ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு - விசாரணை அதிகாரியாகக் கண்ணம்மாள் நியமனம்!Sponsoredஅமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர் மீது மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘ராஜேந்திர பாலாஜி, ராஜபாளையம் அருகே தேவதானத்தில் ரூ.74 லட்சத்துக்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தின் அசல் மதிப்பு ரூ.6 கோடி. தவிர திருத்தங்கலில் 2 வீட்டுமனைகளும் நிலமும் வாங்கியுள்ளார். தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து இப்படி வருமானத்துக்கு அதிகமாகப் பல கோடி ரூபாய்க்குச் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ள இவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறி இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். 

Sponsored


இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும் எஸ்.பி அந்தஸ்துக்கு குறையாத ஐ.பி.எஸ் அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்தி அதன் விவரங்களை சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி இன்று வழக்கு விவரங்களைத் தமிழக அரசு சீலிட்ட கவரில் தாக்கல் செய்தது. அப்போது வாதாடிய தமிழக அரசின் வழக்கறிஞர், ``இந்த வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார். பல சாட்சிகளை ஏற்கெனவே இவ்வழக்கில் விசாரித்துள்ளனர். மேலும், விசாரிக்க வேண்டியுள்ளதால் கூடுதல் அவகாசம் வேண்டும்" எனத் தெரிவித்தார். கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அக்டோபர் 8-ம் தேதி வழக்கு விசாரணை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர். 

Sponsored
Trending Articles

Sponsored