி.பி.ஐ விசாரணை நடத்தினால்கூட எந்த முறைகேட்டையும் கண்டுபிடிக்க முடியாது'' என்றனர்.

பழிவாங்கல்:

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பேராசிரியர் ஜி.வி.உமா கூறுகையில், ''தேர்வு முறைகளில் வெளிப்படையான நடைமுறையை என்னுடைய காலத்தில் கொண்டு வந்தேன். அதற்கு மேல் அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றுள்ளேன். விடைத்தாள்களைத் திருத்தும் ஒவ்வோர் ஆசிரியரிடமும், 'கீ' அடிப்படையில் அவர்கள் போடும் மதிப்பெண்கள் குறித்து ஒப்புதல் சான்று பெறப்படுகிறது. கீழ்மட்ட அளவில் ஏதாவது ஒழுங்கீனம் நடந்தால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. ஒவ்வொரு தேர்வின்போதும், 64 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. இந்தத் தடவை, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த 3,02,380 பேரில் 73,733 மாணவர்கள் பாஸ் ஆகி இருக்கிறார்கள். 16,636 மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்ணையும் (50 மதிப்பெண்) விட, அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்கள். 10,000 ரூபாய் பெற்றுக்கொண்டு மதிப்பெண் போட்டோம் என்று கூறுவது பொய்யான குற்றச்சாட்டு. இதுகுறித்து, துணைவேந்தர் சூரப்பாவிடம் விளக்கம் சொல்லிவிட்டேன். ரிசல்ட் குறித்த சில புள்ளி விவரங்களை மட்டுமே லஞ்ச ஒழிப்பு போலீஸார் என் வீட்டிலிருந்து எடுத்தனர். வேறு எந்த ஆவணங்களையும் எடுக்கவில்லை'' என்றார். 

அரியர்ஸ் மாணவர்கள்:

துணைவேந்தர் சூரப்பா, ''அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள், குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வு எழுதும்போது, அவர்களின் பாடத்திட்டங்களே மாறிவிடுகிறது. எனவே, எப்படியாவது பாஸ் ஆகிவிட வேண்டும் என்று அலைகிறார்கள். இதற்கென அலையும் இடைத்தரகர்கள், பணத்தாசை காட்டி தங்கள் வலையில் விழவைத்து காரியங்களைச் சாதிக்கிறார்கள். இப்படி, பல்வேறு கோணங்களில் இந்தப் பிரச்னையை அலசி ஆராய்ந்து வருகிறோம். தமிழக அரசு, சிண்டிகேட் குழு என்று அனைவரும் எனக்கு ஆதரவு தர வேண்டும். மறுமதிப்பீடு புகாரில் சிக்கியுள்ளவர்களுக்கு மீண்டும் மறுகூட்டல் என்பது சிரமமானது. இனிமேல், இப்படி பிரச்னைவராமல் பார்த்துகொள்ளப்படும்'' என்று உறுதிபட கூறினார்.

சூத்திரதாரி விசு..!

அண்ணா பல்கலைக்கழத்தில் மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள்களை, ஓராண்டு கழித்து, 'பழைய பேப்பர்' என்று விற்பனை

செய்வார்கள். அந்தப் பேப்பர்களை எடுக்கும் வியாபாரியாக அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தவர் விசு என்கிற வீர விசுவாமித்திரன். பொருளாதாரத் தேவை மட்டுமல்ல, குறிப்பிட்ட அதிகாரியின் அந்தரங்கத் தேவை வரை அறிந்து வைத்துக்கொண்டு, அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்துகொடுத்து காரியம் சாதிப்பதில் கில்லாடி என்கிறார்கள். யாரை எந்தப் பொறுப்புக்குக் கொண்டு வர வேண்டும்? அதற்கு என்ன டீலிங் பேச வேண்டும் என்பதில் இவரே சூத்திரதாரி. அண்ணா பல்கலைக்கழகத் தற்காலிகப் பணியாளர்கள் நியமனம் தொடங்கி, டெண்டர்கள் வரை அனைத்தும் விசு கண் அசைவுக்கு கட்டுப்பட்டே நடக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 'கலர் கண்ணாடிகள்' என்ற படத்தையும் தயாரித்துள்ளார் வீர விசுவாமித்திரன் என்று கூடுதல் தகவலையும் சொல்கிறார்கள் பல்கலைக்கழக ஊழியர்கள். இந்த, வீர விசுவாமித்திரன் தயாரித்த, 'கலர் கண்ணாடிகள்' என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பதிவாளர் கணேசன் கலந்துகொண்டார். 

பதிவாளர் கணேசன்..!

`மார்ட்டின் ஜவஹர்' என்ற அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர், 8.6.2018 அன்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கும் துணைவேந்தர் சூரப்பாவுக்கும் எழுதியுள்ள புகார் கடிதத்தில், ``கல்லூரிகளில் டீன் நியமனத்தில் பதிவாளர் கணேசன், பேராசிரியர் முத்தன், ஓய்வுபெற்ற பேராசிரியர் குமாரவேல் ஆகியோர் இணைந்து ரூ.5 லட்சம் வீதம் கொள்ளை அடித்துள்ளனர். தனியார் கல்லூரிகள் அங்கீகாரம், புதிய பாடங்களை அனுமதித்தல், கூடுதல் மாணவர்கள் சேர்க்கை என்று பல்வேறு நிலைகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கணேசன் மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார். இந்தப் பிரச்னையை சென்னை உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லவும் சிலர் திட்டமிட்டுள்ளனர். 

புகார் கொடுத்த மீனா

சிங்கிள் டிஜிட்டில் மார்க் எடுத்த மாணவர்கள், மறுமதிப்பீட்டில் 70, 90 என்று மதிப்பெண்கள் வாங்கி இருப்பதைக் குறிப்பிட்டு, சக மாணவர்களே லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் பல புகார்களை அனுப்பினர். இப்படி, அடுக்கடுக்கான புகார்கள் குவிந்ததால் லஞ்ச

ஒழிப்புத்துறையினர் விசாரணையில் இறங்கினர். அதே நேரத்தில் துணை வேந்தர் சூரப்பாவுக்கு வந்த புகார் அடிப்படையில் அவரும் ஒரு டீமை அமைத்து விசாரணையில் இறங்கினார். இந்த முறைகேடு, சிக்கலை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொண்ட, அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகார்கள் சிலரே பேராசிரியை உமா பற்றி லஞ்ச ஒழிப்புத்துறைக்கும், சூரப்பாவுக்கும் போட்டுக்கொடுத்து, அவரை மட்டும் சிக்க வைத்துள்ளனர். இவ்வளவு நாளும் ஒரே அணியில் இருந்து கொள்ளை அடித்தவர்கள், தங்களுக்கு ஆபத்து என்பதால் உமாவை காட்டிக்கொடுத்தார்கள். இப்படி, ஆதாரங்களைத் திரட்டிய பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி மீனா கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் புஷ்பலதா இந்த வழக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக முறைகேடுகள் அனைத்துக்கும் பதிவாளர் கணேசன்தான் காரணம் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கூட்டமைப்பு இன்று (10.8.2018) பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் துணை வேந்தர் சூரப்பா ஆகியோருக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அதில், ``அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு மறுமதிப்பீடு மதிப்பெண் வழங்குவதில் நடைபெற்ற அனைத்து முறைகேடுகளுக்கும் பதிவாளர் கணேசன்தான் முக்கியக் காரணம், எனவே, அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளனர்.

சூடு பிடிக்கத்தொடங்கி இருக்கிறது அண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீடு முறைகேடு வழக்கு!



Trending Articles

Sponsored